Tamil News Live : சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத்துப் பூர்வமாக நடத்த வேண்டும் என பிரின்ஸ் கஜேந்திர பாபு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு, மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்காது என்றும், இதனால் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்றும் விமர்சித்துள்ளார்.
100 கோடி தடுப்பூசி தயாரிக்க இலக்கு – கனடா நிறுவனத்துடன் Biological E கை கோர்ப்பு
தடுப்பூசி உற்பத்தியை, இந்தியாவில் மேற்கொள்ள, கனடாவைச் சேர்ந்த Providence எனும் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனத்துடன், ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான Biological E நிறுவனம் கை கோர்த்துள்ளது. Providence நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள PTX-Covid19-B என்ற கொரோனா தடுப்பூசி, கனாடாவில் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடித்து இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. இந்த தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிக்கத் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் பிராவிடன்ஸ் நிறுவனம் பயோலாஜிக்கல் நிறுவனத்திற்கு வழங்கும். மேலும், முதலாவதாக 2022-ம் ஆண்டு குறைந்தபட்சம் 60 கோடி தடுப்பூசி, பின்னர் 100 கோடி தடுப்பூசி தயாரிப்பதை இலக்காகக் கொண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று 1,33,228 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,33,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் 3,205 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒரே மாதத்தில் கொரோனா தொற்றிற்கு 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, மாநிலத்தில் ஒரு நாள் பாதிப்பு 26 ஆயிரத்து 513ஆக பதிவாகி உள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 21 லட்சத்து 23 ஆயிரத்து 29ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா 2-வது அலையில் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தமிழகத்தில் இதுவரை 21 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்திருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.95.99-க்கும் , டீசல் லிட்டர் ரூ.90.12-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஊரடங்கு முடியும் வரை மின்தடை இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், மின் வாரிய பாராமரிப்பு பணிகளுக்காக வழங்கப்படும் மின் தடை அனுமதி ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25,317 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 483 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாகை, மயிலாடுதுறை, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த, டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக நாளை ஆன்லைன் மூலம் மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்துகளை கேட்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளது.
2ம் தவணை கொரோனா நிவாரணம் ரூ.2000 வழங்கும் திட்டத்தை நாளை தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதே போல, நியாயவிலைக் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு வகுத்துள்ள திட்டங்கள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலேயே தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் உதவி ஆய்வாளர் மீது பிரபல ரவுடி சி.டி.மணி துப்பாக்கியால் படுகாயம் அடைந்தார் காய அடைந்த உதவி காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடங்க முதலமைச்சர் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு 45 நிறுவனங்கள் தற்போது வரை விருப்பம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான மருத்துவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பொதுவாழ்வில் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துதாகவும் ட்வீட் செய்துள்ளார்.
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் மழமழவென பரவி, மேற்கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது. ஊரடங்கு காரணமாக கோயில் மூடப்பட்டுள்ளதால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை சாந்தினியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன் ஜாமின் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
‘இசைக்கு இளைஞர் இளையராஜா. என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர். சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என இசைஞானி இளையராஜாவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 45.
புதுச்சேரி சட்டமன்றத்துக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கில், அகற்றப்பட்ட தமிழ் வாழ்க பெயர் பலகை, நாளை நிறுவப்பட்டு மீண்டும் திறக்கபட உள்ளது.
மாநிலம் முழுவதும் 49 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையராக செந்தாமரை கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எங்களது நிறுவனம் தேடுபொறி நிறுவனம் தானே தவிர சமூக வலைதளம் இல்லை எனவே அரசின் புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று கூகுள் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பின் போது தளர்வுகளுக்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளது குஜராத் அரசு
தமிழகத்தில் 49 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையராக செந்தாமரை கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய மண்டல ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர், சுமித் சரன் ரயில்வே ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி ஐ.ஜி.யாக ஜோஷி நிர்மல் குமார், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சபாநாயகர், துணை முதல்வர் மற்றும் மூன்று அமைச்சர்கள் தர வேண்டும் என்று பாஜக தரப்பு, என்.ஆர். காங்கிரஸிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் இரண்டு அமைச்சரவை பதவிகள், ஒரு சபாநாயகர் மற்றும் முதல்வர் நாடாளுமன்ற செயலாளர் பொறுப்புகள் மட்டுமே வழங்கப்படும் என்று ரங்கசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மே 7ம் தேதி அன்று முதல்வர் ரங்கசாமி பதவி ஏற்றார். வருகின்ற 10ம் தேதி அன்று அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர்.
தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்து tnschooledu21@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ அல்லது 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ +2 படிக்கும் மாணவர்களின் பொற்றோர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரேசன் கடைகளில் 13 வகையான மளிகைப் பொருட்களை வழங்கும் திட்டத்தை நாளை துவங்குகிறார் முக ஸ்டாலின். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட கொரோனா மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.37,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 4,635 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனாவை வெல்ல தடுப்பூசி ஒரு வலுவான ஆயுதம். எனவே, இந்திய மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் 100 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையத்தை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். பள்ளப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தனியார் அமைப்பு மூலம் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு நேற்று வந்தடைந்த 4.95 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. சென்னையை அடுத்து கோவைக்கு அதிகளவில் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள நிலையில் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கான மூன்று மாத வட்டியை பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குழந்தை பிறந்த தாய்மார்கள், குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்கப்படுத்துமாறு, நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.