News In Tamil : 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜனவரி 8-ம் தேதி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோரை அழைத்து கருத்துக் கேட்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாள் ஒன்றுக்கு 100 பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கருத்துக் கேட்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் 3 பேர் தற்போது கைதாகியுள்ளனர். இதில் அதிமுக பிரமுகர் ஒருவரும் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை வேறுபாடு காரணமாகக் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாக்கிழமை மாலை வரை சென்னையில் தொடர்ந்து மழை பெய்தது. அதிகபட்சமாக கிண்டியில் 15.5 செ.மீ மழையும் மாம்பலத்தில் 14.3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன. விடாமல் பெய்த மழையினால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. வெகுநேரம் மழைநீர் வடியாமல் இருந்ததனால், போக்குவரத்து பெரிதளவில் பாதிக்கப்பட்டன. இதனை எந்திரம் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் களத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து தற்போது மழைநீர் முழுவதுமாக நீக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.86.7-க்கும் டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.79.46-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Latest Tamil News : நட்சத்திர ஓட்டல்களான ஐ.டி.சி கிராண்ட் சோழா மற்றும் லீலா பேலஸ் ஆகியவற்றில் சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் கோவிட் -19 சோதனை நடத்தினார்கள். அங்கு வேலை செய்யும் சமையல்காரர்கள் பணியாளர்கள், பாதுகாப்பாளர்கள் என மொத்தம் 320 நபர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் 20 நபர்களுக்கு கொரோனா (பாசிட்டிவ்) உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 10ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கும் வீரர்கள் மற்றும் நடுவர்கள் இங்கு தங்கியுள்ளனர் . இவர்கள் டிசம்பர் 25 -ம் தேதி முதல் இங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டும் உள்ளனர். இந்த இரு நட்சத்திர ஓட்டல்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பி.சி.சி.ஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், வீரர்கள் மற்றும் நடுவர்களை மிக உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது.
Web Title:Tamil news today live chennai rain tamil nadu politics kamal crime corona eps stalin farmers
பொள்ளாட்சி பாலியல் வல்லுறவில் தொடர்புடையவர்கள், எத்தனை அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தாலும், பாரபட்சமில்லாமல் கைது செய்யப்பட்டு, விரைந்து தண்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அவர்களை அரசியலில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல். இந்தப் போராட்டத்திற்காக ஒரு சிலர் அதற்கான செலவுக்கென்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது என்று மாநில நிர்வாகி சுதாகர் கடிதம் எழுதினார்.
ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல. தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்து கொள்வது ஆபாசமானது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ள நரித்தனம். ஒரிஜினல் நரிகள் மன்னிக்க என கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கோவிட் 19 –க்கான தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.
50 சதவிகிதத்தில் இருந்து 100% இருக்கைகளுடன் திரையரங்குகள், வணிகவளாகங்கள், தியேட்டர்கள் இயங்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள மீறும் செயலாகும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பிரபிக்கப்பட்ட உத்தரவுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநிலங்கள் எந்த வகையிலும் நீர்த்துப்போகச் செய்ய கூடாது என தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
கோவிட்-19 தடுப்பூசி போடுவதை பத்து நாட்களுக்குள் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரும் எட்டாம் தேதி கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெறும் என்று சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ராதாகிஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக இருந்த சகாயம் கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் இன்று அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட்ட முதல்வர் பழனிசாமி, “ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக குடும்ப கட்சி. திமுக கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அதில் ஸ்டாலின் இயக்குனராக உள்ளார். அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் இயக்குனராக உள்ளார்கள். ஸ்டாலின் அந்த நிறுவனத்துக்கு சேர்மேனாக உள்ளார்.” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை. ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் கைதாகியிருக்கிறார். இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்குப் பாதையாக இருக்கவேண்டும். வேறெதற்காகவோ பயன்பட்டுவிடக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பாஜக துணை தலைவருமான அண்ணாமலை, “பாஜக தலைமை சொல்லும் தொகுதியில் போட்டியிட தயார். அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக உள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “திமுக இந்தி மொழியை எதிர்க்கவில்லை. இந்தி மொழி திணிப்பைதான் திமுக எப்போதும் எதிர்த்து வருகிறது” என்று கூறினார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக த.மா.கா. உள்ளது. எடப்பாடி பழனிசாமியை நாங்கள் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என்று மத்திய அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துவது குறித்து நிபுணர் குழு ஆலோசனை பெற மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஒருதாய் வாயிற்றில் பிறந்த அண்ணணுக்கே தூரோகம் இழைக்கும் ஸ்டாலின், மக்களை எவ்வாறு பாதுகாப்பார் என்று முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், துண்டு சீட்டு இல்லாமல், கருத்து மோதலில் நேருக்கு நேர் மோதி பார்ப்போம் என்றும் சவால் விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காயத்திலிருந்து குணமடைந்த ரோகித் சர்மா, டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக சேர்க்கப்பட்டுள்ளார். ரஹானே தலைமையிலான இந்திய அணியில் கில், புஜாரா, விஹாரி, ரிசப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி மற்றும் நாகை மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 21 செ.மீ., சென்னை அண்ணா பல்கலை., தாம்பரம் தலா 16 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.
பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் மேலும் 13 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71ஆக உயர்வு.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்கக் கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பறவை காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் பாதிக்கப்படும் பறவைகளின் எண்ணிக்கை உட்பட அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியிருக்கிறது. நாட்டின் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் தேசிய அளவில் டெல்லியில் கண்காணிப்பு மையத்தை அமைத்திருக்கிறது மத்திய அரசு!
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கிராம சபை கூட்டத்தின் மூலம் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் பவானி தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தி.மு.க-வின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தால் எந்த பலனும் இல்லை என்று தெரிவித்தார்.
உருமாறிய கொரோனா தொற்று பரவலைத் தடுக்க இங்கிலாந்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 60,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 830 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 76,000 தாண்டியுள்ளது.
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் விக்ரம் படத்தைக் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருக்கும் கமல் தேர்தலுக்கு முன்பாகவே தன்னுடைய விக்ரம் படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் முழு முயற்சியில் கமல் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.