News In Tamil Live : தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக பாஜகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் விடுதியில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமியும், பாஜக சார்பில் மாநில தலைவர் எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் இறுதிக் கட்ட முடிவு எடுக்கப்படாததால், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் - புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விரும்பி விண்ணப்பம் அளித்தவர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தவிருக்கிறார். இன்று காலை 8 மணிக்குக் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனும் மாலை 4 மணிக்கு விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் நேர்காணல் நடைபெறுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்துக் கலந்துரையாடுவதற்காக தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்புவிடுத்திருக்கிறது. இதுதொடர்பாக தேமுதிக துணை செயலாளர் எல்'கே'சுதீஷிடம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தொலைபேசியில் பேசியுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா,, பஞ்சாப் மற்றும் குஜராத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதலிடத்தில் இருக்கும் மஹாராஷ்டிராவில் ஒரேநாளில் 8,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
தாமரை மலரும் என தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்ட தமிழிசை தற்போது புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து முதல்வராக தமிழிசை ஆசைப்படுகிறார் என்று தெரிவித்துள்ள புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி யாரிடமும் ஆலோசனை கேட்காமல் மாணவர்களுக்கு தேர்வு அறிவித்தது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி என தகவல் நேற்று அமைச்சர் தங்கமணியுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக தரப்பினர் புறக்கணித்த நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில், அதிமுக சார்பில், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோரும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி கூறுகையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என்றும், "பேச்சுவார்த்தையில் இரு கட்சிகள் இடையே பெருமளவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றி என்று விளக்கம் அளித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு என்றால் காங்கிரஸ் ஏன் போராட்டம் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜகவின் குஷ்பு, கடலில் குதித்து நீச்சல் அடிக்கும் ராகுல்காந்தி ஏன் தரையில் நின்று போராட்டம் நடத்தவில்லை? என கேட்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், தபால் வாக்களிக்கும் நபர்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும், 80 வயது நிறைவடைந்தவர்கள் யார் என எப்படி தெரியும்? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் திமுக மீது பாஜக தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது" என்றும் தெரிவித்தனர்.
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்காலிக சட்டத்தின் அடிப்படையில், எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தென் நாடு மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் கணக்கில் வராத பணம் பிடிபடும் விவகாரம் குறித்து புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி, கட்டுப்பாட்டு அறை திறந்துள்ளதாக என வருமான வரித்துறை அறிவிதுள்ளது.
புகார்களை தெரிவிக்க 1800 425 6669 என்ற இலவச தொலைபேசி எண்ணும், 94453 94453 என்ற வாட்ஸாப் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
எதிர் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்வதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 7ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். அதோடு நாகர்கோவிலில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். அவரைத் தொடர்ந்து மார்ச் 10ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார்
"கூட்டணி பற்றி சில கட்சிகளுடன் பேசி வருகிறோம், கூட்டணி முடிவானதும் அறிவிப்போம், எங்களின் ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பதுதான், மற்றும் அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார்" என்று டிடிவி தினகரன்
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு 25 முதல் 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படைகள், 3 நிலை கண்காணிப்பு குழு, வீடியோ குழு, கணக்கெடுப்பு குழு செயல்படும்.மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்
சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறனர். இதில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்த முதல் சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில், தற்போது 2ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்த இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அவசர ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது. மேலும், நாளை மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் 2-வது நாளாக இன்று கமல்ஹாசன் தலைமையிலான குழு, வேட்பாளர் நேர்காணல் நடத்துகிறது. திருச்சி,புதுக்கோட்டை, நெல்லை, உள்பட 7 மாவட்டத்தினரிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது. மேலும், மார்ச் 7-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல். சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட கமல் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுக முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 18 இடங்கள் என்று ஆரம்பித்த பேச்சுவார்த்தையில், தற்போது 24 இடங்கள் வரை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வருகிற 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவிகளை ஒன்றிணைந்து சன் சத் எனும் புதிய சேனலை உருவாகியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்கவை நிகழ்வுகள் அனைத்தும் இந்த சேனலில் ஒளிபரப்பப்படும்.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனித நேய மக்கள் கட்சியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு எத்தனை இடங்கள் அளிக்கப்படும் என்ற கேள்விகளும் எழுந்தன. இந்த நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனுடனும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுடனும் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் திமுக ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்களும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களும் கூட்டணி தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights