Tamil News Today Updates : தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என்றும் நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்தம் உருவாகியிருப்பதால், அடுத்த 48 மணிநேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இது, வருகிற 25-ம் தேதி தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் அதனால் நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நவம்பர் 25-ம் தேதி முதல் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கிடேயே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்குவதற்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதில் பயணிக்க இ -பாஸ் அவசியமில்லை.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5% சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக- பாஜக கூட்டணித்தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சாலையில் சிறிது தூரம் நடந்து சென்ற அமித்ஷா, பின்னர் காரில் புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7,69,995 ஆக அதிகரித்துள்ளது.
லடாக்கில் நிகழ்ந்த எதிர்பாராத வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் நாயக் கருப்பசாமியின் உடல் சொந்த ஊரான திட்டங்குளத்தில் 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
அசாம் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான தருண் கோகோய்-ன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக குவஹாத்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் செயலிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராகப் பாஜகஅரசு கொண்டு வந்திருக்கும் சட்டங்களை எதிர்த்து தொழிலாளர் அமைப்புகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் சார்பில் நவம்பர் 26,27 தேதிகளில் இந்தியாவெங்கும் நடைபெறும் போராட்டங்களை வெற்றிபெறச் செய்வோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி தான் வெற்றி கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ் . அழகிரி தெரிவித்தார்
தமிழகத்தை நோக்கி புயல் வரும் நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். இதுமட்டுமல்லாது அடையாள ஆவணங்களான ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகங்கள், கல்விச் சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நீர் படாத வகையில் பிளாஸ்டிக் உரைகளைக் கொண்டு பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும் புயல் வருவதற்கு முன்பு, வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுது பார்த்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும்.
‘நிவர்’ புயல் : தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
இந்தியப் பெருங்கடல் தென் வங்காள விரிகுடாவின் மையப் பகுதிகள் நவம்பர் 22 அன்று மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 60 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
நவம்பர் 23 அன்று மணிக்கு 45-55 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 65 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
நவம்பர் 24 அன்று மணிக்கு 55-65 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 75 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
நவம்பர் 25 அன்று மணிக்கு 80-90 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 100 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.
மயிலாடுதுறையில் குத்தாலத்தில் தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், “மற்ற கட்சியினரை கைது செய்தால் மாலையே விட்டுவிடுகின்றனர். ஆனால், உதயநிதியை மட்டும் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர். பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? கைது, சிறை, சித்ரவதை என அனைத்தையும் பார்த்தவர்கள்தான் திமுகவினர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சிறையில் ஓராண்டு காலம் இருந்தது மட்டுமில்லாமல் அடி, உதைபட்டு, ரத்தம் சொட்ட சிறையில் இருந்தவர். கருணாநிதி, மாறன் படாத கொடுமைகள் இல்லை. எல்லோரும் சிறைவாசம் கண்டவர்கள்தான். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராகத்தான் இருக்கிறார். ஆனால், இத்தகைய கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு இருக்க நாங்கள் விரும்பவில்லை.” என்று கூறினார்.
அங்கீகார நீட்டிப்பு பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள், ஏதேனும் குறை இருப்பின் அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும். எந்நேரமும் ஆய்வுக்கு வரலாம் என்பதால் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை சரி செய்து அதன் விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அகில இந்திய இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்துக்கு செய்தது என்ன என்று நேற்று சென்னையில் அரசு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பினார். அமித்ஷாவுக்கு பதிலளிக்கும் விதமாக, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, “இந்தி திணிப்பு, தமிழகத்தின் வருவாய்ப் பறிப்பு தவிர, 6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நிறைவடைந்தது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மொத்தம் உள்ள 1,303 உறுப்பினர் வார்க்குகளில் 1,050 பேர் வாக்களித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசாரப் பயணம் மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டார். இன்று நாகை மாவட்டம் திருவெண்காட்டில் பயணத்தை தொடங்கிய உதயநிதி குத்தாலத்தில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். குத்தாலத்தில் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதியையும் திமுக தொண்டர்களையும் போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டை மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றுவரும் முகாமுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் தன் பெயர், தம் மகள்களின் பெயர் உள்ளதா என்று சரிபார்த்தார்.
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ‘நிவர்’ என பெயரிடப்பட்டுள்ளது. தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
மத்திய தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில் நீதிபதி கிருபாகரன், “2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகர்கள் கல்வியில் சிறந்தவர்களாக வாழ்ந்துள்ளனர் என்பதற்கு கீழடி அகழாய்வு சாட்சி; தமிழ் சமணத்தைதான் பேசுகிறது. ஐம்பெரும் காப்பியங்களும் சமணத்தைதான் பேசுகின்றன. தமிழ் மொழியை வளர்க்க 3 சங்கங்களை உருவாக்கிய நகரம் மதுரை. நம் தொன்மையை மறந்து வேற்று நாடுகளின் பண்பாடு மீது ஈர்ப்பு வந்துவிட்டது. அந்த எண்ணம் மாற வேண்டும். பழமையை காக்க வேண்டுமே தவிர அழிக்கக் கூடாது.” என்று கூறினார்.
சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், நேர்முக தேர்வுக்கு செல்பவர்கள், வியாபாரிகளுக்கும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த உத்தரவு நாளை முதல் இந்த அனுமதி அமலுக்கு வரும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 25 முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கலாச்சார நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்கலாம். அரசியல் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கான தடை தொடரும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் தொடங்கும். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தமிழக மக்கள் கொடுத்த அடியை விட சட்டமன்ற தேர்தலில் பலமான அடியை தருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும். அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறும். இந்த புயல் நவம்பர் 25ம் தேதி மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையக் கடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக அடுத்த 5 நாட்கள் அரசு அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தலைமை இடத்திலேயே தங்கியிருந்து மழை பாதிப்பு நிலவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஈஸ்வரன் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு வைத்திருந்தது உண்மையான பாம்பு அல்ல, அது வெறும் ரப்பர் என்று உறுதி செய்த வனத்துறை அதிகாரி இப்படி தத்ரூபமாகக் காட்சியை வடிவமைத்த படக்குழுவினருக்கு தன் பாராட்டையும் பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று வெளியாகி வரும் தகவல்கள் உண்மையில்லை என்றும் அவர் நலமோடு போயஸ் கார்டன் இல்லத்தில் இருக்கிறார் என்றும் பிஆர்ஓ ரியாஸ் தகவல் தெரிவித்திருக்கிறார்.
அதிமுக – பாஜக கூட்டணியைத் தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகவும் அதில் 25 தொகுதிகள் வரை கொடுப்பதாக அதிமுக உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து அனைவரிடமும் ஆலோசித்து முடிவு எடுப்பதாக அதிமுக தலைமை உறுதிசெய்திருக்கிறது.
அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தைக் கட்சியாகப் பதிவு செய்வதை நிறுத்தியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதனைத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதமாக எழுதியிருக்கிறார் எஸ்.ஏ.சி.
தன் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் அமித் ஷா.
சென்னை லீலா பேலஸில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சந்தித்துப் பேசினார். உயர் கல்வித்துறையில் மத்திய அரசு – தமிழக அரசு இடையே பல முரண்பாடுகள் உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் இன்று தொடங்கியது. மாலை 4 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்தலில் 1,303 பேர் வாக்களிக்க உள்ளனர்
தமிழகத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.53-க்கும், டீசல் ரூ.76.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை 7 காசுகளும், டீசல் விலை 18 காசுகளும் உயர்ந்துள்ளது.