இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, விமானப்படை விமானம் மூலம் இலங்கையை விட்டு வெளியேறி, மாலத்தீவுகளில் தஞ்சமடைந்துள்ளார். இன்று கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு
சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், கழக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் அறிவிக்கப்பட்டனா். அத்துடன் பொதுக்குழுவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஓ. பன்னீர்செல்வம் நீக்கம்
அதிமுக பொதுக்குழுவில், அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்தை பொள்ளாச்சி ஜெயராமன் முன்மொழிந்தார். இந்த சிறப்புத் தீர்மானம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம்,ஜெ.சி.டி பிராபகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இலங்கையில் அடுத்த புதிய அதிபர் யார்?
இலங்கையில் கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ம் தேதி பதவி விலகினால், 20ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய அனைத்து கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இதனிடையே, இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதிபர் பதவிக்கு 113 எம்பிக்கள் ஆதரவு தேவை உள்ள நிலையில் சஜித்பிரேமதாசவின் கட்சியில் 50 எம்பிக்கள் உள்ளனர்.
இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் கைது
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக தாக்குதலில் ஈடுபட்டதாக கைதான இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக கட்சி அலுவலக மேனேஜர் மகாலிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ விருகை ரவி ஆகியோர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஓ.பி.எஸ் மனு
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அ.தி.மு.க பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருக்கிறது. இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை ஏற்கக் கூடாது, ஒப்புதல் அளிக்கக் கூடாது என ஓ.பி.எஸ் தரப்பினர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 111 என்ற இலக்கை 18.4 ஓவரில் அடித்து இந்திய அணி அசத்தியுள்ளது, துவக்க வீரர்களான ரோகித் 76 ரன்களும், தவான் 31 ரன்களுடன் அவுட்டாகமல் வெற்றியை தேடிதந்தனர்
தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 17ம் தேதி நடைபெற உள்ள NEET தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டு. ஹால்டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.
வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். வெப்பநிலை அதிகமாக இருந்தால் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படும். தேர்வு முடிந்த உடன் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மதியம் 1.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு தெரிவித்துள்ளார்
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ500 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செய்யாதுறை மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் சொந்தமான இடங்களில் ரூ500 கோடி வருமானத்தை மறைத்தது சோதனையில் தெரியவந்துள்ளது. போலி ரசீது ஆவணங்கள் மூலம் வருமானவரித்துறைக்கு கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி, வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளையும், மூலப்பொருட்களையும் வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட தடை மீன் வலை உற்பத்தி நிறுவன நிர்வாகி மகேஷுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மான நஷ்ட ஈடாக ரூ1 கோடி கோரியும், அவதூறு கருத்துக்களை வெளியிட தடை கோரியும் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழுஉடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்! என கூறியுள்ளார்
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன். என கூறியுள்ளார்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக விராட் கோலி இந்த போட்டியில் பங்கேற்கவில்லை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானத்தை அங்கீகரித்தது தொடர்பாக, உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய மனுக்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் விரைவில் இ.பி.எஸ் தரப்பு சமர்பிக்க உள்ளது
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் இந்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து மோதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜார்கண்ட், தியோகரில் உள்ள பாபா வைத்தியநாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், டெல்லியில், ஜூலை 17ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிடக்கோரியும், உண்மையான அதிமுக தாங்கள் தான் என்றும் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி அனுமதி அளித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் மாத கட்டண முறையில் பேருந்துகளுக்கு பாஸ் வழங்குவதில் 50 முறைதான் பயணிக்க வேண்டும் என கட்டுப்படுத்த கூடாது. எத்தனை முறை சுங்கச்சாவடிகள் கடந்து செல்கின்றதோ அதற்கு ஏற்றார் போல் மாதாந்திர சலுகை கட்டண பாஸ் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை புதன்கிழமை பதவி விலக உள்ள நிலையில், வருகிற 20ஆம் தேதி பாராளுமன்றத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்ய உள்ளதாக எதிர்கட்சியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு தள்ளிவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுவரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதியளித்துள்ளது.
சென்னை, ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு குடிசைகளை 4 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம், மீறி அகற்றவில்லையென்றால் சட்டம், ஒழுங்கை தமிழக அரசால் கையாள முடியவில்லை என்ற கருத்து தெரிவிக்க வேண்டியிருக்கும். அக்டோபர் வரை கால அவகாசம் வழங்க முடியாது.
ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற மத்திய துணை ராணுவப் படையின் உதவியை கோரலாம். உள்ளூர் அமைச்சர்கள் சென்று பார்வையிடுவதால் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆஜராக நேரிடும்” என்று நீதிமன்றம் திட்டவட்டமாக பேசியுள்ளது.
ஜார்க்கண்ட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சாலை திட்டங்கள், ரூ. 3,000 கோடியில் எரிசக்தி உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர். மேலும், ஜார்க்கண்ட்டில் ரூ. 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தியோகர் விமான நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் அதன் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் நான்தான் என்று கூறியுள்ள, “வி கே சசிகலா, நேற்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லாது. நான் இருக்கிற வரையில் அதிமுகவை அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது. ஒரு சிலருடைய தனிப்பட்ட தேவைகளால், அப்பாவி தொண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு . திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார். இதற்கு முன் பொருளாளராக இருந்த ஓ.பி.எஸ். அதிமுகவின் வங்கி வரவு செலவுகளை பராமரிப்பது, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை வைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
திருச்சி எல்பின் நிறுவனத்திற்கு தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை. மோசடி புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் சோதனை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 38 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முகமது ஜுபைரின் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு தள்ளிவைத்தது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் .
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,360 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,670க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 510 காலி இடங்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,615 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்தனர். 13,265 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். மேலும் 1.31 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர்.
இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே, கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து அமெரிக்கா தப்பி செல்ல முயன்றபோது, அவரது ஆவணங்களை சரிபார்க்க விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது
கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,576 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 68வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. http://tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.