Advertisment

Tamil News Today : முழு ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் - சென்னை காவல்துறை எச்சரிக்கை

சென்னையில் 13 நாட்களுக்குப் பிறகு 1000-க்கு குறைவாக பதிவான தொற்று எண்ணிக்கை. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

Tamil News Today Live: இந்திய சீன எல்லையில் நடைப்பெற்ற தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் தீவிரமாக இருப்பதாக, இந்திய ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்தது. கல்வானில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டதை அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. சீன ராணுவ தாக்குதலால் உயிரிழந்த தமிழர் பழனியின் உடலை தமிழகம் கொண்டு வருவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சீனாவிலும் அதே அளவு உயிரிழப்பு நடந்திருக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

முப்படை தலைமை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இதில் முப்படை தளபதிகளும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பங்கேற்றனர். இந்திய சீன மோதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. மோதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 16 நாட்களுக்குப் பிறகு சற்று குறைந்த கொரோனா. புதிதாக 1515 பேருக்கு தொற்று. சென்னையில் 13 நாட்களுக்குப் பிறகு 1000-க்கு குறைவாக பதிவான தொற்று எண்ணிக்கை.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    22:23 (IST)17 Jun 2020

    முழு ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல்

    முழு ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

    சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை வங்கிகளுக்கு செல்லும் ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

    21:32 (IST)17 Jun 2020

    Dexamethasone நன்மை பயக்கும்

    கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு Dexamethasone நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்புடன் பகிரப்பட்ட ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, வெண்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகளுக்கு உயிரிழப்பை மூன்றில் ஒரு பங்காக குறைத்துள்ளது.

    21:03 (IST)17 Jun 2020

    மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,307 பேருக்கு கொரோனா தொற்று

    மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,307 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 1,16,752 ஆக அதிகரித்துள்ளது.

    20:32 (IST)17 Jun 2020

    பரோல் கோரிக்கை நிராகரிப்பு

    கொரோனா தொற்று காரணமாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 3 மாதம் பரோல் கோரிய அவரது தாயாரின் மனுவை சிறைத்துறை நிராகரித்துள்ளது. 

    20:12 (IST)17 Jun 2020

    தலைமைச்செயலாளர் ஆலோசனை

    சென்னையில் பொதுமுடக்கத்தின் போது பின்பற்றக்கூடிய நடைமுறைகள் குறித்து மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நட்ததியுள்ளார். இந்த ஆலோசனையில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    19:55 (IST)17 Jun 2020

    டெல்லி அமைச்சருக்கு கொரோனா உறுதி

    டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு நிகழ்த்தப்பட்ட கொரோனா சோதனையில் பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    19:35 (IST)17 Jun 2020

    1,000 ரூபாய் வழங்க ரூ.218 கோடி நிதி ஒதுக்கீடு

    சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19 - 30 வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த 4 மாவட்ட பொது முடக்கத்தின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் வழங்க ரூ.218 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    19:20 (IST)17 Jun 2020

    கொரோனா தடுப்புப் பணிக்கு பணியாளர்களை நியமிக்கும் ஒப்பந்தம் ரத்து

    தனியார் நிறுவனம் மூலம் கொரோனா தடுப்புப் பணிக்கு பணியாளர்களை நியமிக்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பணியாளர்களை நியமிக்க கமிஷன் பெறப்படுவதாக ஆடியோ வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    19:06 (IST)17 Jun 2020

    உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்

    நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் காப்பதற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். உயிரிழந்த வீரர்கள் இந்திய ராணுவத்தின் பாரம்பரியத்தை கடைபிடித்துள்ளனர். அவர்களது தியாகம் என்றைக்கும் நினைவில் இருக்கும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.

    18:24 (IST)17 Jun 2020

    தமிழகத்தில் இன்று 842 பேர் டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் இன்று 842 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,624 ஆக அதிகரித்துள்ளது.

    18:11 (IST)17 Jun 2020

    2174 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று மட்டும் 2174 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 35,556 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இன்று மட்டும் 48 பேர் மரணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. 

    17:47 (IST)17 Jun 2020

    வீடுகளுக்கே சென்று ரூ.1,000 வழங்கப்படும்

    முழு பொது முடக்கம் அமலாகவுள்ள 4 மாவட்டங்களில் வீடுகளுக்கே சென்று ரூ.1,000 வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை, காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நேரடியாக வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    17:25 (IST)17 Jun 2020

    லடாக் நிலவரம் குறித்து இந்தியா - சீனா வெளியுறவு அமைச்சர்கள் போனில் பேச்சுவார்த்தை

    லடாக்கில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் மாநில கவுன்சிலர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் இன்று பிற்பகல் தொலைபேசி உரையாடல் நடத்தினர்.

    16:53 (IST)17 Jun 2020

    பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.9000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும்; பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு ரூ.9000 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும். மருத்துவ உபகரணங்கள் வழங்க ரூ.3000 கோடி வழங்க வேண்டும். மார்ச் மாதத்திற்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை உடனடியாக விடுவிக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருது உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும். சிறு குறு தொழில்கலை மேம்படுத்த ரூ.1000 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் பழனிசாம் பிரதமர் மோடியின் வலியுறுத்தினார்.

    16:38 (IST)17 Jun 2020

    20 வீரர்களின் உயிர்தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது; சோனியா காந்தி அஞ்சலி

    காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, 20 ராணுவ வீரர்களின் உயிர்தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது; அந்த துணிச்சலான வீரர்களுக்கு எனது இதயப்பூர்வ அஞ்சலி என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த வலியை எதிர்கொள்ள அவர்களின் குடும்பங்களுக்கு பலம் அளிக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    15:39 (IST)17 Jun 2020

    பிரதமர் மாநில முதல்வர்களுடன் 2வது நாளாக ஆலோசனை; முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

    பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் 2வது நாளாக காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்திவருகிறார். தமிழக முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து கணொலி காட்சி மூலம் பிரதமர் உடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது எல்லையில் ஏற்பட்ட இந்தியா - சீனா மோதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என்று பிரதமர் மோடி கூறினார்.

    15:13 (IST)17 Jun 2020

    பொது முடக்கத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜுன் 19 முதல் பொது முடக்கத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் சண்முகம் 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், சுகாதார செயலருக்கு தலைமைச் செயலாளர் ஊரடங்கை தீவிரமாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    15:05 (IST)17 Jun 2020

    தனிச்செயலாளர் தாமோதரன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

    முதல்வர் பழனிசாமியின் தனிச்செயலாளராக இருந்த தாமோதரன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் தாமோதரன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    14:37 (IST)17 Jun 2020

    சீனத் தாக்குதலில் வீர மரணமடைந்த இந்திய வீரர்கள் 20 பேர் பட்டியலை வெளியிட்டது ராணுவம்

    சீனத் தாக்குதலில் வீரமரணமடைந்த இந்திய வீரர்கள் 20 பேரின் பட்டியலை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    1.நைப் சுபேதார் சத்னம் சிங்
    2.நைப் சுபேதார் மந்திப் சிங்
    3.சிப்பாய் குந்தன் குமார்
    4.சிப்பாய் அமன் குமார்
    5.நாயக் தீபக் சிங்
    6.சிப்பாய் சந்தன் குமார்
    7.சிப்பாய் கணேஷ் ஹஸ்தா
    8.சிப்பாய் கணேஷ் ராம்
    9.சிப்பாய் கே.கே. ஓஜா
    10.சிப்பாய் ராஜேஷ் ஒரூன்
    11.சிப்பாய் சி.கே.பிரதான்
    12.நைப் சுபேதார் நந்து ராம் சோரென்
    13.ஹவில்தார் சுனில் குமார்
    14.கர்னல் பி.சந்தோஷ் பாபு
    15.சிப்பாய் ஜெய் கிஷோர் சிங்
    16.ஹவில்தார் பிபுல் ராய்
    17.சிப்பாய் குர்தேஜ் சிங்
    18.சிப்பாய் அன்குஷ்
    19.சிப்பாய் குர்விந்தர் சிங்
    20.ஹவில்தார் கே.பழனி

    ஆகியோர் உயிரிழந்ததாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    14:29 (IST)17 Jun 2020

    சீனத் தாக்குதலில் மரணம் அடைந்த பழனி குடும்பத்துக்கு திமுக ரூ.2 லட்சம் நிதியுதவி

    சீனத் தாக்குதலில் தமிழக வீரர் பழனி வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் திமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாஷா பழனியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தார்.

    14:08 (IST)17 Jun 2020

    நாட்டு மக்களிடம் வரும் 21ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

    பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வருகிற ஜூன் 21-ம் தேதி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    13:38 (IST)17 Jun 2020

    இந்தியா - சீனா எல்லை பிரச்னை: அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு

    இந்தியா - சீனா எல்லை பகுதியில் நிலைமையைக் குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 19-ம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    13:30 (IST)17 Jun 2020

    முதல்வரின் தனிச்செயலாளர் கோவிட்-19 காரணமாக இறந்தது வேதனை - மு.க.ஸ்டாலின் இரங்கல்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரின் தனிச்செயலாளர் தாமோதரன் கோவிட்-19 காரணமாக இறந்தது மிகுந்த வேதனையளிக்கிறத என்று இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “முதலமைச்சரின் தனிச்செயலாளர் தாமோதரன் கோவிட்-19 காரணமாக இறந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்! அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர்களின் பாதுகாப்பை முதல்வர் உறுதி செய்திட வேண்டும். இனி ஒரு முன்களப் பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது!” என்று தெரிவித்துள்ளார்.

    12:55 (IST)17 Jun 2020

    வி.பி.கலைராஜன் விளக்கம்

    தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அவை வெறும் வதந்தி என விளக்கமளித்துள்ளார், திமுக-வின் வி.பி.கலைராஜன்

    12:44 (IST)17 Jun 2020

    உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் இரங்கல்

    லடாக்கில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகம், துணிச்சலை நாடு மறக்காது ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

    11:58 (IST)17 Jun 2020

    அதிக உயிரிழப்பை சந்திக்கும் சென்னை

    கொரோனா பாதிப்பால் இன்று இதுவரை சென்னையில் 28 பேர் உயிரிழப்பு. ராஜீவ்காந்தி மருத்துவமனை -12, ஸ்டான்லியில் -6 கே.எம்.சி.-2 உள்பட 28 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் 6 பேர் உயிரிழப்பு. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழப்பு

    11:27 (IST)17 Jun 2020

    இந்தியா - சீனா மோதல்

    இந்தியா - சீனா வீரர்கள் இடையிலான மோதலில் சீன தரப்பில் 35 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சீன ராணுவத்தின் மூத்த அதிகாரியும் மரணம் என அமெரிக்க உளவுத்துறை தகவல். சீன வீரர்கள் உயிரிழப்பு குறித்து அந்நாடு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. 

    10:59 (IST)17 Jun 2020

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்வீட்

    10:58 (IST)17 Jun 2020

    நீட் ஆன்லைன் பயிற்சி வகுப்பு தொடக்கம்

    12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Amphisoft Technologies நிறுவன இணையதளம் மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாள்தோறும் 4 மணிநேர பயிற்சி, 4 மணிநேர பயிற்சித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன

    10:52 (IST)17 Jun 2020

    கொரோனா சிகிச்சை பணி

    சென்னையில் பணியாற்ற கூடுதலாக 3,000 செவிலியர் வருகை. நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோயில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு சென்னையில் அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    10:38 (IST)17 Jun 2020

    ஊரடங்கு மீறல்

    தமிழகத்தில் இதுவரை ரூ.13.12 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,51,426 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,76,347 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6,03,186 வழக்குகள் பதிவாகின

    10:03 (IST)17 Jun 2020

    உலகளவில் கொரோனா தொற்று

    உலகளவில் கொரோனா தொற்று 82.56 லட்சம் பேருக்கு கொரோனா. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,56,257 ஆக அதிகரிப்பு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,45,937 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 43,06,089 ஆகவும் அதிகரித்துள்ளது

    09:50 (IST)17 Jun 2020

    நீதிபதிகள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட நீதிபதிகள் ஜூன் 30 வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம். 4 மாவட்டங்களில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வந்தால் போதும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    09:42 (IST)17 Jun 2020

    ராகுல் காந்தி கேள்வி

    ”சீனா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்..? எதை மறைக்கிறார்..? லடாக் எல்லையில் என்ன நடந்தது என்பதை பிரதமர் அறிவிக்க வேண்டும்” என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

    09:37 (IST)17 Jun 2020

    அரசாணை வெளியீடு

    சென்னை, திருவள்ளூரில் கொரோனா தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக மருத்துவ உபகரணங்கள் வாங்க 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

    09:36 (IST)17 Jun 2020

    இந்தியாவில் கொரோனா தொற்று

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091-லிருந்து 3,54,065 ஆக அதிகரித்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1,80,013-லிருந்து 1,86,935 ஆக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900 லிருந்து 11,903 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்த 1,55,178 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மூலம் வெண்டிலேட்டர்கள் தயாரிக்க அரசு சார்பில் ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் பெல் (BELL) நிறுவனத்தில் 30,000 வெண்டிலேட்டர்கள், மாருதி சுஜுக்கி நிறுவனத்தில் 10,000 வெண்டிலேட்டர்கள், AMTZ நிறுவனத்தில் 13,500 மற்றும் ஜோதி சி,என்,சி நிறுவனத்தில் 5,000 வெண்டிலேட்டர்களையும் உருவாக்க ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த நிறுவனங்கள் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள 3,000 வெண்டிலேட்டர்கள் தற்போது மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    Coronavirus Corona Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment