Advertisment

Tamil News Today: வரும் தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம்: அமைச்சர் பொன்முடி

Tamil News Live Updates-17.10.2024-இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amid legal row TN Gov puts on hold reinduction of former DMK minister Ponmudy Tamil News

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 214-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

ஏரியின் நீர் நிலவரம் 

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. நேற்று நீர் வரத்து 650 கன அடியாக இருந்து நிலையில் இன்று 750 கனஅடியாக அதிகரிப்பு.மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்தேக்கத்தில்  மொத்த உயரம் 35 அடியில் , 21.95 அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 17  கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Oct 17, 2024 21:18 IST
    வரும் தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம்: அமைச்சர் பொன்முடி

    விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய, அமைச்சர் பொன்முடி “வரும் தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம்.. தலைவர் யாரை வேட்பாளராக முடிவு செய்கிறாரோ அவர் மட்டும்தான் நம் கண்முன் தெரிய வேண்டும் என்று கூறியுள்ளார்.



  • Oct 17, 2024 21:15 IST
    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை அறிக்கை

    தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு ஏற்கனவே பொதிகை என்ற பெயரில் இருந்த தொலைக்காட்சியை டிடி தமிழ் என்று மாற்றம் செய்தது மட்டுமல்லாமல் பெயரளவில் தமிழை வைத்துவிட்டு தங்களின் குறுகிய எண்ணமான இந்தி திணிப்பை தற்போது அதே தொலைக்காட்சியின் வாயிலாக நடத்த திட்டமிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்று மக்கள் விரோத போக்கை ஒரு நாளும் தமிழ் மண்ணில் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒன்றிய பாஜக அரசின் இந்தி மாத கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.



  • Oct 17, 2024 21:11 IST
    நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!

    ஐபில் போட்டிகளை ஃபேர்ப்ளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின், விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம், அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. ஃபேர்ப்ளே செயலியில், ஐ.பி.எல் போட்டிகளை பார்ப்பதை ஊக்குவிப்பதாக நடிகை தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Oct 17, 2024 20:31 IST
    ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் பலி? 

    காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலில் அக்டோபர் 7ல் நடந்த பயங்கர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார் என்று கூறப்படுகிறது.



  • Oct 17, 2024 20:30 IST
    ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்து இந்திய ரயில்வே விளக்கம்

    ரயில் டிக்கெட் முன்பதிவை நாட்களில் இருந்து நாட்களாக குறைத்தது ஏன் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள இந்திய ரயில்வே,உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை மேம்படுத்துவதே நோக்கம்" என்று கூறியுள்ளது.



  • Oct 17, 2024 19:41 IST
    இன்று இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Oct 17, 2024 18:54 IST
    வயநாடு இடைத்தேர்தல் - கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிவிப்பு 

    கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சத்யன் மோக்கேரி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 



  • Oct 17, 2024 18:52 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜா​மின் கோரி மனு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் குமார், விஜயகுமார், சதீஷ்குமார் ஆகிய 3 பேர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 



  • Oct 17, 2024 18:51 IST
    விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ உள்ளிட்ட 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. 



  • Oct 17, 2024 18:32 IST
    3 நாளில் 14,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

    சென்னையில் கனமழை பெய்த நேரத்தில் 14 ஆயிரத்து 493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், தூய்மை பணியாளர் இரவு, பகலாக பணியாற்றினர் என்றும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. 



  • Oct 17, 2024 18:30 IST
    'அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்' - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

    முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனை கைதி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர், அதனை ஆளுநர் மீற முடியாது' என்று கருத்து தெரிவித்துள்ளது. 



  • Oct 17, 2024 17:57 IST
    சென்னையில் 2 நாட்கள் தீபாவளி சிறப்பு இயற்கை சந்தை

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கை சந்தை நடத்தப்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 19.10.2024 (சனிக்கிழமை) மற்றும் 20.10.2024 (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி சிறப்பு இயற்கை சந்தை நடைபெற உள்ளது. இந்த இயற்கை சந்தையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் புத்தம் புதிய ஆடைகள், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் இளம்பிள்ளை சேலைகள், பட்டு வேட்டி, சட்டைகள், விருதுநகர் காட்டன் புடவைகள், அரியலூர் வாரியங்காவல் காட்டன் புடவைகள், கோயம்புத்தூர் நெகமம் சேலைகள், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தயாரிக்கப்படும் நைட்டிகள்,

    ஈரோடு போர்வைகள் மற்றும் துண்டுகள், திருப்பூர் டி-சர்ட் போன்ற தீபாவளி பண்டிகைக்கு தேவையான அனைத்து ஆடை வகைகளும் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஒலை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.



