Tamil Nadu News Updates: இந்தியா முழுவதும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 12-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 132வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல் ரூ91.43-க்கும் விற்பனையாகிறது.
கொரோனா அப்டேட்
உலகளவில் இதுவரை 46.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 39.47 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 60.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கியவை
எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் 11 கிலோ தங்கம், 118.5 கிலோ வெள்ளி, கணக்கில் வராத ரூ84 லட்சம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தகவல். கிரிப்டோ கரன்சியில் ரூ34 லட்சம் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன.
உக்ரைன் போரில் 97 குழந்தைகள் பலி
உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவை புறக்கணித்தால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும். ரஷ்யாவிற்கு எதிரான வழக்கில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளோம் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்
லடாக்கில் மாலை 7.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவாகியுள்ளது
செர்னிஹிவில் ரொட்டிக்காக வரிசையில் நின்ற 10 பேரை ரஷ்யப் படைகள் சுட்டுக் கொன்றதாக கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. “இதுபோன்ற கொடூரமான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். உக்ரைனில் நடக்கும் எந்தவொரு அட்டூழியக் குற்றங்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான அனைத்து விருப்பங்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம், ”என்றும் அமெரிக்க தூதரகம் கூறியது.
டெல்லியில், பிரதமர் மோடியை இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே சந்தித்து பேசினார். அப்போது இலங்கை பொருளாதாரத்திற்கு இந்தியா அளித்த ஆதரவுக்கு பசில் ராஜபக்சே பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவித்து, அமெரிக்க காங்கிரஸில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உரையாற்றினார். மேலும், உக்ரைனின் நிலத்தின் மீது மட்டுமல்ல, சுதந்திரமாக வாழும் உரிமைக்கு எதிராகவும் ரஷ்யா போரிட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்
பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் குரலில் உருவாகியுள்ள 'ஜாலி ஓ ஜிம்கானா' என்ற பாடல் மார்ச் 19ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரவிச்சந்திரனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு – இரு அவைகளும் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி: “மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை நன்கு அறிந்த பின்னரே விமர்சிக்க வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே மின்வாரிய திட்டங்களுக்கு வைப்புத்தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி 24 மணி நேரத்தில் தெளிவுப்படுத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
நெல்லை என்கவுன்ட்டர் தொடர்பாக களக்காடு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்செய்தபின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் மண்டல ஐ.ஜி அன்பு தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் தங்கள் கல்வியை இந்தியாவிலேயே தொடர நடவடிக்கை தேவை என்றும் மாணவர்களின் கல்வி விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மாநிலம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மயிலாடுதுறை சீர்காழி அருகே கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. 4 சிலைகள் காணாமல் போன வழக்கில் குருக்கள் சூர்யமூர்த்தி கைது செய்ப்பட்டுள்ள நிலையில், சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்கும் முயற்சியில் கருவறையில் பதுக்கி வைத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் விழா நான்கு மாட வீதிகளில் உலா வந்த 63 நாயன்மார்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனு குறித்து சி.பி.ஐ. தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 30ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சை இடையே இரட்டை ரயில்பாதை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
மெட்ரோ ரயில்கள் நாளை முதல் காலை 5 மணி முதல் இரவு 11 வரை இயங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நெரிசல் மிகு நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை, அண்ணாநகரில் தனியார் வங்கி மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டுவரும் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
“உக்ரைனுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப் போவதில்லை” என்று ஹங்கேரி பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஹிந்தியில் பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். நான் ஆங்கிலத்தில் தான் கேள்வி கேட்டேன். உங்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியும் என்பதால் நீங்கள் ஆங்கிலத்திலேயே எனக்கு பதில் கூறுங்கள். எனக்கு ஹிந்தி தெரியாது என்றார். இதையடுத்து, சகோதரியை மதிப்பதாக கூறிய அமைச்சர் கோயல், ஆங்கிலத்தில் பதிலளித்தார்.
