Tamil Nadu News Updates: சென்னை மாநகராட்சிக்கு நிலுவையிலுள்ள சொத்து வரியில் கடந்த 15 நாளில் ரூ40 கோடி வசூலிப்பு.கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை ரூ220.64 கோடி சொத்துவரி வசூல் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
ஐபிஎல் நிறைவு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி
அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தி நடிகர் ரன்வீர் சிங், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். கோப்பை வெல்லும் முனைப்பில் குஜராத் மற்றும் ராஜாஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் அப்டேட்
சென்னையில் 7வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.
மகாராஷ்டிராவில் ஒமிக்ரானின் துணை வகை தொற்று பாதிப்பு
மகாராஷ்டிராவில் முதல்முறையாக ஒமிக்ரானின் துணை வகை தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 7 பேரில் இருவர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என தகவல்.
மகளிர் டி20 – சூப்பர்நோவாஸ் அணி சாம்பியன்
மகளிர் டி20 சேலஞ்ச் இறுதிப்போட்டியில் வெலாசிட்டி அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர்நோவாஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெலாசிட்டி 20 ஓவர்களில் 161 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை, ஆலந்தூரில் அமைச்சர் அன்பரசன் பேச்சு: “சாலைப் பணிகளை முடிக்காமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஒப்பந்ததாரர் பணி நிறுத்தப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ப. சிதம்பரம் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் தலைவருமான சுப்தீப் சிங் சித்து மூஸ் வாலா ஞாயிற்றுக்கிழமை மான்சா அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். ஜவஹர் கே கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் அவர் மீது குறைந்தது 10 முறை சுடப்பட்டதாகவும், அவர் மான்சாவில் உள்ள மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சித்து மூஸ் வாலாவின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட ஒரு நாள் கழித்து அவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளார். விஐபி கலாச்சாரத்தை முறியடிக்கும் பகவந்த் மான் அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று பாதுகாப்புப் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட 424 விஐபிக்களில் மூஸ் வாலாவும் ஒருவர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் கள்ள நோட்டுகளின் புழக்கம் இருமடங்காக அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்புக்குப் பின்பு, ரூ.500 கள்ளநோட்டுகள் அதிக அளவில் அச்சடிக்கப்பட்டுள்ளது. 2022 இல் ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 101.9% உயர்ந்து 79,669 ஆகவும் ரூ.2,000 கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 54% உயர்ந்து 13,604 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு: “வடமாநில தொழிலாளர்கள் மீது வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதை கண்டறிந்த பின்னரே பணி நியமனம் செய்ய வேண்டும். இது தொடர்பாக காவலன் செயலியில் உரிய வழிமுறைகள் உள்ளது. எந்த மாநிலத்தில் வசிப்பவராக இருந்தாலும் அவர்கள் மீதான தகவல்கள் குறித்து போலீசார் விசாரித்து அறிக்கை வழங்குவர்.” என்று தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் 22 பயணிகளுடன் மாயமான விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணம் செய்த விமானம் மாயமான நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் முழுமையான நிலை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்
ஆதார் தொடர்பான சுற்றறிக்கையை இந்திய தனித்துவ ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. ஆதார் அட்டையை எப்போதும் போல் பயன்படுத்தலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளது
சென்னை, தி.நகரில் உள்ள தனியார் வங்கியில் 100 வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.13 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பணப்பரிமாற்றம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளை தற்காலிகமாக முடக்கியது
நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர் ஜெகதீஷ் படத்திற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டி.ராஜேந்தரை மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
ஆதார் அட்டையின் நகலை யாரிடமும் வழங்க வேண்டாம், தவறாக பயன்படுத்தக்கூடும். கடைசி 4 எண்களை கொண்ட Masked ஆதாரை பயன்படுத்தலாம். பிரவுசிங் சென்டர்கள், பொது கணினியில் இ-ஆதாரை டவுன்லோட் செய்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 3 நாட்களுக்கு முன்பு சந்தித்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பகிர்ந்து என்னவொரு நட்பு என ட்வீட் செய்துள்ளார்.
விநாயகர், துர்க்கை அம்மன் உள்ளிட்ட கற்சிலைகள் ரூ.70 லட்சத்திற்கு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதாக, முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு – திண்டிவனம் இடையே உள்ள ஓலக்கூர் கிராமத்தில் 960 வருட தொன்மையான சிவன் கோவிலில் கடத்தல் எனவும், 50 வருடங்களுக்கு முன் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்ட சிலைகள் திருடப்பட்டதாகவும் பொன் மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். இதில் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார். ஆய்வின் போது விவசாயிகளை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கருத்துக்களை கேட்க உள்ளார்
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கேரளாவில் 3 நாட்கள் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
சினிமா நடிகர்கள் விளம்பரத்தில் நடிக்கிறார்கள் என்பதற்காக ஆன்லைன் ரம்மி யாரும் விளையாடாதீர்கள். இது உண்மையான ஆன்லைன் ரம்மி விளையாட்டு கிடையாது. ஆன்லைன் ரம்மி மோசடி.
செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கல்லூரியில் நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, பசுமை வழிச்சாலை இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு. பாமக புதிய தலைவராக தேர்வாகியுள்ள நிலையில் ஈபிஎஸ்-ஐ சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி
நேபாளத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேருடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பொகாராவில் இருந்து ஜோம்சாம் சென்ற விமானம் காலை 9.55 மணியளவில் தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தகவல்.
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 1.9 கிலோ தங்கம் பறிமுதல். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் நடத்திய சோதனையில் 3 பேர் பிடிபட்டனர்.
இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. ஆனாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு. பாமக புதிய தலைவராக தேர்வாகியுள்ள நிலையில் முதல்வரை சந்தித்து அன்புமணி வாழ்த்து பெற்றார்
இந்தியாவில் மேலும் 2,828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 17,087 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒன்று சேர உருவாக்கியது தான் திராவிட மாடல் ஆட்சி. முதல்வர் பொருத்தவரை நாத்திகர்கள், ஆத்திகர்கள் என்ற பிரிவு இல்லை. அவருக்கு அனைவரும் சமம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
இன்றிரவு 8 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியை பிரதமர் மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித்ஷா நேரில் காணவுள்ளதாக தகவல். குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா – வங்கதேசம் இடையே இன்று முதல் மீண்டும் பயணிகள் ரயில் சேவை; கொரோனா பரவலால் இரண்டாண்டுகளுக்கும் மேலாக சேவை நிறுத்தப்பட்டிருந்தது
சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் தெரு பெயரில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கும் பணி தொடக்கம். சென்னை 171வது வார்டு பகுதியில் அப்பாவோ கிராமணி 2 ஆவது தெரு தற்போது அப்பாவு(கி) தெரு என மாற்றம்
தமிழகத்தில் போதை பொருட்கள் இருக்க கூடாது என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணம். கடந்த ஆண்டில் ரூ6 கோடி மதிப்பிலான 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நீலகிரியில் கோடை விழா இன்றுடன் நிறைவடைகிறது. இறுதியாக பழக்கண்காட்சியுடன் கோடை விழா நிறைவுபெறுகிறது.
கோவை ஆனந்தஸ் உணவக குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் 2 ஆவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.