Tamil News Today : மருத்துவ இடங்களில் 69% அடிப்படையில் 50% இடஒதுக்கீடு பெற திமுக போராடும் – ஸ்டாலின்

மத்திய, மாநில அரசு மற்ற தனியார் அலுவலகங்களுக்கு 33 சதவீத ஊழியர்கள் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

By: Jun 19, 2020, 10:29:17 PM

Tamil News Today Live:  கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தங்கி வேலை செய்து வந்த பிற மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி திரும்பினர். பொதுமுடக்கத்தை முன்னிட்டு சென்னையில் தீவிர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

வாகனங்களைப் பயன்படுத்தினால் பறிமுதல், 2 கிமீ தாண்டி செல்லத் தடை: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

மருத்துவச் சேவை, அவசிய காரியம் தவிர ரயில் நிலையம், விமான நிலையம் செல்வதற்கு மட்டும் ஆட்டோ, டாக்ஸி வாகனங்களுக்கு அனுமதி உள்ளது. அதைத் தவிர அனுமதி இல்லாமல் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மத்திய, மாநில அரசு மற்ற தனியார் அலுவலகங்களுக்கு 33 சதவீத ஊழியர்கள் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா தொற்று எண்ணிக்கை 2000-ஐ கடந்தது. தமிழகத்தில் இந்த மாதம் இதுவரை மட்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30000-ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 49 பேர் பலியாகியுள்ளார்கள். இதில் 40 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:29 (IST)19 Jun 2020
மருத்துவ இடங்களில் 69% அடிப்படையில் 50% இடஒதுக்கீடு

மருத்துவ இடங்களில் 69% அடிப்படையில் 50% இடஒதுக்கீடு பெற திமுக போராடும் . திமுகவின் நீண்ட போராட்டத்தால் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

21:45 (IST)19 Jun 2020
சீன ராணுவத்திற்கு தக்க பாடம் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஊடுருவ முயற்சித்த சீன ராணுவத்திற்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது. இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, ராணுவ நிலையையும் கைப்பற்றவில்லை.நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது கூட யாரும் கண் வைக்க முடியாத அளவுக்கு பலமாக உள்ளோம் என்று பிரதமர் மோடி, அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

21:33 (IST)19 Jun 2020
கொரோனா தொற்றுநோயின் ஆபத்தான கட்டம்

கொரோனா தொற்றுநோயின் 'புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில்' உலகம் உள்ளது. வைரஸ் இன்னும் வேகமாக பரவி வருகிறது, அது இன்னும் ஆபத்தானதாக உள்ளது;  பெரும்பாலான மக்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

21:00 (IST)19 Jun 2020
கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க ஐசிஎம்ஆர் அறிவுரை

கொரோனா தொற்று பாதிப்பை விரைவில் கட்டுக்குள் கொண்டு வர கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், மருத்துவமனைகளில் பரிசோதனைகளை அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா அறிவுறுத்தியுள்ளார்.

20:45 (IST)19 Jun 2020
உணவகங்களில் வரும் 30ம் தேதி வரை பார்சல் மட்டுமே வழங்கப்படும்

தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கப்படும் என ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

20:21 (IST)19 Jun 2020
ஓபிசி பிரிவினருக்கு 27 % இடஒதுக்கீடு

நீட் தேர்வு எழுதி, முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஓபிசி பிரிவினருக்கு 27 % இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

19:44 (IST)19 Jun 2020
முதல்வர் பழனிசாமி இரங்கல்

பழம்பெரும் நடிகரும் மற்றும் பின்னணி பாடகருமான ஏ.எல்.ராகவன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. ராகவனின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

19:38 (IST)19 Jun 2020
வாகனங்களை திருடிய 5 பேர் கைது

கடலூரில் ஊரடங்கு காலத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

19:04 (IST)19 Jun 2020
41 பேர் கொரோனாவால் பலி!

தமிழகத்தில் இன்று 41 பேர் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில், இதுவரை பலியானோரின் மொத்த எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.

18:57 (IST)19 Jun 2020
2,115 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 54,449 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும்  1322 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18:40 (IST)19 Jun 2020
மதுரையில் ஒரேநாளில் 98 பேருக்கு கொரோனா

மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரேநாளில் 98 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 350 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் இதுவரை 495 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

18:16 (IST)19 Jun 2020
மிதமான மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில், அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

18:05 (IST)19 Jun 2020
வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள்

வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

17:24 (IST)19 Jun 2020
அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

இந்திய- சீன மோதல் விவகாரம் தொடர்பாக, பிரதமர் கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

17:12 (IST)19 Jun 2020
53.79% பேர் குணம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 53.79% பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

16:36 (IST)19 Jun 2020
பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு

கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு

* சத்யேந்திர ஜெயினுக்கு நுரையீரல் தொற்று அதிகமான நிலையில் நிமோனியா பாதிப்பும் உள்ளது

- மருத்துவமனை

16:35 (IST)19 Jun 2020
கொரோனா தொற்று உறுதி

காஞ்சிபுரத்தில் ஒரேநாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 984ஆக உயர்ந்துள்ளது.

16:30 (IST)19 Jun 2020
2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

டாஸ்மாக் கடைகளுக்கான பாதுகாப்பை குறைத்து கொரோனா தடுப்பு பணிக்கு காவல்துறையினரை ஈடுப்படுத்த கோரி வழக்கு

உள்துறை, வருவாய் துறை செயலாளர்கள், டிஜிபி, டாஸ்மாக் நிர்வாகம் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

16:30 (IST)19 Jun 2020
மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை - கமல்ஹாசன்

வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதால் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது

முழு பொதுமுடக்க காலத்தில் என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறோம் என மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை

- கமல்ஹாசன்

15:51 (IST)19 Jun 2020
2.10 லட்சம் பேருக்கு கொரோனா

கடந்த 3 மாதங்களில் சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

வீடு வீடாக வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் மக்கள் தங்களுக்குள்ள அறிகுறிகளை கூற வேண்டும்

மாநகராட்சி நடத்தும் மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

எல்லா மண்டலத்திலும் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர்

15:23 (IST)19 Jun 2020
காசியின் பெற்றோரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார்

சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களை குறிவைத்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் காசி கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் காசியின் நண்பர் டேசன் ஜினோவிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே காசியின் பெற்றோரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் காசியுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்றுடன் காசியின் போலீஸ் காவல் முடிய உள்ள நிலையில் மேலும் காவலை நீட்டிக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

15:22 (IST)19 Jun 2020
ஜெர்மனி தூதர் இரங்கல்

லடாக்கில் வீரமரணம் அடைந்த 20 வீரர்கள் குடும்பத்திற்கு ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ.லிண்டர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

15:05 (IST)19 Jun 2020
அமைச்சர் கவலைக்கிடம்

'டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கவலைக்கிடம்'

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

15:05 (IST)19 Jun 2020
கொரோனா தொற்று உறுதி

அயனாவரம் காவல் நிலையத்தில் இதுவரை 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

* குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட இதுவரை 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

14:10 (IST)19 Jun 2020
ராணுவத்தின் கோரிக்கை நிராகரிப்பு

ஆவின் பால் வழங்க கோரிய இலங்கை ராணுவத்தின் கோரிக்கை நிராகரிப்பு

* யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மக்களுக்கு ஆவின் பால் விநியோகிக்க விரைவில் ஒப்பந்தம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

13:41 (IST)19 Jun 2020
நாடு முழுவதும் நியாயமான ஒரே மாதிரியான கட்டணம்

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் உள்ள குறைகளை களைய நிபுணர் குழு பார்வையிட வேண்டும். மருத்துவமனைகளில் அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு நாடு முழுவதும் நியாயமான ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கண்ணியமாக கையாளுவதில் உள்ள குறைகளை களைய வேண்டும்"

- கொரோனா சிகிச்சை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

13:29 (IST)19 Jun 2020
ஆர்.எஸ். பாரதி மீதான வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

* ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சை மறுத்தால் அவரது குரல் மாதிரியை ஆய்வு செய்ய வேண்டும் - காவல்துறை வாதம்

அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டதால் ஜாமீனை ரத்து செய்ய எந்த காரணமும் இல்லை - ஆர்.எஸ். பாரதி வாதம்

* இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததால் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

13:20 (IST)19 Jun 2020
எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி

10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி" - தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு

* உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தரவு

எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12:42 (IST)19 Jun 2020
பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்

பழம் பெரும் நடிகை எம்.என். ராஜம்-ன் கணவரும், பின்னணி பாடகருமான ஏ.எல்.ராகவன் இன்று சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.

12:20 (IST)19 Jun 2020
அமைச்சர் அன்பழகனை ஃபோனில் விசாரித்த மு.க.ஸ்டாலின்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை ஃபோனில் தொடர்புக்கொண்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். 

11:52 (IST)19 Jun 2020
அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்பு

பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறர. சீன விவகாரம் குறித்து இன்று மாலை அனைத்து கட்சி தலைவர்களுடன், காணொலி காட்சி மூலம் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். 

11:40 (IST)19 Jun 2020
முதல்வர் வீட்டில் கிருமி நாசினி தெளிப்பு

சென்னையில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் வீடு உள்ள கிரீன்வேஸ் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா உறுதியான நிலையில் அமைச்சர்கள் வீட்டு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

11:12 (IST)19 Jun 2020
மாணவர்கள் தோல்வி - ஆசிரியர்கள் அதிர்ச்சி

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக தெரிகிறது.

10:27 (IST)19 Jun 2020
ஜம்மு - காஷ்மீரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..! ஜம்மு - காஷ்மீர் புல்வாமாவில் மசூதிக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 3 பயங்கரவாதிகள் மீஜ் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் காவல்துறை அதிரடி. 

10:16 (IST)19 Jun 2020
எனக்கு கொரோனா இல்லை - அமைச்சர் அன்பழகன்

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக, செய்திகள் பரவின. இந்நிலையில், “எனக்கு கொரோனா இல்லை. நான் மருத்துவமனையிலும் இல்லை. தனிமைப்படுத்தபடவும் இல்லை. எனக்கு காய்ச்சல் சரியாகி விட்டது” என முன்னணி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

09:53 (IST)19 Jun 2020
சென்னையில் பெட்ரோல் டீசல்

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.81.82க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகள் அதிகரித்து ரூ.74.77க்கு விற்பனையாகிறது. 

09:50 (IST)19 Jun 2020
2 மடங்கு டாஸ்மாக் விற்பனை

முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையொட்டி வழக்கத்தைக் காட்டிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்றைக்கு இரண்டு மடங்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது

09:49 (IST)19 Jun 2020
ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பிடிபட்டார்

சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 

09:44 (IST)19 Jun 2020
சென்னை முழு ஊரடங்கு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 18000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

நெடுஞ்சாலை டெண்டர் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த மனுவை திரும்ப பெற்றதை அடுத்து வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் 462 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலை அமைக்கவும், சாலைகள் விரிவாக்கத்துக்கு 1,165 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Web Title:Tamil news today live chennai full lockdown covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X