Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
IPL 2022: மும்மை அணி வெற்றி!
ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சென்னை 15.5 ஓவரில் 97 ரன்களுக்கு சுருண்டது. 98 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 14.5 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
Tamil news live update
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு!
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே முன்னிலையில், இலங்கையின் 26வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இவர் ஏற்கனவே 5 முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்தவர்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் சவாலை ஏற்றுக்கொண்டு உள்ளேன்; அதை நிச்சயம் நிறைவேற்றுவேன். இந்தியா உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும். புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே!
இலங்கை ஊரடங்கில் தளர்வு!
இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் தளர்வு விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும். இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
வட கொரியாவில் கொரோனா தொற்றால் முதல் உயிரிழப்பு!
வட கொரியாவில் கொரோனா தொற்றால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்தாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர் ‘ஒமிக்ரான்’ வகை மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர் என வட கொரியா ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னர் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 11 வகுப்பு படித்துவந்த மாணவர் உயிரிழந்தார். 2 பேர் காயம் அடைந்துள்ளனர். உணவு பொருட்களை எடுத்துச் செல்லும்போது லிஃப்டின் இரும்பு கயிறு அறுந்து ஏற்பட்ட விபத்தில் 11ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஸயத் அல் நஹ்யான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, நாளை ஒருநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், நாளை ஒருநாள் தேசியக் கொடிகள் அறைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவித்துள்ளது.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்ந்து ரு4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் நடந்துவரும் காங்கிரஸ் கட்சியின்‘சிந்தனை அமர்வு’ மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேச்சு: “காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டியது காலத்தின் தேவை. நம்முடைய செயல்பாட்டு முறையையும் மாற்ற வேண்டியுள்ளது. தனிப்பட்ட லட்சியங்களைத் தாண்டி நிர்வாகிகள் கட்சி அமைப்பை வைத்திருக்க வேண்டும்; கட்சி நமக்கு நிறைய செய்துள்ளது. இது திருப்பி செலுத்த வேண்டிய நேரம்.
காந்தியை கொன்றவர்களை கொண்டாடுவது நேரு போன்ற தலைவர்களின் வரலாற்றை அழிப்பது உள்ளிட்ட செயல்களில்தன் பாஜக ஈடுபட்டுவருகிறது. முக்கியமான நேரத்தில் பிரதமர் மோடி மௌனமாகிவிடுகிறார். பிரதமர் மோடி அடிக்கடி பயன்படுத்தும் குறைந்தபட்ச அரசு, அதிபட்ச ஆட்சி என்ற முழக்கத்தின் உண்மையான அர்த்தம் சிறுபான்மையினரை கொடூரமாக நடத்துவதும் அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதும்தான்” என்று கூறினார்.
இலங்கையில் அத்தியாவசிய சேவைகள், நிவாரணப் பொருட்களை முறையாக வழங்கப்படுவதை ஆய்வு செய்ய அவசர குழு அமைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு: “நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. ஆனால், இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். எந்த மொழியையும் கற்கத் தயாராக இருக்கிறோம். அது 3வது மொழியாக மட்டுமே இருக்க வேண்டும். உலக மக்களுடன் உரையாட ஆங்கிலமும் எங்களுக்குள் உரையாட தமிழும் இருக்கும்போது இந்தி எதற்கு? இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பலர் சொல்கின்றனர். ஆனால், இந்தி தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் பானிபூரி வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர்.” என்று கூறினார்.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா கூட்டாக செய்தியாளர் சந்திப்பு: “சென்னை மாநகருக்கு மட்டும் மருத்துவ கட்டமைப்புக்கு ரூ.588 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; மாநகராட்சி வார்டுகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப, நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்” என்று அமைசர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இந்த நிலையில், வரும் 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
“தேர்வுப் பணியில் இல்லாத ஆசிரியர்களுக்கு மே 20ஆம் தேதி முதல் கோடை விடுமுறை என்றும், வெளிநாடுகளுக்கு செல்ல தடையில்லா சான்று பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பணிக்கு வருவதிலிருந்து விலக்கு என்றும் பள்ளிக் கல்வித்துறை அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சென்னை,மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராய் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் சேக் கலீபா பின் சயத் அல் நகியான், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
“இந்தியாவில் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. பாஜக அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்தியாவுடைய பன்முகத் தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது” என்று சோனியா காந்தி பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருச்செங்கோடுக்கு துக்க நிகழ்வுக்கு சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ராணுவ தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து ரஷியா மீது மேலைநாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதையடுத்து உலக அளவில் எண்ணெய், எரிவாயு, உரங்கள், உணவு ஆகியவற்றின் வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார விவகாரங்கள் குறித்த கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புதின், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளால் பல நாடுகள் உணவுத்தட்டுப்பாடு அபாயத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இந்த பொருளாதார தடைகளால் ரஷியாவை விட மேலைநாடுகளுக்கே பாதிப்பு அதிகம் என அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா ஆகியோர் அழைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களிலும் நாளை மாதாந்திர மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி, தொலைபேசி எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை கோருதல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும் என்றும், ரேசன் கடைகளுக்கு வர முடியாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனறும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் இரு மாணவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் காயம் அடைந்த அன்புராஜ் என்ற முதலாம் ஆண்டு மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3ஆம் ஆண்டு மாணவர் நவீன் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
மயிலாடுதுறை மாவட்டம் புளியந்துறை ஊராட்சி செயலர் சண்முகம் என்பவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் லலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊராட்சி செயலர் சண்முகம் ஊராட்சி கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை முறையாக பராமரிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்டிருந்த 4 வாரம் சிறைத் தண்டனை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தண்டனைக்கு பதிலாக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ரூ.1 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சாங்லாங் பகுதியிலிருந்து 222 கி.மீ. தெற்கே 4.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு சேதமும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, மன்னார் வளைகுடா, இலங்கை கடற்கரை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்கள் பெற அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பின்படி மீண்டும் பழைய கட்டணங்களே வசூலிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தகவல் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை மாநில மொழிகள் வளர வேண்டும் என்பதே விருப்பம் என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழ் மிகவும் பழமையான மொழி. இலக்கியச் செழுமை மிக்க மொழி. நாட்டின் மிகவும் முக்கியமான மொழி தமிழ் மொழி என்று கூறியுள்ள அவர், இந்தியாவின் ஒவ்வொரு மொழியையும் ஊக்குவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி தொடர்ந்து நடத்த வேண்டும். விசாரணை குறித்த நிலை அறிக்கையை 4 மாதங்களுக்கு ஒருமுறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் விசாரணையை சிபிசிஐடி டிஐஜி கண்காணிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை நெருக்கடிக்கு இடையே புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே உடன் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்கலே சந்தித்து பேசியுள்ளார்.
மருத்துவ மாணவர்கள் தாக்கல் செய்த பொதுநல மனு மீது நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*நீட் முதுநிலை தேர்வை தள்ளிவைத்தால் உள்ளுறை மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்று மத்திய அரசு வாதம் செய்துள்ளது.
சென்னை, குரோம்பேட்டையில் ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சுதாரித்துக்கொண்ட தம்பதி பாதுகாப்பாக வெளியேறியதால் உயிர் தப்பினர்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தது அதிமுக அரசு முதல்வர் ஸ்டாலினே நினைத்தாலும் வேளாண்மைக்கு எதிரான எந்த தொழிலையும் அனுமதிக்க முடியாது என்று சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்
இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை. தமிழக மாணவர்கள் எந்த மொழியையும் கற்க தயாராக உள்ளனர். தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை ஆளுநருக்கு தெரியப்படுத்தவே இதை கூறுகிறேன். நாங்கள் இந்தி உட்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் ₨35.82 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
செங்கல்பட்டு, மேடவாக்கம் பகுதியில், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ. 95.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாம்பரம் – வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக 70% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய்யாக தகவல் என ஈபிஎஸ் விமர்சித்துள்ளார்.
இலவச பேருந்து திட்டத்தால் பெண்களுக்கு சராசரியாக மாதந்தோறும் ரூ. 600 முதல் ரூ.1,200 வரை மிச்சமாகிறது. வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து நன்மை செய்யும் ஆட்சியாக திமுக ஆட்சி- தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,112க்கும், கிராமுக்கு ரூ. 4,764க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (மே.14) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, மாதாந்திர ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்றுடன் தேர்வுகள் முடியும் நிலையில், நாளை முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. ஜூன் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,841 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 3,295 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் 2024 மக்களவை தேர்தல், காங்கிரஸ் உள்கட்சி தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட 430 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
சேலத்தில் ஏற்காடு கோடை விழா மே 26ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும். ஏற்காடு கோடை விழாவிற்காக சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வரும் 17ஆம் தேதி விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு, மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் – வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
கடும் விலைவாசி உயர்வு காரணமாக, ஏப்ரல் மாதத்தில், நாட்டின் பணவீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசாமி கோவில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.