Tamil Nadu News Updates: நாடு முழுவதும் 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. சிறுவர்களுக்கு விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்
புதுச்சேரியில் 1-9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி
புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி. கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
இன்றைய விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
குரூப் 4 – விண்ணப்பிக்க கடைசி நாள்
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவு. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று இரவு 12 மணி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
ஐபிஎல்: குஜராத் அணி வெற்றி
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
அதிமுக சார்பில் சென்னை மைலாப்பூரில் இப்தார் நோம்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்கள் மத இன வேறுபாடுகளை கடந்து மத நல்லிணக்கத்துடன் இந்தியாவிற்கே ஒரு உதாரணமாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.
சென்னை, கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள மனிதநேயம் நாடு முழுவதும் ஒரு மாடலாக உருவாகியுள்ளது. இதுவும் ஒருவகையில் திராவிட மாடல் தான். திராவிட மாடல் குறித்து சொன்னால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம் வருகிறது.
அனைவருக்கும் எல்லாம் சேர வேண்டும் என்பது தான் திமுகவின் லட்சியம், கொள்கை. ரம்ஜான் பண்டிகையும் ஒரு திராவிட மாடல்தான், கடந்த 2006ல் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சி தான் திமுக ஆட்சி என முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார் என்று தெரிவித்துள்ளார்
ரம்ஜானை முன்னிட்டு, அதிமுக சார்பில் சென்னை மயிலாப்பூரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இஃப்தார் விருந்து நடத்தப்பட்டது.
தனியார் சூப்பர் மார்கெட்டில் புகழேந்தி என்ற மேலாளரிடம் சம்பளத்தை வாங்கி தரக்கோரிய போது அவர் தன்னாள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த முன்னாள் ஊழியர்கள் சூப்பபு மார்க்கெட்டில் புகுந்து, மேலாளரை தாக்கியுள்ளனர்
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தேதி ஜூன் 26ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், இந்த தேர்வு ஜூலை 2ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் 2,423 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் சொத்துக் கணக்குகளையும் முடக்கி போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 44.9 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிகிட் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக பேரவையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறைவேறியது. முதல்வரை வேந்தராக கொண்டு புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா நிறைவேறியது.
பிரபல நடிகர் சலீம் கவுஸ் (70) இன்று காலமானார். தமிழில் சின்னக் கவுண்டர், திருடா திருடா, வேட்டைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் மொத்தம் 7,490 பேர் உள்ளனர். அதில் இதுவரை 6,650 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில், 171 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஐடியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; சிலருக்கு டைஃபாய்டு காய்ச்சல், ஒருவருக்கு அம்மை நோய் ஒருவருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு: “தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும். சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை மட்டும் ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட திருமண சான்றுகளை இணையம் வழியாக விண்ணப்பித்து திருத்தம் செய்யும் வசதி ரூ.60 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும். அவசர ஆவண பதிவிற்காக, பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படுகிறது என்றும் தட்கல் முறையில் ரூ.5 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
அமித்ஷாவை வரவேற்று சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்களிடமே அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என்று புதுவை நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் நாளைக்குள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள நரம்பியல் பிரிவில் மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சரியாக பராமரிக்காத காரணத்தால்தான், நரம்பியல் கட்டடத்தில் விபத்து ஏற்பட்டது. அரசின் துரித நடவடிக்கையால் 128 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. ரூ. 65 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் – சட்டப் பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிக அளவில் உயர்த்தியது மத்திய அரசுதான். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி 7 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு 200% உயர்த்தியது. திமுக அரசு ஆட்சியில் இருந்தபோதெல்லாம் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் பெட்ரோல் மீதான வரியை ரூ. 3 குறைத்தார் – பிரதமரின் குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மக்களை கஷ்டப்படுத்துகிறது மத்திய அரசு. பெட்ரோல் மீதான வாட் வரி குறித்த பிரதமரின் பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போலானது. 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும்- சட்டப் பேரவையில் பிரதமர் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில்.
தஞ்சாவூர் தேர் விபத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது என சட்டப் பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக சஜீவனிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அவருடைய சகோதரரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு. 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!
மத்திய அரசின் வரிகள் அதிகமாக இருக்கும்போது, மாநில அரசு வரிகளை மேலும் குறைப்பது நியாயமா? சாத்தியமா? மத்திய அரசு செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களை நீக்கி, 2014ல் இருந்த விகிதங்களுக்குத் திரும்ப வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 2563 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 39 பேர் உயிரிழந்துள்ளனர். 46 நாள்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னை பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, 2 ஆவது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காற்றின் வேகத்தால் குப்பைக்கிடங்களில் தீயை அணைப்பதில் சிக்கல்
ஜப்பானில் அடுத்த மாதம் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி. தென்கொரியாவில் மே 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பைடனும், மோடியும் சந்தித்து பேசவுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1ம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிப்பு
சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதி
ஜிஎஸ்டி வரியாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ78,704 கோடி நிலுவை தொகை தர வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் தகவல்