Tamil News Today: இன்றுமுதல் 37 லட்சம் டோஸ் தமிழகத்தில் வரவுள்ளது
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜூன் மாதத்திற்கான தடுப்பூசிகள் இல்லாததால், தடுப்பூசி போடும் பணி பாதிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இன்றுமுதல் 37 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க, முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. இனி, http://cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம். மேலும், புகார்கள் குறித்த நடவடிக்கைகளைப் பற்றியும் இணையத்தளத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
நீட் தேர்வு விவகாரத்தில் ஏமாற்றுகிறது திமுக – எல்.முருகன்
நீட் தேர்வின் தாக்கத்தை அறிய ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளதாக சாடியுள்ள எல்.முருகன், இதன் மூலம் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பயனடைவதை தடுக்க திமுக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். இதுதான், ஏழை மாணவர்கள் மீது திமுக காட்டும் பரிவா என்று கேள்வி எழுப்பிய அவர், நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, திமுக ஏமாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.96.94-க்கும் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.91.15-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
QS சர்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களில் வந்துள ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி, ஐஐஎஸ்சி பெங்களூரு பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முகக்கவசம், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருசிலர் அலட்சியத்துடன் நடந்துகொள்வதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 17,300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 405 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 31,253 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 21ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சட்டமன்ற கூட்டம் கலைவாணர் அரங்கத்தில்
நடைபெறும் என்றும் ஆளுநர் உரைக்கு பின் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்று சபாநயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அந்தந்த பள்ளிகளே நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் போட்டி அதிகம் உள்ள பாடப் பிரிவுகளுக்கு மட்டும் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்றும் அந்தந்த பள்ளிகளே நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது. இது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என எதிர்ப்பு எழுந்ததால் அனுமதியை ரத்து செய்து பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய நிலை உள்ளதால், அவருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கடனை திருப்பி செலுத்திய பிறகும் உறுதி மொழி பத்திரத்தை கொடுக்க வில்லை என்று கூறி தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ரயில்வே துறையை நவீனமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ 25 ஆயிரம் கோடி செலவிடப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில், “வெளிநாடுகளில் இருந்து 2 லட்சம் டோஸ் மருந்து வந்திருப்பதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என கூறினார்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளில், தமிழகத்திற்கான நியாயமான பங்கை மத்திய அரசு அளிக்குமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுகவில், ஒபிஎஸ் இபிஎஸ் இடையே மோதல் உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், சென்னையில் இன்று பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் அதிமுகவில் எந்தவித சலசலப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை. முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழுவுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கு உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு
தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மாநிலங்களுக்கு தற்போது கூடுதலாக 25 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்களிடம் 1.33 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவே அவருக்கு 100% கட்சியில் இடம் இல்லை என்று முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வுகலால் இயல்பு நிலை திரும்பியது போன்று சென்ன்னை காட்சி அளிக்கிறது. இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். கொரோனா முதல் அலையில் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டனர். ஆனால் தற்போது கனிவாக நடக்கின்றனர். அதனை மக்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ன்று தலைமை நீதிமதி அறிவுறுத்தியுள்ளார்.
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
தென்மேற்கு பருவமழை இரண்டு நாட்களுக்கு முன்பே மும்பையில் ஆரம்பமான நிலையில் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமான மழை பெய்து வருகிறது. சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் விவகாரம் சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவியாளர் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் முடிவுக்கு வந்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டபோதிலும், வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மேலும் 92,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2219 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,62,664 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.