பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்று ரூ.5 காசுகள் குறைந்து மீண்டும் பழைய விலைக்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அராஜகம். கடந்த 2 நாட்களுக்கு முன் 23 பேரை கைது செய்த நிலையில் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Nov 12, 2024 21:54 ISTசென்னையில் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை
சென்னை திருவொற்றியூரில் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை தடுக்க முயன்ற கணவருக்கும் தலையில் சரமாரி வெட்டு. வெட்டிவிட்டு தப்பியோடிய இளைஞரை மடக்கி பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். போதையில் மாமூல் கேட்டு மிரட்டிய நிலையில், தர மறுத்ததால் வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Nov 12, 2024 21:45 ISTநாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன், மாரடைப்பால் உயிரிழப்பு
வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு வெளியே புறப்பட்டவருக்கு நெஞ்சுவலி ஏற்பட தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்
-
Nov 12, 2024 21:45 ISTசுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி முதல் அவிநாசி பாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில், வேலம்பட்டி பகுதியில் இன்று நள்ளிரவு முதல் திறக்கப்பட உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
-
Nov 12, 2024 21:39 ISTவாய்மொழி கோரிக்கைகள் ஏற்கப்படாது: உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அறிவிப்பு
உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வாய்மொழி கோரிக்கைகள் எற்கப்பட மாட்டாது என்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சஞ்சிவ் கண்ணா அறிவித்துள்ளார். வழக்கறிஞர்கள் உரிய முறையில் ஈமெயில் அல்லது கடிதம் மூலம் காரணத்தை சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
Nov 12, 2024 19:51 ISTதீப திருவிழா - பக்தர்களுக்கு கட்டுப்பாடு
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் மலையேற 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு ஆகியோர் அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வு கூட்டத்தில் முடிவு
-
Nov 12, 2024 19:50 ISTஅரசு ஊழியர்கள் குறித்த கருத்து: இ.பி.எஸ்.க்கு தங்கம் தென்னரசு பதில்
அரசு ஊழியர்களை ஒடுக்கிய கபட வேடதாரி பழனிசாமி, அரசு ஊழியர் நலன் பற்றி பேசலாமா? "அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளை நீக்கிய அரசு திராவிட மாடல் அரசு" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
Nov 12, 2024 19:46 ISTதிருமணம் செய்த ஆதினம்: ஆசிரமத்தின் கேட்டை மக்கள் மூடியதால் பரபரப்பு
தஞ்சை சூரியனார் கோயில் சிவவாக்கிய யோகிகள் ஆதீன மடத்தின் ஆதீன மடாதிபதி மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள் அண்மையில் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள் கேட்டை இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Nov 12, 2024 19:26 ISTசிதம்பரத்தில் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு
சிதம்பரத்தில் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார். திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பலகார வியாபாரியான மாணிக்கம் (73), இன்று பலகாரம் தயாரிக்கும் போது மயங்கி கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
-
Nov 12, 2024 19:24 ISTபுதிய பாம்பன் ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி 2 நாட்கள் ஆய்வு
ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து 2.5கிமீ தொலைவில், ரூ.535 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய ரயில் பாலம் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன் ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கடலில் 101 தூண்களுடன் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலம் கூடிய விரையில் திறக்கப்பட்ட உள்ள நிலையில், பாம்பன் பாலம் பாதுகாப்பு குறித்து தெற்கு ரயில்வே ஆணையர் செளத்ரி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 தினங்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். நாளை மண்டபம் – பாம்பன் பாலம் இடையே உள்ள ரயில்வே வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.
நாளை மறுநாள் புதிய பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டு தூக்கு மேம்பாலத்தையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். நாளை மறுநாள் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
பாலத்தின் பாதுகாப்பு குறித்து ரயில்வே ஆணையர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பாம்பன் பாலம் திறப்பதற்கான தேதி அறிவிக்கப்படும் என மதுரை கோட்டம் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 12, 2024 19:08 IST"அரசு ஊழியர்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறார் இபிஎஸ்" - தங்கம் தென்னரசு
தி.மு.க வெளியிட்ட அறிக்கையை மொட்டை காகித அறிக்கை என கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். “அரசு ஊழியர்களை ஒடுக்கிய கபட வேடதாரி பழனிசாமி, அரசு ஊழியர் நலன் பற்றி பேசலாமா? அரசு ஊழியர்கள் தி.மு.க பக்கம்தான் நிற்பார்கள் என்பதை தேர்தல் வரலாறு சொல்லும்” எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிகையில்; “அரசு ஊழியர் தொடர்பாகத் தி.மு.க. வெளியிட்ட விளக்க அறிக்கையை ‘மொட்டைக் காகித அறிக்கை’ எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. மொட்டைக் காகித அறிக்கை என்றால், அதனை எப்படிப் பத்திரிகைகள் பிரசுரித்திருக்கும்? டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டிருக்கும்? என்ற அடிப்படைகூட தெரியாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பாரா?
‘மொட்டைக் காகித அறிக்கை’ என்றால் அது அ.தி.மு.க. என்பதுதானே உலக வரலாறு! ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளுக்கும் சேர்த்து ’மொட்டையாக’ வேட்பாளர் பட்டியல் வெளியானது; 2007-இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் ‘எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் வாக்களிக்கப் போனார்கள்’ என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டது; டான்சி வழக்கில், ‘ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை’ என ஜெயலலிதா சொன்னது எல்லாம் அ.தி.மு.க அடித்த மொட்டைதானே!
அனைத்துப் பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான் ஒரு அரசின் கடமை. அரசு ஊழியர்கள்கூட குடிமக்கள்தான். ஆனால், அவர்களை அ.தி.மு.க. என்றைக்குமே மதித்ததில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும் அரசு ஊழியர்களைக் கனிவாகவே தி.மு.க. நடத்தும். ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி என யார் ஆட்சியில் இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. உரிமைக்காகப் போராடியவர்கள் மீது வழக்குகளும் துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்பதுதான் கடந்தகால வரலாறு.2001-இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 24-7- 2001 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் பேசும்போது ‘’அரசின் வரி வருவாயில் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது” என்று சொல்லி அரசு ஊழியர்கள் மீதான வெறுப்பை வெளிக்காட்டினார். அதோடு அரசு ஊழியர்கள் அனுபவித்து வந்த பல சலுகைகளை அதிரடியாகப் பறித்தார். அதனை எதிர்த்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்கள் 2003 ஜூலை 2-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அடக்குமுறையைப் பிரயோகித்து ஒடுக்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை விசாரணை நடத்தாமல் டிஸ்மிஸ் செய்யும் எஸ்மா சட்டத்தை 04-07-2003-இல் பிறப்பித்தார் ஜெயலலிதா. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை எல்லாம் நள்ளிரவில் வீடு தேடிப் போய்க் கைது செய்து சிறையில் அடைத்தனர். 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தனர். ஒன்றரை இலட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்தனர். ’ஸ்டிரைக் செய்ய மாட்டோம்’ என்ற உறுதிமொழியுடன் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிப் பலரை மீண்டும் வேலைக்குச் சேர்த்தார்கள். ’’கடமையைச் செய்யக் காத்திருக்கிறோம் அரசு ஊழியர்களுக்கு மறுவாழ்வு தாருங்கள்’’ என முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் பாண்டுரங்கன் விடுத்த கோரிக்கையை எல்லாம் ஜெயலலிதா புறந்தள்ளினார்.
ஜெயலலிதாவுக்குக் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல பழனிசாமி. ஜெயலலிதாவின் வழித்தோன்றலான பழனிசாமிதான் முதலமைச்சராக இருந்தபோது தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளத்தைக் குறிப்பிட்டு ’’இவ்வளவு சம்பளமா?’’ என இழிவுபடுத்தினார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய அரசு ஊழியர்களையும் , ஆசிரியர்களையும் பார்த்து ’’அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?’’ என தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.
பழனிசாமி ஆட்சியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ 2019 ஜனவரியில் போராட்டத்தை நடத்தியது. அன்றைக்கு பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு பொறுப்பு வகித்த அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கமான கேலி கிண்டல் பத்திரிகையாளர் சந்திப்பைப் போலவே அந்தப் போராட்டத்தையும் டீல் செய்தார். ’’கோரிக்கையை ஏற்க முடியாது. பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும்’’ என்றெல்லாம் மிரட்டல் விடுத்தார். ’’அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர, மக்களிடம் கூடுதல் வரி விதிக்க வேண்டி வரும்’’ எனக் காட்டமாகச் சொன்னார்.
அரசு ஊழியர் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது 2019 ஜனவரி 27-ஆம் தேதி அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரில் விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. `பிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர்’ எனச் சொல்லி அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தையும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு அரசு ஊழியர்களை அவமானப்படுத்தியது யார்? ’தனியாரைவிட அரசு ஊழியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு எதற்குப் போராட்டம்?’ என அந்த விளம்பரத்தில் கேள்வி எழுப்பியது எல்லாம் பச்சைப் பொய் பழனிசாமிக்கு மறந்துவிட்டதா? இந்த விளம்பரத்தை அனைத்து நாளிதழ்களிலும் அனைத்துப் பதிப்புகளிலும் அந்த விளம்பரத்தை வெளியிடுவதற்காக 50 லட்சம் ரூபாயைச் செலவழித்தனர்.
இதேபோலதான் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையும் ஒடுக்கியது பழனிசாமி அரசு. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தைப் போலவே பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஊதிய உயர்வு விவரங்களைத் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதற்காக அன்றைக்கு 46,54,361 ரூபாய் செலவிட்டனர்.
பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது செப்டம்பர் 7, 2017-ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, 7-வது ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் 9 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் போராட்டத்தையும் கோரிக்கைகளையும் சிறிதும் மதிக்காமல் 85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த அரசுதான் அ.தி.மு.க. அரசு. இப்போராட்டங்களுக்குப் பிறகுதான் அன்றைய அ.தி.மு.க. அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது. இன்று அதனைத் தனது சாதனையாக குறிப்பிடும் பழனிசாமி அவர்களின் உள்ளத்தில் உண்மை இருந்தால் அதைச் சொல்வதற்குக் கூசியிருக்க வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக 2016, 2017, 2019 ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மீது குற்றக் குறிப்பாணைகள் (17ஙி), இடமாற்றம், பணியிடைநீக்கம், வழக்கு போன்ற ஒடுக்கு முறைகளை ஏவிய பழனிசாமி “எங்களது ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்த முடியும்” எனக் கூறுவது பச்சைப் பொய்யாகும். “கெட்டிக் காரன் புளுகு எட்டு நாளைக்கு” என்பார்கள் ஆனால் பழனிசாமி அடித்து விடுகின்ற பொய்கள் எட்டு நிமிடத்திற்குக் கூட தாங்காது.
ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை ஒடுக்கிய பழனிசாமி இன்றைக்கு அரசு ஊழியர்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறார். ’’பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. ஆட்சியில் இருந்தபோது ஷிணீபீவீst நிஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீt போல ஆட்சி நடத்தி அரசு ஊழியர்களை ஒடுக்கியவர்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாரால், எப்போது திரும்பப் பெறப்பட்டது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் இல்லை. 2021-ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் 13.10.2021 அன்று வெளியிட்ட அரசாணையில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.
அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளை நீக்கிய அரசு திராவிட மாடல் அரசு. மேலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் செயல்படும் இந்த அரசு அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் கடமையை என்றும் கைவிட்டதில்லை. அரசு ஊழியர்களுக்கும் தி.மு.க.விற்கும் இடையிலான உறவு மிகவும் வலிமையானதாகும். அதில் பிளவு ஏற்படுத்தலாம் என பகற்கனவு காணும் பழனிசாமியின் மீது அனுதாபம் கொள்ளலாமே தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.
தொடர்ந்து அரசு வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டும் அரசாக விளங்கும் இந்த அரசு, அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாத்தும் அவர்கள் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. அதற்குச் சாட்சியமாய் விளங்குவதுதான் தொடர்ந்து தேர்தல்களில் மக்கள் தி.மு.க.விற்கு அளித்து வரும் வெற்றிகள்.
’கபட வேடதாரி’ பழனிசாமியையும் அ.தி.மு.க.வையும் அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள். அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தி.மு.க.தான் என்பதை அரசு ஊழியர்கள் அறிவார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வெறுப்பு அ.தி.மு.க.வின் உதிரத்திலேயே ஊறியிருக்கிறது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். இந்த உண்மைகளை மறைத்து விட்டுப் பழனிசாமி இன்று வடிக்கும் முதலைக்கண்ணீரைப் பார்த்தால் முதலையே தோற்றுவிடும் போலிருக்கிறது”என தெரிவித்துள்ளார்.
-
Nov 12, 2024 18:07 IST11 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!
புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Nov 12, 2024 18:06 ISTஅம்பத்தூர் தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
Nov 12, 2024 17:21 ISTமீனாட்சி கல்லூரியை கண்டித்து மாணவர் சங்கம் மறியல்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனாட்சி கல்லூரியில் மதரீதியாக நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கண்டனம் தெரிவித்து மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டால் தேர்வுரீதியாக நெருக்கடிக்கு ஆளாவீர்கள் என பேராசிரியை ஒருவர் மிரட்டியதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
-
Nov 12, 2024 17:20 ISTமத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (12-11-2024) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (12-11-2024) கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துவதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
09.11.2024 அன்று, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் IND-TN-10-MM-958 மற்றும் IND-TN-10-MM-641 ஆகிய பதிவெண்களைக் கொண்ட 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 12.11.2024 அன்று, நாகப்பட்டினத்திலிருந்து பதிவெண் IND-TN-06-MM-8478 என்ற மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024-ம் ஆண்டில் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Nov 12, 2024 16:20 ISTஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா கட்டடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Nov 12, 2024 15:40 ISTதமிழக ராணுவ வீரர் வீர மரணம் !
ராஜஸ்தானில் பணியில் இருந்த தேனியை சேர்ந்த ராணுவ வீரர் முத்து வீரமரணம் அடைந்ததையடுத்து உடல் தனி விமானம் மூலம் மதுரை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
Nov 12, 2024 15:22 ISTத.வெ.க-வுக்குச் செல்பவர்கள் நா. த.க வை சேர்ந்தவர்களே கிடையாது - சீமான்
த.வெ.க-வுக்குச் செல்பவர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களே கிடையாது. என்னை விரும்புகிற மக்கள், பொழுதுபோக்குத் தளத்தில் தலைவனை தேடியவர்கள் அல்ல என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!
-
Nov 12, 2024 15:19 ISTஉதகை நகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, ரூ. 11.70 லட்சத்துடன் பிடிபட்ட விவகாரத்தில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, துறை ரீதியான விசாரணை நடை பெற்று வருகிறது.
-
Nov 12, 2024 14:57 ISTவாய்மொழி கோரிக்கை கூடாது - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ள கோரி இனி வாய்மொழியாக கோரிக்கை வைக்ககூடாது என்றும் மின்னஞ்சல் மற்றும் எழுத்து பூர்வமாக முறையீடு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா கூறியுள்ளார்.
-
Nov 12, 2024 14:34 IST"இபிஎஸ் தன்நிலை மறந்து விமர்சிக்கிறார்" - மு.க.ஸ்டாலின்
“சிலர் வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள்; இபிஎஸ் தன்நிலை மறந்து விமர்சிக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தையும் முன்பை விடச் சிறப்பாக திராவிட மாடல் ஆட்சிதான் நடத்தி வருகிறது ” என்று இபிஎஸ் விமர்சனங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Nov 12, 2024 14:08 ISTஉடனடி நடவடிக்கை வேண்டும்..!
தமிழக-இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும்| தொடங்க உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எம்.பி. நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார்.
-
Nov 12, 2024 14:00 ISTதிருவொற்றியூர் தனியார் பள்ளி நாளை திறப்பு - கோட்டாட்சியர் இப்ராஹிம்
வாயுக்கசிவு காரணமாக திருவொற்றியூர் தனியார் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில் நாளை 10, 11, 12ஆம் வகுப்புகள் நடைபெறும் எனவும் ஒரு வாரம் பள்ளியில் இருந்து மருத்துவ குழு கண்காணிக்கும் என்றும் அடிக்கடி மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் கோட்டாட்சியர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
-
Nov 12, 2024 13:57 ISTவள்ளுவர் சிலை வெள்ளி விழா..!
டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Nov 12, 2024 13:55 IST13 மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணிக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
Nov 12, 2024 13:49 ISTபுதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்
புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்னாயக் பொறுப்பேற்று உள்ளார்.
-
Nov 12, 2024 13:39 ISTகங்குவா படத்துக்கு மீண்டும் சிக்கல்
ரூ.1.60 கோடியை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Nov 12, 2024 13:23 ISTவிஜய்க்கு சீமான் கேள்வி
உலக அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள விஜய், தனது கட்சிக்கு உலக வெற்றிக் கழகம் என பெயர் வைக்காமல், தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்தது ஏன் என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Nov 12, 2024 12:35 ISTவிமான நிலைய பாதுகாப்பை மீறி கஞ்சா கடத்தல்
சென்னை விமான நிலையம் அருகே உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 1 கிலோ 300 கிராம் எடையிலான கஞ்சா, பாங்காக், டெல்லி, சென்னை விமான நிலையங்களின் பாதுகாப்பை மீறி கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பேரில் கடத்தலில் ஈடுபட்ட சென்னை மண்ணடியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
-
Nov 12, 2024 12:05 ISTஊராட்சி கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர்
17 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
Nov 12, 2024 12:01 ISTஉ.பி-யில் மண் சரிவு: 4 பெண்கள் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலம், கஸ்கஞ்ச் பகுதியில் மண் சரிவில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், பலத்த காயம் அடைந்த 5 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
Nov 12, 2024 11:19 ISTஊழல் பட்டியலை தயார் செய்யும் த.வெ.க
தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை தயார் செய்ய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் அணியின் உதவியோடு திமுக மற்றும் அதிமுகவை குறிவைத்து ஊழல் பட்டியல் தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Nov 12, 2024 10:52 ISTமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - துணை முதல்வர்
கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 129 நிவாரண மையங்கள், 20 உணவு தயாரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.மழை பாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,
-
Nov 12, 2024 10:47 ISTஅயோத்தி ராமர் கோயிலுக்கு மிரட்டல்
அயோத்தி ராமர் கோயில் உள்பட பல இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பந்வந்த் சிங் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தாக்குதல் நடத்தப்படுமென மிரட்டல் விடுத்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-
Nov 12, 2024 10:43 ISTசென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று இரவு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார்.
-
Nov 12, 2024 10:39 ISTதுணை முதலமைச்சர் ஆய்வு
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அவர் ஆய்வு செய்தார்.
-
Nov 12, 2024 09:59 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Nov 12, 2024 09:40 ISTதமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்பகுதியை ஒட்டி நிலககிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 12, 2024 09:20 ISTதமிழகத்தில் 6 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 12, 2024 08:22 ISTசென்னையில் காலை முதலே மழை
சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு, அண்ணா சாலை, எழும்பூர் புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.