  • Oct 17, 2024 17:28 IST
    ஊரகப் பகுதிகளில் வீடு கட்ட ரூ. 209 கோடி நிதி ஒதுக்கீடு!

    தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு ரூ.209 ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டுக்கு நடப்பு நிதியாண்டில் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு ஒன்றிய அரசு 60%, மாநில அரசு 40% நிதி வழங்குகின்றன. 

    இந்நிலையில், 2024 – 2025ம் ஆண்டில் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



  • Oct 17, 2024 17:10 IST
    8 விமானங்களின் சேவை ரத்து

    பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் அந்தமான், மதுரை, திருச்சி, டெல்லி  உள்ளிட்ட 8  விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     



  • Oct 17, 2024 17:09 IST
    அ.தி.மு.க 53-வது ஆண்டு விழா: இ.பி.எஸ் -ஓ.பி.எஸ்க்கு பவன் கல்யாண் வாழ்த்து!

    அ.தி.மு.க-வின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். 

    முன்னதாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் ஒரே பதிவில் வாழ்த்து தெரிவித்து இருந்தார் பவன் கல்யாண்.



  • Oct 17, 2024 16:32 IST
    தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி... அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட ஸ்டாலின்

    சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் தொடர்மழையின்போது, தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், கொளத்தூர் ஜம்புலிங்க மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மழை வெள்ள பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை வாழ்த்தினார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஸ்டாலின், அங்கிருந்த 600 தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.



  • Oct 17, 2024 16:22 IST
    தீபாவளி அன்று புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி - புதுவை சுற்றுச்சூழல் துறை

    நீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரியில் தீபாவளி அன்று காலை 6-7, மாலை 708 வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைதியான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்கக்கூடது என்று புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அறிவித்துள்ளது.



  • Oct 17, 2024 16:17 IST
    எந்த காலத்திலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் - அமைச்சர் சக்கரபாணி 

    அமைச்சர் சக்கரபாணி: “கொள்கையை விட்டுவிட்டு எந்த காலத்திலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்; மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதில் உறுதியுடன் இருக்கிறோம்” என்று கூறினார்.



  • Oct 17, 2024 16:03 IST
    ‘விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதில் தவறில்லை’ - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

    தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதில் தவறில்லை; சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகள் வரலாம். தஞ்சையில் விமான நிலையம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.



  • Oct 17, 2024 15:58 IST
    நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை அக். 19-ம் தேதிக்குள் முடக்க ஐகோர்ட் உத்தரவு

    நியோமேக்ச் நிதி நிறுவன மோசடி வழக்கில் என்னதான் நடக்கிறது? எவ்வளவு கால் அவகாசம் தேவைப்படும்? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை அக். 19-ம் தேதிக்குள் முடக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



  • Oct 17, 2024 15:10 IST
    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Oct 17, 2024 15:04 IST
    பீகார் கள்ளச்சாராய பலி 28ஆக உயர்வு

    பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 20 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.



  • Oct 17, 2024 14:10 IST
    ஹரியானா முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்பு

    ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குறிப்பாக, பதவியேற்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததை அடுத்து உடனடியாக பதவியேற்பு விழா நடத்தப்பட்டது. முன்னதாக, 20 தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டுமென காங்கிரஸ் சார்பில் ரிட் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.



  • Oct 17, 2024 14:05 IST
    த.வெ.க. மாநாடு நடைபெறும் இடத்தில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் இடத்தில் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார். வரும் 27-ஆம் தேதி மாநாடு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.



  • Oct 17, 2024 13:35 IST
    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 20ம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாக இருப்பதாகவும், இதன் காரணமாக 22ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்ப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 17, 2024 13:28 IST
    6 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,  வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 17, 2024 13:23 IST
    ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசம் குறைப்பு

    railway announcementரயில்வே டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை ரயில்வே வாரியம் குறைத்துள்ளது. அதன்படி, 120 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருந்த நிலையில், அதனை 60 நாள்களாக குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வெளிநாட்டு பயணிகளுக்கான 365 நாள்கள் என்ற கால அளவில் மாற்றம் செய்யப்படவில்லை.



  • Oct 17, 2024 13:07 IST
    மருத்துவ முகாம்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

    சென்னை, கொளத்தூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவ முகாம்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



  • Oct 17, 2024 13:00 IST
    குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை – இ.பி.எஸ்

    குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. சென்னை ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது. 20 செ.மீ. மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என முதல்வரும், அமைச்சர்களும் கூறினர். 1,840 கி.மீ. அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகள் அ.தி.மு.க ஆட்சியில் நிறைவடைந்தது. எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை. வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் பிரச்சினை இருந்திருக்காது. திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் படி எடுத்த நடவடிக்கைகள் என்ன? அ.தி.மு.க பணிகளை தி.மு.க தொடர்ந்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது. திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கனமழை தொடர்ந்திருந்தால் மக்கள் எங்கும் சென்றிருக்க முடியாது என அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு விழாவின் போது செய்தியாளர்களிடம் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



  • Oct 17, 2024 12:47 IST
    மதுராந்தகத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

    மதுராந்தகத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தேசிய நெடுஞ்சாலை குறுக்கே உள்ள நடை மேம்பாலத்தை அகற்றும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 2009ல் கட்டப்பட்ட மேம்பாலம் பெரும் சேதம் அடைந்துள்ளதால், விபத்தை தவிர்க்க அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.



  • Oct 17, 2024 12:29 IST
    தீபாவளிக்கு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்

    தீபாவளி பண்டிக்கைக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்.19ல் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடத்திய பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர். 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 10,500 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5.5 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்புதால், அதற்கான பணிகளை திட்டமிட இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்



  • Oct 17, 2024 12:26 IST
    ரெட்டேரி ஏரியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் - ஸ்டாலின் நேரில் ஆய்வு

    ரெட்டேரி ஏரியை தூர்வாரி குடிநீர் தேவைக்காக பயன்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்



  • Oct 17, 2024 12:07 IST
    கவரைப்பேட்டை ரயில் விபத்து; விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதி

    கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், டெக்னிக்கல் டீம், சிக்னல் டீம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15 ஊழியர்களிடம் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்ற பட்டதாலேயே விபத்து நிகழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது



  • Oct 17, 2024 11:41 IST
    அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு துவக்க விழா - தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்

    அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு துவக்க விழா, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். இந்தநிகழ்வில் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்



  • Oct 17, 2024 11:21 IST
    குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    ஒரு முக்கிய தீர்ப்பில், ஜனவரி 1, 1966 க்கு முன்பு அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கிய குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A இன் அரசியலமைப்பு செல்லுபடியை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.



  • Oct 17, 2024 11:12 IST
    கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது; ஐகோர்ட்

    கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூல் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொரோனா காலத்தில் சாலை வரி விதிக்கக்கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்ததால், அதை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது



  • Oct 17, 2024 11:10 IST
    இன்று முதல் பணிக்கு திரும்பிய சாம்சங் நிறுவன ஊழியர்கள்

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து சாம்சங் நிறுவன ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர். சாம்சங் நிறுவன ஊழியர்களின் 39 நாள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது



  • Oct 17, 2024 11:08 IST
    பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு

    பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. சிவன், சரண் ஆகிய இரு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் மாகர் மற்றும் அவுரியா ஊராட்சியைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்



  • Oct 17, 2024 09:40 IST
    நேற்று ஒரே நாளில் 16.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் விற்பனை

    கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவில் பால் வாங்கிய சென்னை மக்கள். சென்னையில் நேற்று ஒரே நாளில் 16.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கத்தைவிட 2 லட்சம் லிட்டா் அதிகம் என ஆவின் நிர்வாகம் தகவல்.



  • Oct 17, 2024 09:39 IST
    1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு

    அம்மா உணவகங்கள் மூலம் நேற்று 1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. 

    மழை காரணமாக நேற்றும் இன்றும் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.



  • Oct 17, 2024 08:52 IST
    கார்களை எடுத்துச் செல்லும் உரிமையாளர்கள்

    வேளச்சேரி விஜயநகர் மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல தொடங்கியுள்ளனர்.

    ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டு இன்று காலை வெயில் அடிக்கத் தொடங்கியதால், கார்களை எடுத்துச் செல்கின்றனர்.



  • Oct 17, 2024 08:52 IST
    பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் ஐ.டி ரெய்டு

    சென்னையில் 'பூர்விகா' செல்போன் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.

    கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 



  • Oct 17, 2024 07:51 IST
    காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது

    தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது.

    மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 



Tamilnadu Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment