Tamil Nadu News Updates: ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரில் இன்று முதல் மார்ச் 21ம் தேதி வரை போராட்டங்கள், கூட்டங்கள், கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 131வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல் ரூ91.43-க்கும் விற்பனையாகிறது.
கொரோனா அப்டேட்
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,92,50,107 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 39,27,90,887ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,66,775 ஆகவும் உள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நீதிமன்ற காவல்
தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அதன் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணாவை, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
உக்ரைனில் இருந்து சுமார் 23 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 18 நாடுகளை சேர்ந்தவர்களையும் மீட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு நடந்துள்ளதாகவும், இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். மேலும், முதல்வரை எதிர்ப்பவர்கள், தேர்தலில் சிறப்பாக பணியாற்றுபவர்கள் மீது ரெய்டு நடவடிக்கையா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்
மே மாதம் நடைபெற இருந்த பட்டய கணக்காளர் தேர்வுகள் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் பள்ளி தேர்வுகள் நடைபெறுவதால் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 59 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.15 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராத ரூ.84 லட்சம் மற்றும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், செல்போன்கள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கிரிப்டோகரன்சிகளில் எஸ்.பி.வேலுமணி ரூ.34 லட்சம் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 9வது வார்டில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 2019ல் நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் முறைகேடாக வெற்றி பெற்றதாக திமுக வேட்பாளர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளது
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என 5 மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஜாமின் கிடைக்க உறுதுணையாக இருந்தவர்களுக்கு அவருடைய தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்: சென்னையில் ‘டேர்’ஆபரேஷன் மூலம் ரவுடிகள் ஒழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
நீதிமன்ற அவமதிப்பு வழகில் ஆஜராகாத சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலருக்கு அன்சுல் மிஷ்ராவுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, திட்டம் கைவிடப்பட்டதால் மீண்டும் குடியிருப்பு பகுதியாக மாற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது. தொழில்நுட்ப குழு அளித்த பரிந்துரை மீது 4 மாதங்களில் முடிவெடுக்க சி.எம்.டி.ஏ.-விற்கு உத்தரவிட்டும், அமல்படுத்தப்படவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் அன்சுல் மிஸ்ராவிற்கு சென்னை ஐகோர்ட் வாரண்ட் பிறப்பித்தது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை தொடரும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ: “ரஷ்யா உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை நாடாக செயல்படாமல் ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றது.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1990-ம் ஆண்டுகளில் காஷ்மீரில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பான உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல் என்ற திரைப்படம் கடந்த 11-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உண்மையை வெளிக்கொண்டுவர நினைப்பவர்களுக்கு ஆதரவாக இருக்க துணை நிற்க வேண்டும் என்று பாஜக எம்பிக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்
ஹிஜாப் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் மீதான கர்நாடக அரசின் தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டு, அதை அமல்படுத்த மாநில அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். சமூகத்தில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டும்
உயர் நீதிமன்ற உத்தரவை அனைத்து மாணவர்களும் பின்பற்ற வேண்டும் மற்றும் வகுப்புகள் அல்லது தேர்வுகளை புறக்கணிக்கக்கூடாது. நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படாமல், சட்டம் ஒழுங்கை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்,'' என்று கூறியுள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் மீதான கர்நாடக அரசின் தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஹிஜாபைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும், அது ஆடையின் ஒரு பொருளைப் பற்றியது அல்ல, பெண்கள் எப்படி ஆடை அணிய விரும்புகிறாள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் பெண்ணின் உரிமையைப் பற்றியது. இந்த அடிப்படை உரிமையை நீதிமன்றம் நிலைநாட்டவில்லை என்பது கேலிக்கூத்தாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முஃப்தி தனது ட்விட்ட பதிவில்,
“கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஹிஜாப் தடையை நிலைநிறுத்துவதற்கான முடிவு ஆழ்ந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒருபுறம், நாங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதைப் பற்றி பேசுகிறோம், ஆனால் ஒரு எளிய தேர்வுக்கான உரிமையை மறுக்கிறீகள். இது மதத்தைப் பற்றியது மட்டுமல்ல, தேர்வு செய்வதற்கான சுதந்திரம், என்று கூறியுள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் மீதான கர்நாடக அரசின் தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் இதற்கு முன்பு கல்வி நிறுவனங்களில் தாவணி அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதிக்க கோரி முஸ்லீம் மாணவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் இன்றியமையாத பழக்கம் அல்ல என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்களுக்கு டீ , வடை, கேசரி என உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் தலையீட்டின் காரணமாகவே மாணவர்களை மீட்பது சாத்தியமானது இந்தியர்கள் மட்டுமன்றி, பிற வெளிநாட்டினரையும் உக்ரைனில் இருந்து மீட்டுள்ளோம். போர் பதற்றம் தொடங்கியபோதே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன 'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் 90 விமானங்கள் இயக்கப்பட்டன இந்தியர்களை மீட்கும் பணியில் 14 போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன என்று உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
உக்ரைனில் இருந்து 22 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். கடும் சவால்களுக்கு மத்தியில் மாணவர்களை தாயகம் அழைத்து வந்துள்ளோம் என்று மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், உக்ரைனின் குடியிறுப்பு பகுதியில் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக பயங்கரவாதிகள் ஊடுருவல் ஜம்மு காஷ்மீரில் நிகழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 31 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெறும் திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
தெற்கு ரயில்வேக்கு ரூ59 கோடி மட்டும், வடக்கு ரயில்வேக்கு ரூ13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. One Nation என்று எப்போதும் பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக் கூடாது என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.
நீதிக்கான எங்கள் போராட்டத்திற்கு துணை நிற்கும் முதல்வருக்கு நன்றி என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த கோச்கள் நீக்கப்பட்டது என்று மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும், சென்னையில் மாநகர பேருந்துகளில் அனைவருக்கும் இலவச பயண வேண்டும் என்று பாமக நிழல் பட்ஜெட் வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உயிரிழப்புக்கும் கொரோனா இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீட் விலக்கு உள்பட நிலுவையில் உள்ள மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கடந்த 24 மாதங்களாக கிரிவலம் செல்ல இருந்த தடை நீக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னணி நிர்வாகிகளை அரசியல் ரீதியாக திமுக பழிவாங்கத் துடிக்கிறது என ஓபிஎஸ், ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு!
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பவில்லை. தமிழக ஆளுநர் அரசியலமைப்பின் படி நடக்கவில்லை என்றால் மாற்றப்பட வேண்டும் என டி.ஆர்.பாலு கடுமையாக சாடியுள்ளார்.
அம்ருத் 2.0 திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை போதுமானதாக இல்லை. மத்திய அரசு இது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் பேசினார்!
ரூ. 1,588 கோடி முதலீட்டில் சாம்சங் நிறுவனத்துடன் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்ட ஒப்பந்தம்’ மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் உள்ளூர் மக்கள், பெண்கள் என 600 பேருக்கு வேலைவாய்ப்பு. கருணாநிதியின் சாதனைகளை திமுக தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது -மு.க.ஸ்டாலின்!
கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை பராமரிப்பு பணியின் போது, தவறுதலாக சீறிப்பாய்ந்தது. பாகிஸ்தானின் மியான்கன்னு நகரில் ஏவுகணை விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை; விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாநிலங்களவையி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார்.
சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில், புதிதாக அமைக்கப்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தை ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில்’ பேரறிஞர் அண்ணா விருதை நாஞ்சில் சம்பத்துக்கும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருதை மனுஷ்யபுத்திரனுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அடிப்படை அவசியம் கிடையாது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என தீர்ப்பளித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், கர்நாடக அரசின் தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
தமிழக அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது; ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ400 குறைந்து ரூ38ஆயிரத்து 552க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ50 குறைந்து ரூ4819க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 5,280 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சுமார் 10 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த 39 மீனவர்களை இடிந்தகரை மீனவர்கள் சிறைப்பிடித்தனர். தூண்டில் போட்டு மீன்பிடிப்பதால் வலைகள் அறுந்து விடுவதாக கூறி 7 படகுகளுடன் 39 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 97 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 33,917 பேர் தொற்று பாதிப்பில் சிகிச்சையில் உள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் தொடங்கியது. ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12 மணியளவில் சந்திக்க உள்ளார். நீட் தேர்வு விலக்கு தீர்மானம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.