விருத்தாசலம் அருகே பங்குனி உத்திரத் திருவிழா நடத்த அனுமதி வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன் தமிழர் நலனுக்காகவும், தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கும் அதிமுக தொடர்ந்து பாடுபடும் என ஈபிஎஸ் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் கலான் கிராமத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
“தி காஷ்மீர்ஃபைல்ஸ் படத்தை தடை செய்ய வேண்டும்” என்று அஸ்ஸாம் எம்.பி. பக்ருதின் அஜ்மல் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரவுடி நீராவி முருகன் தாக்கியதில் உதவி ஆய்வாளர் உள்பட 4 காவலர்கள் காயம். இதையடுத்து, தற்காப்புக்காக என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக களக்காடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நெல்லை எஸ்.பி. சரவணன் தெரிவித்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில், அவரது கோரிக்கையை ஏற்று மஞ்சள் நிற டர்பன் உடன் கட்சியினர் குவிந்தனர். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் நாளை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடைபெறவுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில்’ இந்தியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய இந்திய அணி 36.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து அணி’ 31.2 ஓவர்களில் 135 ரன்கள் இலக்கை எட்டி வெற்றிபெற்றது.
தேர்தலில் சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க வேண்டும் என மக்களவையில் மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார்!
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் வழங்கப்பட்டால் கூடுதல் செலவை ஏற்றுக்கொள்வது யார்? என மக்களவையில் திமுக எம்பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, முழு செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பதில் அளித்தார்.
சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலையானது தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்க உத்தரவிட கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவில், விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சோலார் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனம் மற்றும் பவர் டிரேடிங் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன், மின்சாரம் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
நெல்லை நாங்குநேரியில், பிரபல ரவுடி நீராவி முருகன்’ திண்டுக்கல் தனிப்படை போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். நீராவி முருகன் மீது 3 கொலை உள்பட 38 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் ஜெயக்குமாருடன் கைதான, அதிமுக பிரமுகர்கள் காளிராஜ், டில்லி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான, வட்டிக் குறைப்பை மறுபரிசீலனை செய்வது குறித்து, மத்திய அரசின் கவனத்திற்கு நேரடியாக எடுத்துச் சென்று தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ வலியுறுத்தி உள்ளார்.
நீட் விலக்கு மசோதாவை 2வது முறை திருப்பி அனுப்ப முடியாது. எனவே, மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து நாட்டிற்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், ஆஷிஷ் மிஸ்ரா, உத்தர பிரதேச அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோயில்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலர் குழு அமைக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசாணையை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்க உச்சநீதிமன்றம் அனுமதி. தமிழக அரசாணையை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம். புதுப்பித்தலுக்கு 18 நிபந்தனைகளுடன் மாநில அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. ரூ139 கோடி செலவில் சேப்பாக்கம் மைதானம் 62 ஆயிரம் சதுர அடியிலிருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ321 குறைந்து ரூ38,336க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ39 குறைந்து ரூ4,792க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேர்தல் தோல்வி எதிரொலியாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார். உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில தலைவர்கள் ராஜினாமா செய்ய அக்கட்சி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது
மகளின் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக, ஸ்மிருதி மந்தனா 35 ரன்களும், ரிச்சா கோஷ் 33 ரன்னும் எடுத்தனர்.
இந்தியாவில் நேற்று 2,568 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,876ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,884 பேர் குணமடைந்த நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ ஆகியோர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிப்பதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க, கனடா நாட்டின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களும் ரஷ்யா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் பகவந்த் மான். அவர் சொந்த ஊரில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
2022ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி, ரஷ்யாவில் நடைபெறவிருந்த நிலையில் இந்தியாவின் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை போட்டிகளை நடத்த திட்டம். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறுவது பெருமகிழ்ச்சி, தமிழ்நாடு பெருமை கொள்ளும் தருணது இது என ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.