Tamil News Today: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அவசியம் எழவில்லை என சபாநாயகருக்கு முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் இன்று மருத்துவ குழுவினர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்தியாவில் கொரோனா பரவல் உச்சம் பெறும் என, இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக ஒரே நாளில் 38 கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். கடந்த 9 நாட்களில் வேறெந்த நோயும் இல்லாத 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 1974 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 1145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,000-ஐ நெருங்குகிறது. இதில் சென்னையில் மட்டும் 32,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று உறுதியான 277 பேரைக் காணவில்லை. போலியான முகவரி கொடுத்ததால், அவர்களை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர் காவல் துறையினர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights
ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் 680 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தறி மற்றும் நெசவாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் தூதரகத்திற்க்கு திரும்பி வந்தனர். ஊழியர்கள் சென்ற வாகனம் ஒருவர் மீது மோதியதில் 2 பேரையும் மக்கள் போலீசில் ஒப்படைத்ததாக கூறப்பட்டது. இந்தியாவின் கடும் கண்டனத்திற்குப் பிறகு இந்திய தூதரக அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 19 முதல் சின்னத்திரை படபிடிப்புகளையும், சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளையும் நிறுத்த ஃபெப்சி அறிவுறுத்தி உள்ளது. சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
முழுமுடக்கம் மட்டுமே கொரோனாவுக்கான தீர்வு என்ற மாயையில் இருந்து அதிமுக அரசு வெளியே வர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் புதிய திருப்பமாக, 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க சட்டசபை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அப்போதைய எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன்,பார்த்திபனுக்கு சட்டசபை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 51.08 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் இதரபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக தொடரப்பட்ட வழக்கைச் சென்னை நீதி மன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், மாநிலத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 1,257 பேர் ஆவர். இதனையடுத்து, சென்னையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,244 ஆக உயர்ந்துள்ளது.
நாளை முதல் செங்கல்பட்டு - திருச்சி ரயில்நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுத்து அரசுடன் இணைந்து ஸ்டாலின் செயல்பட வேண்டும். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சென்னை சேப்பாக்கம் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார்
சென்னை மருத்துவர் உள்பட 100க்கணக்கான பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசி மற்றும் அவரது நண்பர் ஜினோவை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 901ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இதில் அரசு மையங்கள் 653, தனியார் மையங்கள் 248 ஆக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா நுண்கிருமி தொற்று தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் கீழ்காணும் வழிகளைப் பயன்படுத்தி பெருநகர சென்னை மாநகராட்சியை அணுகலாம்.
பொதுமக்கள் வெளியிடங்களுக்கு முகக் கவசம் அணிந்து செல்வதுடன் சமூகவிலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் இருந்து பிறமாவட்டங்கள் செல்ல தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும்
- தமிழக அரசு
காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும்
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி
அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை
மாநில அரசுத்துறைகள், மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது; நிவாரணப் பொருட்கள் வீடு தேடி வரும்
மாநில அரசுத்துறைகள், மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
சென்னையில் வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய நாட்களில் மட்டுமே செயல்படும்
அத்தியாவசிய பொருள் வாங்குபவர்கள் வாகனங்கள் பயன்படுத்தக் கூடாது; அத்தியாவசிய பொருள் வாங்குபவர்கள் 2 கி.மீ தூரத்திற்குள் சென்றுதான் வாங்க வேண்டும்
- தமிழக அரசு
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் முழு ஊரடங்கு
19ம் தேதியில் இருந்து 30ஆம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு
சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை
கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் பொது முடக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 30ஆம் தேதி வரை சென்னையில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு கடைகள் அடைப்பு
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை- வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் அறிவிப்பு
தென்சென்னை,மத்திய சென்னை, வட சென்னையில் உள்ள பேரவை உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்
அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது
'மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது' - கல்வித்துறை அதிரடி உத்தரவு
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு, தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கை
சென்னை ராயபுரம் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட விவகாரம்
* உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
* 35 குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு
குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறார்கள்
குழந்தைகள் காப்பகம் முழுவதுமாக சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது
குழந்தைகள் காப்பகத்தில் நோய் தொற்று பரவியது குறித்து விசாரணை நடைபெறுகிறது - தமிழக அரசு
21ம் தேதி காலை 10 மணி18 நிமிடத்தில் இருந்து மதியம் 1 மணி 38 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் முன்கூட்டியே 21-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு திறக்கப்படும் என திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் தெரிவித்துள்ளார். பின்னர் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தில்லி மாநில தலைவர் அனில் குமார் சவுத்ரி, ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக பரிசோதனை முறைகளை எளிதாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக நோய் கட்டுப்பாடு பகுதியில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 மாதத்துக்கு பிறகு கொரோனா 2வது அலை ஆரம்பிக்கலாம்.
மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்
- முதல்வருடனான ஆலோசனைக்கு பின் மருத்துவக் குழு பேட்டி
சென்னையில் 3 மண்டலங்களில் அதிக பாதிப்பு
* சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பு
அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என தகவல்
நோய் அதிகம் பாதித்த இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை
முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்திய பின்னர் மருத்துவர் நிபுணர் குழுவினர் பேட்டி
எந்த ஒரு நோயும் உச்சத்திற்கு சென்றுதான் படிப்படியாக குறையும்- மருத்துவ குழு
நாட்டிலேயே தமிழகத்தில் பரிசோதனை அதிகம் - அதனால் தான் தொற்றும் அதிகம்
சென்னையில் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன - மருத்துவக் குழு
ஊரடங்கை கட்டுப்படுத்தி நோயின் தீவிரத்தை குறைக்க பரிந்துரை செய்து உள்ளோம் - மருத்துவக்குழு
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளை குறைக்க முதலமைச்சருக்கு மருத்துவக்குழு பரிந்துரை
* பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை
* முதலமைச்சர் பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப்பின் மருத்துவக்குழுவினர் பேட்டி
ஜூன் 17 முதல் 19 வரை மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் நீலகிரி, கோவை, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சமூக பரவல் இல்லை என்றால் தொற்று அதிகம் ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஊரடங்கு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகளின் நிலை என்ன? எனவும், அரசு உயர் அதிகாரிகளுக்கு இடையேயான பதவி போட்டியை தடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு, ”அமைச்சர்கள் இடையிலான குழு சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது” எனவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவலுக்கிடையே மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரைகளை வழங்க உள்ளது. பிரதமர் மோடியுடன் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் மருத்துவ குழுவின் கருத்தை கேட்கிறார், முதல்வர். இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
ஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படுவதாக தொழிற்சாலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டுக்கான பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக தொழிற்சாலை மூடப்படுகிறது. தவிர இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான நிகழ்வு தான்.
புதுச்சேரியில் 200-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு. புதுச்சேரியில் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.
நவம்பர் மாத மத்தியில் தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்குமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு முடிவு வெளியிட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில் இருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு 6 பாடங்களுக்கு பதில் 5 பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்திருந்தது. மாணவர்கள், தமிழ், ஆங்கிலத்துடன், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய 5 பாடங்கள் அல்லது தமிழ், ஆங்கிலம், உயிர் அறிவியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 5 பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், அரசு அறிவித்துள்ள பாடத்தொகுப்புக்கு அனுமதி பெற்ற பின்னரே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என திருவள்ளுவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மாணவர் சேர்க்கையினை நடத்திவிட்டு அனுமதி கேட்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,643 கன அடியில் இருந்து 2,002 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன்படி மேட்டூர் அணை நீர்மட்டம் - 100.18 அடி, நீர் இருப்பு - 65.07 டிஎம்சி, நீர் வெளியேற்றம் - 10,000 கன அடியாக உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள காளஹஸ்தி கோயிலின் நடை இன்று திறக்கப்படுகிறது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 65 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தின் முதல் சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'காத்தோடு காத்தானேன்' எனும் இந்த பாடலை கபிலன் எழுதியிருக்க, நடிகர்கள் தனுஷ் மற்றும் அதிதி ராவ் பாடியுள்ளனர்.
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 9 வது நாளாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 79 ரூபாய் 96 காசுகளாகவும், டீசல், லிட்டருக்கு 72 ரூபாய் 69 காசுகளாகவும் உயர்ந்துள்ளது.
செய்யாறு அரசு பேருந்து பணிமனையை சேர்ந்த 5 நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடத்துனர்களுக்கு கொரோனா காரணமாக செய்யாறு பேருந்து பணிமனை மூடப்பட்ட நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு பேருந்துகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,216 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை - 4,082; தேனாம்பேட்டை - 3,844; கோடம்பாக்கம் - 3,409 - ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 1,07,958 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 50,978 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,950 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மேலும் 11 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 3 லட்சத்து 32,424 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 21,62,144 ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,17,853 ஆகவும் அதிகரிப்பு. அதோடு உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்குகிறது.