scorecardresearch

Tamil News Update: நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று

Tamil News , Petrol price Today, AIADMK, TNEA Counselling 2022, Arumugasamy commission– 23 August 2022 – இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil News Update: நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

India vs Zimbabwe 3rd ODI.. இந்திய அணி வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், 3வது போட்டி திங்கள்கிழமை ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 289 ரன்கள் எடுத்தது. 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து வெறும் 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரை வென்றது. இந்திய அணி தரப்பில் அவேஷ் கான் 3 விக்கெட்டும், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்

பொறியியல் படிப்பிற்காக புதிய பாடத்திட்டங்களை நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைகழகம் அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, முதல் 3 செமஸ்டர்களுக்கு, தமிழர் மரபு, அறிவியல் தமிழ், Professional Development, English Lab, Communication lab / Foreign Language ஆகிய 5 புதிய பாடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
21:39 (IST) 23 Aug 2022
இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த விவகாரம் : விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம்

கடந்த மார்ச் மாதம் பிரமோஸ் ஏவுகணை தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் விழுந்த விவகாரம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் 3 பேரை பணி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

21:33 (IST) 23 Aug 2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

வரும் 30ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது

21:32 (IST) 23 Aug 2022
3 நாள் பயணமாக கோவை சென்றார் முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றுள்ளார். 3 நாட்களுக்கு கோவை, திருப்பூர், ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார்

19:47 (IST) 23 Aug 2022
தமிழ்நாட்டில் 560 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 560 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19:23 (IST) 23 Aug 2022
மதுரையில் கோப்ரா திரைப்பட விழா

மதுரையில் நடைபெறும் கோப்ரா திரைப்பட விழாவில் படத்தின் கதாநாயகன் விக்ரம் கலந்துகொண்டுள்ளார்.

18:57 (IST) 23 Aug 2022
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

காரைக்கால் மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் பழுதானதால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். இது குறித்து அறிந்ததும் கடலோர காவல் படை வீரர்கள் விரைந்து சென்றனர். அதற்குள் நாகை மீனவர்கள் காரைக்கால் மீனவர்களை காப்பாற்றினர்.

18:51 (IST) 23 Aug 2022
பிசாசு 2 பாடல் ஆகஸ்ட் 25 வெளியீடு

நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு2 படத்தின் இரண்டாம் பாடல் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

18:31 (IST) 23 Aug 2022
விராட் கோலி பிட் ஆன வீரர்- ரவி சாஸ்திரி

“இந்திய அணியில் விராத் கோலி மிகவும் பிட் ஆன வீரர். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அரை சதம் அடித்துவிட்டால் விமர்சிக்கும் அனைவரும் வாயை மூடிக் கொள்வார்கள்” என கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

18:03 (IST) 23 Aug 2022
நடிகர் தனுஷுக்கு அன்புமணி பாராட்டு

“நடிகர் தனுஷ் நடித்த தி கிரே மேன் ஆங்கிலப் படத்தை பார்த்தேன். படத்தில் தனுஷ் நன்றாக நடித்துள்ளார். எதிர்காலத்தில் அவர் நடிக்கவுள்ள படத்துக்கு வாழ்த்துகள்” என பாமக இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

17:41 (IST) 23 Aug 2022
சென்னை சிறுமிக்கு அறுவை சிகிச்சை

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அவரது உத்தரவை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

17:28 (IST) 23 Aug 2022
பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுதலைக்கு எதிரான மனு ஏற்பு

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிரான பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

17:00 (IST) 23 Aug 2022
பாரதி ராஜா மருத்துவமனையில் அனுமதி

இயக்குனர் பாரதி ராஜா, உடல்நலக் குறைவு காரணமாக தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

16:49 (IST) 23 Aug 2022
சரியான முறையில் ஷவர்மா தயாரிக்கப்பட்டு இருந்தால் சாப்பிடலாம் – உணவு பாதுகாப்புத்துறை

சரியான முறையில் ஷவர்மா உணவு தயாரிக்கப்பட்டு இருந்தால் சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத்துறையின் சென்னை மண்டல நியமன அலுவலர் சதீஷ் கூறியுள்ளார்.

மேலும், எண்ணெயை பேக்கிங் செய்து விற்பனை செய்ய தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

16:38 (IST) 23 Aug 2022
செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் தடை

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது

16:21 (IST) 23 Aug 2022
பிளஸ் 1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ் 1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது

16:10 (IST) 23 Aug 2022
கடற்படைக்கான குறுந்தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி

ஒரிசா கடற்பகுதியில் நடத்தப்பட்ட கடற்படைக்கான குறுந்தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது

15:37 (IST) 23 Aug 2022
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு; பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் ஐகோர்ட்டில் முறையீடு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேரும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் மறுத்ததையடுத்து அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரமில்லை என மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

15:21 (IST) 23 Aug 2022
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து; தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ சஸ்பெண்ட்

இஸ்லாம் மதத்தை குறிவைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தெலுங்கானா எம்எல்ஏ டி ராஜா சிங் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஹைதராபாத்தில் பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கின் கருத்துக்கு நகர் முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஹைதராபாத் காவல்துறை செவ்வாய்க்கிழமை காலை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

14:46 (IST) 23 Aug 2022
விருதுநகரில் குளிர்பானம் குடித்த சிறுவன் உயிரிழப்பு

விருதுநகர், அழகாபுரி அருகே உணவகத்தில் குளிர்பானம் குடித்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு.

குளிர்பானம் குடித்துவிட்டு பேருந்தில் ஏறிய சிறுவனுக்கு வாந்தி மயக்கம்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழப்பு

14:17 (IST) 23 Aug 2022
இலவச திட்டங்கள் – உச்சநீதிமன்றம் கருத்து

இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனு மீது மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதங்களை முன்வைக்க முற்பட்டபோது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “திமுக குறித்து நிறைய விஷயங்களை கூற விரும்புகிறேன் ஆனால் தலைமை நீதிபதி என்ற முறையில் கூறாமல் இருக்கிறேன்” என்றார்

13:26 (IST) 23 Aug 2022
15 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை

திருவாரூர்: பேரளம் அருகே 9ஆம் வகுப்பு மாணவன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் சம்மதிக்காததால் தற்கொலை என தகவல் நேற்று தீக்குளித்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

12:48 (IST) 23 Aug 2022
ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்

ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் . தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு அலுவலக உதவியாளர், இருப்பிட உதவியாளர் பணிகளை உருவாக்க தமிழக அரசுக்கு டிஜிபி பரிந்துரைக்கலாம்

12:06 (IST) 23 Aug 2022
மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரிய மனுவை 10 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

12:06 (IST) 23 Aug 2022
ஸ்ரீமதி வழக்கு – ஜிப்மர் ஆய்வறிக்கையை கேட்டு மனு

ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை கேட்டு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் மனு.

11:02 (IST) 23 Aug 2022
எம்.எல்.ஏ-க்களுக்கு ஸ்டாலின் கடிதம்

தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

11:01 (IST) 23 Aug 2022
இபிஎஸ் தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, இபிஎஸ் தொடர்ந்த வழக்கு, ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது

10:27 (IST) 23 Aug 2022
தங்கம் விலை குறைவு

சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, 38,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10:25 (IST) 23 Aug 2022
3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

அரசுப்பணியில் 92 இடங்களை நிரப்ப, குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

09:32 (IST) 23 Aug 2022
வருமான வரித்துறை சோதனை

தமிழகத்தில் 2 தனியார் தோல் தொழிற்சாலைகளுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனையினர் நடத்தி வருகின்றனர்.

09:17 (IST) 23 Aug 2022
இறையன்பு உத்தரவு

தமிழ்நாட்டில் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில், பட்டியலின தலைவர்கள் மீதான சாதிய பாகுபாடுகளை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

08:50 (IST) 23 Aug 2022
பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இனிஷியலை தமிழில்தான் எழுத வேண்டும், கையொப்பத்தையும் தமிழில் இட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

08:09 (IST) 23 Aug 2022
பிடிஆர் கார் மீது காலணி வீசிய வழக்கு

மதுரையில் பிடிஆர் கார் மீது காலணி வீசிய வழக்கில், கைதான பாஜகவினர் 9 பேரில், 6 பேருக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

08:08 (IST) 23 Aug 2022
இபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வில் ஆக. 18 அன்று முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே, இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில், ஓபிஎஸ் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டுமென அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

08:08 (IST) 23 Aug 2022
ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல்

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், 157 பேரிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் இன்று, அரசிடம் தாக்கல் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

Web Title: Tamil news today live india vs zimbabwe 3rd odi aiadmk tnea counselling 2022 arumugasamy commission