News Highlights: அமித்ஷா- ரஜினி சந்திப்பு இல்லை; பாஜக உறுதி

ஐதராபாத்தில் வலிமை படப்பிடிப்பு தளத்தில் அஜித்துக்கு மீண்டும் லேசான காயம்.

By: Nov 21, 2020, 7:14:29 AM

Tamil News Today Updates:  7.5 இட ஒதுக்கீட்டின் படி அனைத்து மருத்துவ இடங்களும் நிரம்பின. இதனால் வறுமையால் பாதிக்கப்பட்டிருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறியது. ஆப்பிள் லாரிக்குள் பதுங்கி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் கிணற்றில் தவறிவிழுந்த குட்டி யானை, 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. தேர்தல் பணிகளை வழிப்படுத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிமுக நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். நாளை அமித்ஷா தமிழகம் வரும் நிலையில், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

டெண்டரை 10 முறை தள்ளிவைத்தது, 900 கோடி உயர்த்தியது ஏன்? என நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் திட்டம் குறித்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் இல்லாமல் இன்று, திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 1 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
23:55 (IST)20 Nov 2020
கிரிக்கெட் வீரர் சிராஜின் தந்தை மரணம்: இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத சோகம்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பந்து வீச்சாளார் சிராஜின் தந்தை முகமது கோஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். சிராஜ் தனிமைப்படுத்துதல் முகாமில் உள்ளதால் தந்தையின் இறுதிச் சடங்கி பங்கேற்கமுடியாத நிலையில் உள்ளார்.

23:48 (IST)20 Nov 2020
‘நடிகர் ரஜினிகாந்தை அமித்ஷா சந்திக்கும் திட்டம் இல்லை’ - பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி

சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணத்தில் ரஜினிகாந்த்தை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என பாஜக தேசிய பொதுச்செயலாளரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி தகவல் தெரிவித்துள்ளார்.

22:35 (IST)20 Nov 2020
நடப்பு கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. 10, 12 வகுப்புகளுக்கு தேர்வு உண்டு

நடப்பு கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. 10, 12 வகுப்புகளுக்கு தேர்வு கட்டாயம் நடக்கும் என்று டெல்லியில் சிபிஎஸ்இ அமைப்பின் நிர்வாகிகள் குழுவின் செயலாளர் அனுராக் திரிபாதி தகவல் தெரிவித்துள்ளார்.கொரோனா காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் தேர்வு நிச்சயம் நடைபெறும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

22:32 (IST)20 Nov 2020
கவிஞர் சினேகன் கார் மோதி விபத்து: இளைஞர் பலி

புதுக்கோட்டை அருகே கவிஞர் சினேகன் கார் மோதிய விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த திருமயத்தைச் சேர்ந்த அருண் பாண்டியன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

21:24 (IST)20 Nov 2020
அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ் அறிக்கை, “தனியார் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவம் பயில இடம் கிடைத்தும், அதிகளவு கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு அரசு பள்ளி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது என்றும், இவை அனைத்தும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் என்றாலும், மறைமுகமாக 3 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக தனியார் கல்லூரிகளால் வசூலிக்கப்படுகின்றன என குற்றம்சாட்டினார். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்” என்று வலியுறுத்திள்ளார்.

20:30 (IST)20 Nov 2020
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் கீழ் தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

20:23 (IST)20 Nov 2020
வதந்திகளை பரப்பி களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் - திமுக எம்.எல்.ஏ பூங்கோதை அறிக்கை

திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா நேற்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வதந்திகளைப் பரப்பி என்னை வளர்த்த கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

19:22 (IST)20 Nov 2020
‘எங்கள் உணர்வை அடக்க அடக்க வெகுண்டெழுவோம்’ - உதயநிதி ட்வீட்

திருக்குவளையில் தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கிய உதயநிதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், “செய்யப்பட்ட அடிமை அதிமுக-பாசிச பாஜகவுக்கு எதிராக மொத்த தமிழகமும் உள்ளது. அந்த உணர்வை ஒன்றுபட்டு ஒருங்கிணைக்க 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரச்சார பயணத்தை திருக்குவளையில் இன்று தொடங்கினேன்.அதை முடக்க நினைத்து கைது செய்கின்றனர். எங்கள் உணர்வை அடக்க அடக்க வெகுண்டெழுவோம் - தமிழகம் மீட்போம்!” என்று தெரிவித்துள்ளார்.

18:29 (IST)20 Nov 2020
தமிழகத்தில் இன்று புதிதாக 1,688 பேருக்கு கொரோனா; 18 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 1,688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 18 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

18:22 (IST)20 Nov 2020
அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

17:32 (IST)20 Nov 2020
உதயநிதி ஸ்டாலின் கைது; திருமண மண்டபத்தில் தடுத்து வைப்பு

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற திமுகவின் தேர்தல் பிரசாரப் பயணத்தை திருக்குவளையில் தொடங்கினார். தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் விதிகளை மீறியதாக போலீசார் கைது செய்தனர். உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் காவல்துறையையும் அதிமுக அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

17:12 (IST)20 Nov 2020
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசாரப் பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் கைது

திருக்குவளையில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசாரப் பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் விதிகளை மீறியதாக போலீசார் கைது செய்தனர். உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக தொண்டர்கள் அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.

16:55 (IST)20 Nov 2020
திமுக பிரசரத்தை முடக்க அதிமுக அரசு முயற்சி - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக பிரசரத்தை முடக்க அதிமுக அரசு முயற்சி செய்கிறது. போலீஸ் கெடுபிடி செய்தாலும் மக்களை சந்தித்தே தீருவேன். அதிமுக ஆட்சியின் கொள்ளைகளை மக்களிடம் எடுத்துச்சொல்வேன்” என்று கூறினார்.

16:39 (IST)20 Nov 2020
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசாரப் பயணத்தை தொடங்கினார் உதயநிதி

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரசாரப் பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி இன்று திருக்குவளையில் இருந்து தொடங்கினார்

15:39 (IST)20 Nov 2020
பாஜக அரசின் மொழிவெறி உணர்வைக் கண்டிக்கிறேன் – ஸ்டாலின்

"தமிழக அமைச்சர்கள் வில்சன் மற்றும் சு.வெங்கடேசன் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு இந்தியில் பதிலளிக்கும் மத்திய அமைச்சகங்கள்; கண்டனத்திற்குப் பிறகே ஆங்கிலத்தில் பதில்! அலுவல் மொழிச் சட்டத்தையே மீறுவதா? பாஜக அரசின் இந்தி ஆதிக்க - மொழிவெறி உணர்வைக் கண்டிக்கிறேன்!" என திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

15:25 (IST)20 Nov 2020
பிரபலங்கள் தத்தெடுத்துப் படிக்க வைக்கலாம்

மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தும் ஏழை மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் கைவிடும் நிலை வருத்தமளிக்கிறது என்றும் மூத்த வழக்கறிஞர்கள், பிரபலங்கள் ஏழை மாணவர் ஒருவரைத் தத்தெடுத்து, அவர்களின் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

14:23 (IST)20 Nov 2020
அமலா பால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடத் தடை

தன்னுடைய அனுமதியின்றி தன் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை எதிர்த்து முன்னாள் நண்பரிடம் நஷ்ட ஈடு கேட்டு நடிகை அமலாபால் தொடர்ந்த வழக்கில், புகைப்படங்களை வெளியிடுவதற்குத் தடை விதித்து உத்தரவளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

14:02 (IST)20 Nov 2020
பேரறிவாளனை விடுவிக்க விஜய் சேதுபதி, ஆர்யா

'நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள்... சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான்' என நடிகர் ஆர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

13:51 (IST)20 Nov 2020
தூத்துக்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் மறைவிற்கு முதல்வர் இரங்கல்

லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

13:45 (IST)20 Nov 2020
கோவாக்ஸின் தடுப்பூசிக்கு தன்னை உட்படுத்திக்கொண்ட ஹரியானா அமைச்சர்

ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், கொரோனாவின் கோவாக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனைக்கு முதல் தன்னார்வலராகத் தன்னை உட்படுத்திக் கொண்டார்.

13:23 (IST)20 Nov 2020
சோனியா காந்திக்கு நுரையீரல் தொற்று

ஆஸ்துமா பிரச்சினை காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது டெல்லியில் தனது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தற்போது நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் சென்னை அல்லது கோவாவுக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவருடன் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி செல்வார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

13:05 (IST)20 Nov 2020
சசிகலா விடுதலை?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை. நீதிமன்ற தீர்ப்பின்படியும் சிறைச்சாலை விதியின் படியும் மட்டுமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

12:35 (IST)20 Nov 2020
திமுக தேர்தல் பரப்புரை

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்! என்ற பிரச்சாரத்தில் 75 நாட்கள், 15 தலைவர்கள், 234 தொகுதிகள், 1500+ கூட்டங்கள், 15,000 கி.மீ பயணம், 500+ உள்ளூர் நிகழ்வுகள், 10,00,000+ நேரடி கலந்துரையாடல்கள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. 

2021 தேர்தல் பரப்புரையை
தொடங்கும் திமுகவின் 15 தலைவர்கள் :

மு.க.ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
கனிமொழி கருணாநிதி
ராஜ கண்ணப்பன்
அந்தியூர் செல்வராஜ்
திருச்சி சிவா
சபாபதி மோகன்
திண்டுக்கல் லியோனி
சுப்புலட்சுமி ஜெகதீசன்
பொன்முடி
செந்தில் குமார் (தருமபுரி)
தமிழச்சி தங்கபாண்டியன்
எஸ்.ஆர்.பார்திபன்
கார்த்திகேய சிவசேனாபதி
ஏ.கே.எஸ்.விஜயன்

12:03 (IST)20 Nov 2020
திமுக தலைவர்கள் பிரச்சாரம்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஜனவரி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதோடு திமுக-வின் முக்கிய தலைவர்கள் 15 பேர் 100 நாட்கள் பிரச்சாரம் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

11:39 (IST)20 Nov 2020
அரியர்ஸ் வழக்கு விசாரணை

அரியர்ஸ் வழக்கு விசாரணையை காண வீடியோ கான்பரன்ஸில் ஏராளமானோர் நுழைந்ததால் இடையூறு ஏற்பட்டதால், வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது. காணொலியில் இருந்து மாணவர்கள் வெளியேறாவிடில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

11:31 (IST)20 Nov 2020
பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

ஒரு குற்றமும் செய்யாத மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். 

11:05 (IST)20 Nov 2020
பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி ராமதாஸ் ட்வீட்
10:54 (IST)20 Nov 2020
விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா

விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப் படுத்தி கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:44 (IST)20 Nov 2020
மு.க.ஸ்டாலின் பரப்புரை

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை ஜனவரி 5-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

10:11 (IST)20 Nov 2020
அகமதாபாத்தில் முழு ஊரடங்கு

கோவிட்-19 பரவல் அதிகரித்துள்ளதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் அகமதாபாத்தில் இன்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

10:00 (IST)20 Nov 2020
இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,04,366 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,32,162 ஆக அதிகரித்த நிலையில், 84,28,410 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

09:33 (IST)20 Nov 2020
சென்னைக்கு மாற்றப்படும் பூங்கோதை ஆலடி அருணா

திருநெல்வேலி ஷிஃபா கிளினிக்கிலிருந்து இன்று காலை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா. 

09:22 (IST)20 Nov 2020
ரூபே அட்டைத் திட்டம் - பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி, பூட்டானில் ரூபே அட்டைத் திட்டத்தின் இரண்டாவது கட்ட செயல்பாடுகளை அந்நாட்டு பிரதமர் திரு. லோட்டே ஷெரிங்குடன் இணைந்து காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.

09:17 (IST)20 Nov 2020
அதிமுக ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், அதிமுக அமைச்சர்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

Tamil News : பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நவம்பர் 23ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள முதல் வகுப்பு பெட்டியில் ஆண்கள், பெண்கள் என இருபாலினத்தவரும் பயணிக்கலாம் என்றிருந்த நிலையில், பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நவம்பர் 23ம் தேதி முதல் மகளிர் மட்டும் பயணிக்கும் பிரத்யேகமான பெட்டிகளாக மாற்றபடுகிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Web Title:Tamil news today live aiadmk meeting eps ops coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X