தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்த நிலையில், இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் படி, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், மயிலாடுதுறை உள்பட 11 மாவட்டங்களில் காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களிலும் இதே தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில தளர்வுகளும் அந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே, தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 20,421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சையில் இருந்த 434 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு சுயசிகிச்சை; மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு :
கொரோனா தொற்று அறிகுறிகளை கூறி மருந்தகங்களில் மருந்தகங்களில் மருந்து வாங்குவோரின் விவரங்களை தினமும் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இதனை கண்காணிக்க அதிகாரிகளையும் நியமித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு சந்தை வியாரிகளுக்கு தடுப்பூசி ; மாநகராட்சி ஆணையர் :
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலாகி உள்ளது. இதனால், மொத்த விற்பனைக்காக கோயம்பேடு காய்கறி சந்தையும் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி, கோயம்பேடு சந்தையில் உள்ள வியாபாரிகள் அடுத்த 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள் வேண்டும். இல்லை என்றால், அவர்கள் வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
SET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் :
தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் பணியிடங்களில் சேருவதற்கான செட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. விண்ணப்பங்களை ஜூலை 7ஆம் தேதி வரை http://tnsetau.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், தமிழகத்தில் 12 நகரங்களில் செட் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா தொற்று குறையாத சூழலில், ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை பெருநகர மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் நாளை முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கத் தொடங்கும். போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று வெண்டுகோள் விடுத்தார்.
மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவதாக அறிவித்த பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
தெரிவித்தார். தடுப்பூசி செலுத்துவது, நிர்வகிக்கும் உரிமையை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம். பார்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு பணியில் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 8) முதல் ரேஷன் கடைகள் மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 19,448 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தினசரி கொரோனா பாதிப்பு 20,000க்கு கீழே குறைந்தது. அதே நேரத்தில், இன்று கொரோனா பாதிப்பால் 351 பேர் உயிரிழந்தனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த 31,360 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மாநிலங்களுக்கு இலவச கொரோனா வைரஸ் தடுப்பூசியை மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் நாட்டில் தடுப்பூசி வழங்கல் கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து 25 சதவீத தடுப்பூசிகளை வாங்க முடியும் என்று பிரதமர் கூறினார், ஆனால் அவற்றின் சேவை கட்டணம் ஒரு டோஸுக்கு ரூ .150 ஆக நிர்ணயிக்கப்படும்.
நவம்பர் வரை நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தை தொடர்வதாகவும் அவர் அறிவித்தார். “இந்த திட்டம் நாட்டில் 80 கோடி மக்களுக்கு பயனளிக்கும்” என்று அவர் கூறினார்.
“பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா திட்டம் தற்போது நவம்பர் (தீபாவளி) வரை நீட்டிக்கப்படும் என்று இன்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.
கோவிட் தடுப்பூசிகளைப் பற்றிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு வருட காலத்திற்குள் இந்தியா இரண்டு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நம்நாட்டு , விஞ்ஞானிகள் இந்தியா பெரிய நாடுகளுக்கு பின்னால் இல்லை என்பதைக் காட்டியுள்ளனர். இன்று நான் பேசும்போது நாட்டில் 23 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர், ”என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி தனது உரையில், வரும் நாட்களில் தடுப்பூசி வழங்கல் அதிகரிக்கும் என்றும், “இன்று நாட்டில் 7 நிறுவனங்கள் பல்வேறு வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன என்றும், இதில் மூன்று தடுப்பூசிகளின் பரிசோதனையும் மேம்பட்ட கட்டத்தில் நடந்து வருகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோவிட்டுக்கு இன்ட்ரானசல் தடுப்பூசி தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது என்றும் மோடி கூறினார்.
புதிய தடுப்பூசி கொள்கை குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில்அறிவிக்கப்படும் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, தற்போது “மாநிலங்களுடனான தடுப்பூசி பணிகளில் 25 சதவீதம் மத்திய அரசால் கையாளப்படும் என்றும், வரும் இரண்டு வாரங்களில் இது செயல்படுத்தப்படும் எனறும் குறிப்பிட்டுள்ள அவர், இரண்டு வாரங்களில் புதிய வழிகாட்டுதல்களின்படி மாநிலமும் மத்திய அரசும் செயல்பட வேண்டும்” என்று தனது உரையின் போது கூறியுள்ளார்.
கொரோனா தொற்று கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான தொற்றுநோயாகும். நவீன உலகம் இத்தகைய தொற்றுநோயைக் காணவில்லை. நம் நாடு இந்த தொற்றுநோயை பல மட்டங்களில் எதிர்த்துப் போராடியுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நாட்டு மக்களிடம் உரையாற்ற வரும் பிரதமர் மோடி, “உலகில் தடுப்பூசிகளை தயாரிக்கும் மிகச் சில நிறுவனங்களே உள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்?” என கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மக்களிடம் உரையாற்றி வரும் பிரதமர் மோடி, இந்தியாவில் இதுவரை 23 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.
கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியா முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், பல மாநிலங்களில் பள்ளி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில். மேற்குவங்கத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனின் 3 நாள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜூன் 11 ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தனித்துவ அடையாள அட்டையை தடுப்பூசி செலுத்த பயன்படுத்தலாம். கோவின் இணையதளத்திலும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகளுக்காக விண்ணப்ப படிவங்களில், மூன்றாம் பாலினத்திற்கான பகுதியை சேர்க்க வேண்டும் என்றும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான கொள்கைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு்ளளது
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எஞ்சிய ஆட்டங்கள் அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போட்டிகளை செப்டம்பர் 19ம் தேதி முதல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் இ-பதிவு செய்ய முயன்றதால் இ-பதிவு இணையதளம் இன்று காலை முடங்கியது. தற்போது மீண்டும் செயல்பட துவங்கியது.
தேனி நியூட்ரினோ திட்டத்திற்காக, 'ஒயில்டு லைஃப் க்ளியரன்ஸ்' எனப்படும் வன உயிர் வாரிய அனுமதி கோரி, தமிழ்நாடு வனத்துறையிடம் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபன்டமென்டல் ரிசர்ச்' நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
நீட் தேர்வு தமிழகத்தில் நடத்தப்படக்கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு எனவும், +2 மதிப்பெண்கள் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.14.16 கோடியை கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் காசோலையை வழங்கினார்.
புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாடுகிறார் பிரதமர் மோடி
ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ-பதிவிற்காக இணையதளத்திற்குள் வந்தால் தளம் முடங்கியது என்றும் இன்று மாலைக்குள் மீண்டும் இணைய தளம் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.280.20 கோடி நிதி வந்துள்ளது என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. நேரில் ஆஜாரக மூன்று பேருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேப்பாக்கம் 115 வட்டம் பெருமாள் தெரு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து, அரிசி, மளிகை பொருட்களை நிவாரணமாக வழங்கினார் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்.
தனித்துவம் மிக்க இயல்பான ஓவியங்களை வரைந்த ஓவியர் இளையராஜாவின் மரண செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் என்று அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர்
நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் இந்த வாரம் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் படம் வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தின் பாடல் ஆல்பம் தற்போது வெளியாகியுள்ளது.
#jagamethandhiram album out now!!Tamil: https://t.co/rOh3wt8lPWTelugu: https://t.co/BPmMDDN9qSA @Music_Santhosh Musical 🎵🎶@dhanushkraja @sash041075 @NetflixIndia @SonyMusicSouth @Lyricist_Vivek @TherukuralArivu @anthonydaasan @kshreyaas @vivekharshan @kunal_rajan pic.twitter.com/oC6cu2tT6N— karthik subbaraj (@karthiksubbaraj) June 7, 2021கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிய மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பு தொகை வழங்கப்படும் என்று முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
சசிகலா விவகாரத்தில் எந்த முடிவாக இருந்தாலும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்தான் முடிவு எடுப்பார்கள். அதிமுகவுக்கு சாதகமாக சசிகலா இல்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினை அசாதாரண சூழ்நிலைகள் தவிர பிற காரணங்களுக்காக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தொந்தரவு செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 10 ஆயிரம் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
மீன்பிடி தடைகாலத்தை பயன்படுத்தி மோசமாக இருக்கும் தேங்காய்ப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அமமுக பொது ச் செயலாளர் தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தந்தி சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வு நடத்தமாட்டோம் என்று கூறியுள்ளார். நீட் தேர்வை ஆய்வு செய்வதற்கு குழு ஒன்றை அமைத்துள்ளோம். கொரோனா தொற்று குறைந்தாலும் கூட நீட் தேர்வு இங்கே நடத்தமாட்டோம் என்று கூறியுள்ளார் அமைச்சர்.
பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
புராதன கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆட்சியில் நடந்தவைகளை பற்றி கிளற ஆரம்பித்தால் நாட்கள் போதாது, நேரம் போதாது. அவ்வளவு தவறுகள் நடந்துள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மக்களுக்கு நன்மை பயக்கின்ற செயல்களே இந்த ஆட்சியின் இலக்காக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் சார்ந்த வளர்ச்சி தான் தற்போதைய கொள்கையாக உள்ளது; அது தொடர வேண்டும் என மாநில கொள்கை வளர்ச்சிக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
திருச்சியில், ஊரடங்கு விதிகளை மீறியதாக கடந்த மாதம் 15-ம் தேதி முதல் இதுவரையில் 6,566 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்துவோம் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து மீட்கப்பட்டுள்ளன. சாலிகிராமத்தை அடுத்த காந்தி நகரில் ஆக்கிரமிக்கப்படிருந்த 5.5 ஏக்கர் நிலமும் மீட்கப்பட்டுள்ளது.
வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் சிங்கத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கவிதா என்ற 23 வயது பெண் சிங்கத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, இன்று முதல் நேரக்கட்டுப்பாட்டுடன் தளர்வுகள் அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 50% இருக்கை வசதிகளுடன் மெட்ரோ ரயில்களும் இயங்கி வருகிறது.
இந்தியாவில் இதுவரை 23.27 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,00,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 14.01 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனாவால் 2,427 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் போக்குவரத்துக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், இ-பதிவு அதிகரித்துள்ளதால் இணையதளம் முடங்கி உள்ளது. செல்போன் எண்ணை உள்ளீடு செய்தவுடன் ஓ.டி.பி. எண் வருவதில் தாமதம் நீடித்து வருகிறது.
பாகிஸ்தானின் தார்கி பகுதியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்தும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கோவாக்சினை விட, கோவிஷீல்டு தடுப்பூசி அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.