பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 233-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் ஏரிகளின் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 42.14% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 45.13% ; புழல் - 73.06% ; பூண்டி - 15.63% ; சோழவரம் - 7.77% ; கண்ணன்கோட்டை - 62%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Nov 05, 2024 20:08 IST‘2026-ல் எதிர்த்து யார் வந்தாலும் தி.மு.க-வுக்கு தான் வெற்றி’ - உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: “2026-ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் தி.மு.க-வுக்கு தான் வெற்றி” என்று கூறினார்.
-
Nov 05, 2024 19:36 ISTநெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பெருங்கால் பாசனத்தில் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 06.11.2024 முதல் 31.03.2025 முடிய 146 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
-
Nov 05, 2024 18:29 ISTபென்சில்வேனியா மற்றும் மிச்சிகன்மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடக்கம்
அதிக வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய ஸ்விங் மாநிலங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட அமெரிக்க மாநிலங்களில் இப்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
-
Nov 05, 2024 17:44 ISTபுதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு: அ.தி.மு.க மனு தள்ளுபடி
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை, உயர் நீதிமன்றம் கலைத்ததற்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், 2018ம் ஆண்டு வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீதிமன்றம், அந்த ஆணையத்தால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக அதைக் கலைத்து உத்தரவிட்டது
-
Nov 05, 2024 17:39 ISTஅமெரிக்க அதிபர் தேர்தல்: பென்சில்வேனியாவில் வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்கள்
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், முக்கிய மாநிலமான பென்சில்வேனியாவில் - வாக்கெடுப்பு தொடங்க உள்ளதால் வாக்காளர் வரிசைகள் வர தொடங்கியுள்ளன என்று பிபிசி தெரிவித்துள்ளது. இந்த பகுதியில்,கமலா ஹாரிஸ் தனது இறுதிப் பேரணியில் உரையாற்றியபோது, "ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்" என்பதற்கான புதிய அடையாளங்கள் விளக்குக் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ளன.
-
Nov 05, 2024 17:36 ISTஅமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்துக்கணிப்பு நிலவரங்கள் என்ன?
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில்,பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டையும் புரட்டிப் போடக்கூடிய தேர்தல்களில் காங்கிரஸின் கட்டுப்பாடு ஆபத்தில் உள்ளது. கட்சி சார்பற்ற ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி, செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், ஜனநாயகக் கட்சியினர் 51-49 பெரும்பான்மையைப் பெற்றுள்ள செனட்டைத் திரும்பப் பெறுவதற்கு குடியரசுக் கட்சியினர் நல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், குடியரசுக் கட்சியினர் ஹவுஸில் தங்கள் பிடியை இழக்கக்கூடும், ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையைப் பெற நான்கு இடங்கள் மட்டுமே தேவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 43% பேர் குடியரசுக் கட்சி வேட்பாளரை தங்கள் மாவட்டத்தில் ஆதரிப்பதாகவும், 43% பேர் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை ஆதரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. -
Nov 05, 2024 17:26 ISTசர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட நடிகை கஸ்தூரி
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த, நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் மீது மரியாதை வைத்துள்ளேன்; எனது நோக்கம் யாரையும் புண்படுத்துவது கிடையாது என்று கூறியுள்ளார்.ய
-
Nov 05, 2024 16:09 ISTஅமரன் திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்த எச்.ராஜா
"இராணுவ வீரர்களின் வாழ்வியலை கண்ணாடிபோல் பிராதிபலித்து காலத்திலும் அழியாத காவியம் போல் திரையில் தீட்டப்பட்ட ஓவியம் போல் திகழ்கிறது அமரன்" என பா.ஜ.க மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
Nov 05, 2024 15:39 IST2036 யில் ஒலிம்பிக்கை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்து கடிதம்
2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆர்வம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இந்திய ஒலிம்பிக் கமிட்டி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Nov 05, 2024 15:34 ISTசென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் தொடக்கம்
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கின. கோட்டூர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் வரும் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளாக இப்போட்டிகள் நடக்கின்றன.
-
Nov 05, 2024 15:15 ISTஅமெரிக்க அதிபர் தேர்தல் - இருநாட்டு உறவில் தாக்கம் ஏற்படுத்துமா?
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் இந்தியா - அமெரிக்கா உறவில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானால் இந்தியா-அமெரிக்க உறவு வலுப்பெறும் என்றும் ட்ரம்ப் அதிபரானால், இருநாடுகள் உறவில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி இருக்காது எனவும் கருத்து.
-
Nov 05, 2024 15:13 ISTபள்ளியில் வாயு கசிவு - அறிக்கை தாக்கல்
சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் காற்றில் அமோனியா அதிகம் இல்லை என்றும், வாயு கசிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் துறை செயலாளரிடம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்த நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
-
Nov 05, 2024 15:09 ISTஓட்டுநருக்கு திடீரென வலிப்பு - 3 மாணவிகள் படுகாயம்
ஈரோட்டில் தனியார் கல்லூரி பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானத்தில் 3 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
-
Nov 05, 2024 14:58 ISTதமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
இடிக்கப்பட்ட திருவண்ணாமலை அம்மணி அம்மாள் மடத்தை தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மடத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையில் தற்போதுள்ள நிலையை தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழனிவேல் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
-
Nov 05, 2024 14:55 ISTஇர்ஃபான் விவகாரம் - மருத்துவருக்கு நோட்டீஸ்
இர்பான் தனக்குப் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில், மருத்துவமனையில் அதனை அனுமதித்த டாக்டர் நிவேதிதாவிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 05, 2024 14:24 IST4 மாவட்டங்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Nov 05, 2024 14:15 ISTநடிகை கஸ்தூரி மீது வீரலட்சுமி புகார்
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.
-
Nov 05, 2024 14:14 ISTதூத்துக்குடிக்கு விமானத்தில் அழைத்து சென்ற உர ஏஜென்சி
தாம்பரத்தில் அமைத்துள்ள தனது ஏஜென்சியில் உரம் வாங்கும் 100 விவசாயிகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் அழைத்து சென்ற பிருந்தா ஏஜென்சி உரிமையாளார். ஸ்பிக் உர நிறுவனத்திடம் உரம் வாங்கி சுமார் 21 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த ஏஜென்சி விற்று வருகிறது. இந்த பயணத்தின் மூலம் தாங்கள் வாங்கும் உரம் தயாரிக்கப்படும் ஸ்பிக் உர நிறுவனத்தை விவசாயிகள் சுற்றி பார்க்க உள்ளனர்.
#Watch | தாம்பரம்: தனது ஏஜென்சியில் உரம் வாங்கும் 100 விவசாயிகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் அழைத்து சென்ற பிருந்தா ஏஜென்சி உரிமையாளார்
— Sun News (@sunnewstamil) November 5, 2024
ஸ்பிக் உர நிறுவனத்திடம் உரம் வாங்கி சுமார் 21 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு… pic.twitter.com/oygtTNq5nJ -
Nov 05, 2024 13:57 ISTவிஜய்யுடன் ஒரே மேடையில் பங்கேற்பா? - திருமா பதில்
"புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் கலந்து கொள்வது குறித்து கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும. நானும், விஜய்யும் பங்கேற்பது பற்றி ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக உடன் கூட்டணி தொடரும். புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவதாக கூறப்பட்டிருந்தது. அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, விஜய்யுடன்
ஒரே மேடையில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். -
Nov 05, 2024 12:51 ISTமத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு
மத்திய அமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி சந்திரசேகரை மிரட்டிய வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிக்கிக் குமாரசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி சந்திரசேகரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. -
Nov 05, 2024 12:36 ISTபுதிய தகவல் தொழில்நுட்ப வளாகம் திறந்து வைப்பு
கோவை, விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். ரூ. 114.16 கோடி செலவில் 3.04 ஏக்கர் பரப்பில் 8 தளங்களுடன் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
-
Nov 05, 2024 12:33 ISTகாவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் நாலை டெல்லியில் நடைபெறவுள்ளது. ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Nov 05, 2024 12:19 ISTதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 10-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
Nov 05, 2024 12:09 ISTநடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
நடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி பேச்சினால், தெலுங்கு பேசும் 2 கோடி மக்கள் வேதனை அடைந்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர்.
-
Nov 05, 2024 12:04 IST5 கொத்தடிமைகள் மீட்பு
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் உள்பட 5 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர். இந்த விவகாரத்தில், லட்சக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் நிலையில், விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
-
Nov 05, 2024 11:44 ISTஅடுத்த தேர்தலிலும் தி.மு.கவுடன் தான் கூட்டணி - திருமாவளவன்
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடரும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
Nov 05, 2024 11:26 ISTஉதகை மலை ரயில் தற்காலிகமாக நிறுத்தம்
உதலை மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
-
Nov 05, 2024 11:23 ISTதனியார் பள்ளியில் வாயு கசிவு எதிரொலி - 3 நாள்கள் விடுமுறை
சென்னை, திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாக மூன்று நாள்கள் ஆய்வு செய்து வார இறுதியில் அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனிடையே, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கையில் வாயு கசிவுக்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
-
Nov 05, 2024 10:51 IST8 மாவட்டங்களில் மிதமான மழை
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 05, 2024 10:49 ISTசிறுவாணி நீர் - கேரள அரசிடம் பேச்சுவார்த்தை
"தமிழ்நாட்டுக்கு உரிய சிறுவாணி தண்ணீரை பெற கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" - கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
-
Nov 05, 2024 10:26 ISTதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.7,355க்கும், ஒரு சவரன் ரூ.58,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Nov 05, 2024 10:03 ISTகனடாவில் இந்து கோயில் மீது தாக்குதல்- பிரதமர் மோடி கண்டனம்
கனடாவில் இந்து கோயில் மீது நடந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வன்முறை செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. இந்திய அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளுக்கும் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Nov 05, 2024 09:27 ISTகொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வ தடை
ஈரோடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றில் அமைந்துள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வ தடை விதிக்கப்பட்டது.
-
Nov 05, 2024 09:24 ISTவாயு கசிவு ஏற்பட்டு பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை
சென்னை திருவொற்றியூரில் 2வது முறையாக வாயு கசிவு ஏற்பட்டு 6 மாணவிகள் மயக்கமடைந்த தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்றும் சோதனை நடத்துகின்றனர்.
காற்றில் பரவும் வாயுக்களின் தரம் குறித்து கண்டறியும் நடமாடும் வாகனம் மூலம் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
-
Nov 05, 2024 09:13 ISTஸ்டாலின் இன்று கோவை பயணம் - நிகழ்ச்சி நிரல்
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக கள ஆய்வு மேள்கொள்ள உள்ளார். முதல்கட்டமாக இன்று கோவையில் தொடங்குகிறார்.
காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை செல்கிறார்.
காலை 11.30 மணியளவில் விளாங்குறிச்சியில் ₹114.16 கோடி செலவில் 3.04 ஏக்கர் பரப்பளவில், 8 தளங்ளுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஐடி வளாகத்தை திறந்து வைக்கிறார்.
நண்பகல் 12 மணியளவில் சுகுணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுப்பு ஆணைகளை வழங்க உள்ளார்.
மாலை 4 மணியளவில் சிவாலயா திருமண மண்டபத்தில் தங்க நகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். தங்க நகை தொழிலில் உள்ள பிரச்னைகளை அவரிடம் கேட்டறிய உள்ளார்.
அதன்பின் போத்தனூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.
-
Nov 05, 2024 08:07 ISTஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? இன்று தேர்தல்
அமெரிக்காவில் 50 மாகாணங்களில் இன்று தேர்தல்; மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ள நிலையில், இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் ஒவ்வொரு மாகாணங்களாக வாக்குப்பதிவு தொடங்கும். இந்திய நேரப்படிப நாளை(நவ.6) காலை 5.30 மணிக்கு அனைத்து மாகாணங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடையும்.
வாக்குப்பதிவு முடிந்த உடனேயே மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ்-ம், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பும் போட்டியிட்டு உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.