News In Tamil : தமிழகம், புதுச்சேரி கேரளாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. அதிமுக சார்பில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5-ஆம் தேதி விருப்ப மனு விநியோகிக்கப்படும். அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிட விரும்புவோர், பிப்ரவரி 21-ம் தேதி முதல் மனுக்களை தாக்கல் செய்யலாம்.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னையில் முதியவர்களுக்கு, இலவச பேருந்துப் பயண டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று முதல் கட்டணமில்லா பயண டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், டோக்கன் பெறுவதற்காக, போக்குவரத்து கழகத்தின் https://mtcbus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மையங்களிலும் டோக்கன்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள 21 பணிமனைகள் மற்றும்19 பேருந்து நிலையங்களில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.91.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.84.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலூரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.91-க்கும், டீசல் ரூ.86.09-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், தற்போது மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.785-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மத்திய அரசு அறிமுக செய்திருந்தது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறி, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கிவைக்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.8,000 கொடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் வகையில் விரைவில் தேர்தல் பணிகளை தொடங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 24 வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை சபாநாயகருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். சுகாதார துறை அமைச்சராக இருந்து வரும் மல்லாடி கிருஷ்ணராவ் ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோரை தொடர்ந்து 3வதாக மல்லாடி கிருஷ்ணா ராவ் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட பிப்ரவரி 21 முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இந்திய அரசியல் கட்சிகளிலேயே ‘ப்ளாக்செயின்’ தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி விருப்ப மனுக்களை பெறும் கட்சி என்பதில் பெருமை அடைகிறோம். மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: “அதிமுக – பாஜக கூட்டணி இறுதிஹ் செய்யப்பட்டது; விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து தகவல் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்து தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்புக் க்ண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.
கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் ‘வலிமை’ சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில்,. நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “மோடியால் கை உயர்த்தப்பட்ட டிரம்ப்பின் கதி என்னவோ அதுதான் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கும் ஏற்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு அடியோடு ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைப்பெற்ரு வரும் 2 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி .3-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 2-வது இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. அதிகபட்சமாக அஸ்வின் 106, கோலி 62, ரோஹித் 26 ரன்கள் எடுத்துள்ளனர்.
அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் விரைவில் வெளியீடு. சிறப்பான முறையில் வெளியிட பணிபுரிந்து வருவதாக தயாரிப்பாளர் போனிகபூர் ட்வீட்.
முதலமைச்சர் பழனிசாமி வரும் 17ம் தேதி 6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் தொடங்குகிறார் . அதனைத்தொடர்ந்து, 18, 19ம் தேதிகளில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில்: 134 பந்துகளில் சதம் விளாசினார் இந்திய வீரர் அஸ்வின். சர்வதேச டெஸ்ட் போட்டியில் இது அஸ்வினின் 5-வது சதம் ஆகும். அஸ்வினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க அரசு, எரிபொருள் எண்ணெய், எரிவாயு விலையை உயர்த்தி, மக்களக்கு கொடூரப் பரிசு அளித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், அதை கணக்கில் கொள்ளாமல் அரசு செயல்படுவதாகவும், இதன் விளைவால் பெட்ரோல் விலை ‘செஞ்சுரி’ அடிக்கப்போவதாகவும், டீசல் விலை அதனைப் பின் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்
தேனி மாவட்டம் பெரியக்குளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த தங்கவேல் தேர்வு; ஏற்கெனவே 3 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அமமுக மற்றும் தேமுதிக உறுப்பினர்களின் ஆதரவுடன் திமுக உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியல் இனத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கை தடை செய்யக் கோரி ஆர்.எஸ்.பாரதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாக, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தலில் சசிகலா போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என சிலிண்டர் விலை குறித்து கமல் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரை சட்டப்பேரவைக்கான விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமனுக்கு தமிழ்நாட்டில் 15 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரியில் 5 ஆயிரம் ரூபாயும், கேரளாவில் 2 ஆயிரம் ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
மாணவர்கள் நலன்கருதி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி மையங்கள் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
.
முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகின்றன. இதன்மூலம் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமென எதிர்பார்ப்பு.
சென்னை கோயம்பேடு சந்தையில், சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 120 ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. மேலும், பெரிய வெங்காயம் 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவால், வெங்காயத்தின் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மேலும் 11,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 90 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிலிருந்து மேலும் 9,489 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1,39,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 20.67 கோடி மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்திருக்கிறது.
பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகிப்பதால், வாகன டேங்கிற்குள் தண்ணீர் இறங்கவிடாமல் பார்த்துக்கொள்வது வாடிக்கையாளர்களின் பொறுப்பு என்றும் டேங்கில் சேர்ந்த நீரால் ஏற்படும் பாதிப்பிற்கு சங்கம் பொறுப்பேற்காது என்றும் தமிழ்நாடு பெட்ரொலிய விற்பனையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளனர்.