Chennai News Updates: மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது - அண்ணாமலை பேச்சு

Tamil Nadu Latest Live News Update in Tamil 20 July 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 20 July 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annamalai

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. சி.என்.ஜி ஒரு கிலோகிராம் ரூ. 91.50 காசுகளுக்கு விற்பனையாகிறது.

  • Jul 20, 2025 21:26 IST

    மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது - அண்ணாமலை பேச்சு

    மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது என தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், "பா.ஜ.க யாரையும் ஏமாற்றும் கட்சியும் இல்லை. எந்தக் கட்சியும், மற்றக் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம். சகோதரத்துவமாக பார்க்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jul 20, 2025 20:53 IST

    மறு ஒப்பந்தம் செய்யும் வரை கட்டணமின்றி வாகனங்களை நிறுத்த அனுமதி - சென்னை மாநகராட்சி

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இதற்கான மறு ஒப்பந்தம் செய்யும் வரை பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மாநகராட்சி பகுதிகளில் கட்டணமின்றி நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
  • Jul 20, 2025 19:12 IST

    ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கேட்டாரா விஜய்? -  செல்வப்பெருந்தகை பதில்

    திருவள்ளூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று பங்கேற்றார். அப்போது, ராகுல் காந்தியை டெல்லியில் சந்திக்க, த.வெ.க தலைவர் விஜய் நேரம் கேட்டாரா என்று அவரிடம் கேள்வி எடுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், இது தொடர்பான எந்த தகவலும் தன்னிடம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.



  • Jul 20, 2025 18:09 IST

    மக்களை காப்போம், தமிழ்நாட்டை மீட்போம் சுற்றுப்பயணம் இமாலய வெற்றி பெற்றது - இ.பி.எஸ்

    மக்களை காப்போம், தமிழ்நாட்டை மீட்போம் சுற்றுப்பயணம் இமாலய வெற்றி பெற்றது என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், மக்களின் ஆதரவு இன்னும் பெருகும் என்றும், 2026 தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Jul 20, 2025 17:26 IST

    காமராஜரைவிட காங்கிரஸுக்கு ஓட்டு முக்கியம்: தமிழிசை

    காமராஜரை விட ஓட்டு முக்கியம் என காங்கிரஸ் நினைக்கிறது. காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் யாரேனும் பேசினால் அதை கேட்க எங்களுக்கு உரிமை உண்டு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.



  • Jul 20, 2025 16:49 IST

    அனிருத் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

    சென்னையை அடுத்த திருவிடந்தையில் ஜூலை 26ம் தேதி நடைபெற இருந்த `Hukum Chennai' அனிருத் இசைக்கச்சேரி போதிய இடம் இல்லாத‌தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் வாங்கிய அனைவருக்கும் 7 முதல் 10 நாட்களில் பணம் திருப்பி செலுத்தப்படும் என இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.



  • Jul 20, 2025 16:14 IST

    சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளிடம் சோதனைகள் விரைவுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலைய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில் மின்னஞ்சல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jul 20, 2025 16:12 IST

    உத்தரவு பிறப்பிக்க AI வேண்டாம்

    செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியோடு நீதிமன்றங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். AI கருவிகளை பயன்படுத்துவது தொடர்பாக சட்ட பயிற்சி மையத்திலோ, உயர் நீதிமன்றத்திலோ நடைபெறும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட AI கருவிகளை பயன்படுத்துவதில் பிரச்சினை வந்தால் உயர் நீதிமன்றத்தின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • Jul 20, 2025 16:09 IST

    எண்ணெய் கழிவுகளால் மீனவர்கள் வேதனை

    சென்னையை அடுத்த எண்ணூரில் பக்கிங்காம் கால்வாயில் மீண்டும் எண்ணெய் கழிவுகள் திறந்து விடப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் படர்ந்து காணப்படுவதால் மீன்வளம் அழிந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



  • Jul 20, 2025 15:23 IST

    மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா!

    உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை, தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் Freestyle செஸ் தொடரில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43வது நகர்வில் வெற்றி பெற்றார். கடந்த 3 நாட்களில் கார்ல்சனை 2வது முறையாக வீழ்த்தியுள்ளார்.



  • Jul 20, 2025 14:37 IST

    3 பாமக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

    பாமக எம்எல்ஏக்கள் 3 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக ராமதாஸ் தரப்பு அறிவிப்பு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். 



  • Jul 20, 2025 14:14 IST

    ரூ. 6 கோடியே 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி

    பெரம்பூர், ஆர்.கே. நகர் தொகுதிகளில் ரூ. 6 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி, சமூக நலக்கூடம் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளுக்கு சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி. சேகர் எம்.எல்.ஏ., ஜே.ஜே.எபினேசர் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார் வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி. ஏற்கெனவே வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் ரூ.7 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் 21 அங்கன்வாடிகளும், ரூ.11 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் 5 சமூக நலக் கூடங்களும் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது



  • Jul 20, 2025 14:01 IST

    பஹல்காம் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்: டிஆர் பாலு பேட்டி

    பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று மக்களவை திமுக எம்.பி.க்கள் குழுத்தலைவர் டிஆர் பாலு பேட்டி அளித்துள்ளார். நான் சொல்லித்தான் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதாக டிரம்ப் கூறியது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் விவரத்தை விளக்க வேண்டும்.



  • Jul 20, 2025 13:50 IST

    வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்; ‘நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்’ - அன்புமணி

    வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரத்தில் பா.ம.க சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி, “தி.மு.க-வில் உள்ள 23 எம்.எல்.ஏ-க்கள், 5 எம்.பிக்கள், 4 அமைச்சர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேச தயக்கம் ஏன்? 38 வன்னியர் எம்.எல்.ஏ-க்களும் இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் சட்டமன்றம் வருவோம் என போராடுவார்களா? 10.5% இட ஒதுக்கீட்டை வழங்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும், 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை சாலை மறியலில் ஈடுபடுவோம்; சிறை நிரப்பும் போராட்டம், சாலை மறியல் நிச்சயம் நடக்கும்” என்று கூறினார்.



  • Jul 20, 2025 13:34 IST

    திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை சம்பவத்திற்கு நீதிகேட்டு த.வெ.க-வினர் போராட்டம்

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில், குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி த.வெ.கவினர் போராட்டம் நடத்தினர். த.வெ.க-வினர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தபோது, சிலர் காவல் நிலையத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



  • Jul 20, 2025 12:44 IST

    கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா - பழனிசாமி பேசி முடிவு எடுப்பார்கள் - நயினார் நாகேந்திரன்

    பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,  “அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை; வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அமித்ஷா - பழனிசாமி பேசி முடிவு எடுப்பார்கள்" என்று கூறியுள்ளார்.



  • Jul 20, 2025 12:36 IST

    வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க ஆர்ப்பாட்டம்

    10.5% உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் நகரராட்சி திடலில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பா.ம.க-வினர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்துவதாகும். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.



  • Jul 20, 2025 12:33 IST

    மதுரை ஆதினத்திடம் சென்னை சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

    மதுரையில் உள்ள ஆதீன மடத்தில் விசாரணையைத் தொடங்கிய அதிகாரிகள்; தன்னை கார் ஏற்றி கொல்ல முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டியிருந்தார்; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அது பொய் என தெரியவந்ததால் ஆதீனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மதுரை ஆதினத்திடம் சென்னை சைபர் கிரைம் போலீஸ் விசாரணையைத் தொடங்கியது.



  • Jul 20, 2025 11:56 IST

    தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

    புதிய செயலியை அறிமுகம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செயலியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே அதன் அறிமுக விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் 24-ந்தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்றைய தினம் புதிய செயலியை தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.



  • Jul 20, 2025 11:52 IST

    கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்

    டெல்லியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், கூட்டத்தொடரை அமைதியான முறையில் கொண்டு செல்வதற்கான விசயங்கள் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.



  • Jul 20, 2025 11:20 IST

    20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்

    சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத். தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் இவர் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த நிலையில், நேற்று மரணம் அடைந்து உள்ளார். அவருக்கு வயது 36. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ராணுவ பயிற்சிக்காக படித்து வந்த அவர், 2005-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிக்கினார். இதில், காயமடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், 20 ஆண்டுகளாக கோமாவிலேயே இருந்த இளவரசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.



  • Jul 20, 2025 10:45 IST

    தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.  இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 12 செமீ முதல் 20 செமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளம் மற்றும் கர்நாடகத்திற்கும் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Jul 20, 2025 10:43 IST

    அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி , கன்னியாகுமரி , சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், தேனி , தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 20, 2025 10:36 IST

    "ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல"

    ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல என்றும் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியுள்ளார். திமுக ஒரு ஊழல் கட்சி, ஊழல் அரசாங்கம், அதை அகற்ற வேண்டும் என்று பாஜக கருதுகிறது. அந்த நிலைப்பாடோடு எங்களுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. இன்னும் சில கட்சிகள் எங்களுடன் இணையவுள்ளன, சரியான நேரத்தில் உங்களுக்கு மரண அடி கொடுப்போம். 200 தொகுதிகளில் வெற்றிப் பெறுவதுதான் கனவு, ஆனால் நிஜத்தில் 210 தொகுதிகளில் வெற்றிப் பெறுவோம்” என்று பேசினார்.

     



  • Jul 20, 2025 09:50 IST

    டெல்லி வந்தடைந்த திமுக எம்.பி. டி.ஆர். பாலு

    திமுக எம்.பி. டி.ஆர். பாலு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 திங்கட்கிழமை தொடங்குவதையொட்டி டெல்லி வந்தடைந்தார்.



  • Jul 20, 2025 08:55 IST

    கால்நடை மருத்துவ படிப்பு சிறப்பு பிரிவு கலந்தாய்வு

    ஜூலை  22,  23ஆம் தேதிகளில், நேரடி முறையில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும் என கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



  • Jul 20, 2025 08:55 IST

    மதுபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து பீகார் இளைஞர் உயிரிழப்பு

    சென்னை வடபழனியில், பீகாரை சேர்ந்த மதன்(38) என்பவர் மதுபோதையில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இரண்டு வருடங்களாகக் கட்டிட வேலை செய்து வரும் மதன் தற்போது வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.



  • Jul 20, 2025 07:56 IST

    நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

    நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 22,500 கன அடியிலிருந்து 31,000 கன அடியாக அதிகரித்துள்ளது.



  • Jul 20, 2025 07:53 IST

    டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    தமிழக அரசு வழங்கும் சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 386 பேருக்கு வழங்கப்படும். இன்று முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு



  • Jul 20, 2025 07:29 IST

    தவெக செயலி அறிமுக கூட்டம் ஒத்திவைப்பு

    விஜய் தலைமையில் இன்று நடைபெற இருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும தவெக செயலி அறிமுக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 20, 2025 07:28 IST

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடக்கம்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. பஹல்காம் தாக்குதல், வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப இந்தியா கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.



  • Jul 20, 2025 07:28 IST

    சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்

    கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை காண ஆயிரகணக்கான மக்கள் கடற்கரை அருகே திரண்டனர்.

    Video: 



  • Jul 20, 2025 07:26 IST

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம்



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: