Advertisment

Tamil News Highlights: 2 முக்கிய மசோதாக்கள் வேளாண் வளர்ச்சிக்கான தொடக்கம் - அமித் ஷா

Tamil News Today : சென்னையில் இன்று (செப்டம்பர் 20) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.21-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.76.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: 2 முக்கிய மசோதாக்கள் வேளாண் வளர்ச்சிக்கான தொடக்கம் - அமித் ஷா

Tamil News Today  : துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் இன்று அவைக்கு வர கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் நாளை தாக்கலாக உள்ளதால் பாஜக கொறடா உத்தரவிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Tamil News Today Live Updates : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பாதை இயக்கத்தினர் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



























Highlights

    22:07 (IST)20 Sep 2020

    2 முக்கிய மசோதாக்கள் வேளாண் வளர்ச்சிக்கான தொடக்கம் - அமித் ஷா

    வேளாண் சீர்திருத்தங்களுக்கான இரண்டு முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இந்திய வேளாண் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சியை காணப்போகும் காலத்தின் தொடக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா தெரிவித்தார்.  

    21:13 (IST)20 Sep 2020

    மாநிலங்களவையில் நடைபெற்றது துர்திருஷ்டவசமானது, அவமானகரமானது – ராஜ்நாத் சிங்

    மக்களவையில் இன்று நடந்தது மிகவும் துர்தர்ஷ்டவசமானது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.   

    19:20 (IST)20 Sep 2020

    கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்

    கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே 0நாளில் தனியார் மருத்துவமனைகளில் 22, அரசு மருத்துவமனைகளில் 38 என மொத்தம் 60 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,811-ஆக அதிகரித்துள்ளது.

    19:13 (IST)20 Sep 2020

    வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  

    18:32 (IST)20 Sep 2020

    ஜெயந்த் கோப்ரகடே-வின் நியமனத்தை ஏற்க பாகிஸ்தான் அரசு மறுப்பு

    பாகிஸ்தானுக்கான இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயந்த் கோப்ரகடே-வின் நியமனத்தை ஏற்க பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. திருஜெயந்த் கோப்ரகடே-வின் பெயரை இந்தியா கடந்த ஜுன் மாதமே பாகிஸ்தான் அரசுக்கு தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

    18:30 (IST)20 Sep 2020

    கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 5,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதியுதவி

    AIRஊரடங்கு காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு கோடியே 83 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 5,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்  மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.   

    கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் செஸ் நிதியிலிருந்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வாயிலாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தனது பதிலில் குறிபிட்டார்.  

    18:23 (IST)20 Sep 2020

    தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று - 60 பேர் பலி

    தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 20) ஒரே நாளில் புதிதாக 5,516  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,41,993 ஆக அதிகரித்துள்ளது.

    17:01 (IST)20 Sep 2020

    மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

    மாநிலங்களவையில் இன்று வேளாண் சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வேளாண் மசோதாவைக் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கடும் அமளிக்கிடையே வேளாண் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது அனைவர்க்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    16:39 (IST)20 Sep 2020

    "போலி வாக்குறுதிகளை நம்பும் அளவிற்கு முட்டாள்கள் என நம்புகிறதா அரசு?" - ப.சிதம்பரம் ஆவேசம்

    வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்த வேளாண் திருத்தச்சட்டம் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். "எதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த வாக்குறுதிகளைப் பிறப்பித்தது? போலி வாக்குறுதிகளை நம்பும் அளவுக்கு விவசாயிகள் முட்டாள்கள் என்று மத்திய அரசு நம்புகிறதா?" எனக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    16:14 (IST)20 Sep 2020

    ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வேளாண் மசோதாவுக்கு எதிராகப் போராட்டம்

    வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாங்கள் குறிப்பிட்ட திருத்தங்களை சரிசெய்யாமல் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    15:18 (IST)20 Sep 2020

    "இந்தச் சட்டத்தை ஆதரிக்கிற ஒரே விவசாயி முதலமைச்சர் மட்டும்தான்" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன்

    "இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் குறைந்தபட்ச ஆதரவு விலை வியாபாரிகளுக்கு கிடைக்காது. மத்திய அரசு எத்தகைய தீங்கான சட்டங்கள் கொண்டு வந்தாலும், அனைத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் வேலையாக இருக்கிறது. இந்திய நாட்டில் வாழுகிற 70 சதவிகித விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டத்தை அனைத்து விவசாயிகளும் எதிர்க்கும்போது, அதனை ஆதரிக்கிற ஒரே விவசாயி முதலமைச்சர் மட்டும்தான்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

    15:05 (IST)20 Sep 2020

    "மத்திய அரசின் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்குவதா?" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

    "வேளாண் மசோதாக்களுக்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்துவிட்டு, மாநிலங்கவையில் அ.தி.மு.க எதிர்ப்பது நகைச்சுவையாக உள்ளது. பா.ஜ.க.வின் தேவை என்பதற்காக தமிழக அரசு இந்த மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறதா? விவசாயிங்களுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்குவதா?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

    14:55 (IST)20 Sep 2020

    "முதல்வர் சொல்வதை வரலாறு மன்னிக்காது" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    "விவசாயிகளை பாதிக்கும் மூன்று சட்டங்களையும் ஆதரித்துவிட்டு, முதலமைச்சர் தன்னை விவசாயி என்று சொல்வதை வரலாறு மன்னிக்காது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    14:47 (IST)20 Sep 2020

    முதலமைச்சர் உத்தரவின்படி அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது

    கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆகியோரின் முன்னிலையில் அமராவதி அணையின் தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. நீண்ட நாள்களாக இருந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    14:36 (IST)20 Sep 2020

    அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது

    குறுவை சாகுபடி மேற்கொள்ளும் வகையில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகளுக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 89 அடியாக உள்ளது.

    13:56 (IST)20 Sep 2020

    வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

    மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மாநிலங்களவை மீண்டும் கூடியதும் குரல் வாக்கெடுப்பு மூலம் 3 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது.

    13:47 (IST)20 Sep 2020

    வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளி; ராஜ்ய சபா ஒத்திவைப்பு

    வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. வேளாண் மசோதாக்களுக்கு கண்டனம் தெரிவித்து அவையில் உறுப்பினர்கள் காகிதங்களை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    12:48 (IST)20 Sep 2020

    மத்திய அரசின் வேளாண் திட்டம் வெற்றிபெற நாடு அனுமதிக்காது - ராகுல் காந்தி

    வேளான் மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி : பிதமர் மோடி முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற நினைக்கிறார். மத்திய அரசின் வேளாண் திட்டம் வெற்றிபெற நாடு அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார்.

    12:04 (IST)20 Sep 2020

    வேளாண் மசோதா விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் - அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

    வேளான் மசோதாக்களை மாநிலங்களவையில் தாக்கல் செய்து பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வரலாற்று சிறப்பு மிக்க வேளாண் மசோதா, விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்ச ஆதார விலை பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.

    11:28 (IST)20 Sep 2020

    வேளாண் திருத்த மசோதாக்கள் விவசாயி மீதான மரண சாசனம்; ராஜ்யசபாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

    வேளாண் திருத்த மசோதாக்கள் விவசாயி மீதான மரண சாசனம் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி பார்தாப் சிங் பஜ்வா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய நிலத்தை அபகரிக்க, இந்த மசோதாக்கள் வழிவகுக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

    11:10 (IST)20 Sep 2020

    வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு

    வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் மசோதா விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று திமுக எம்.பி மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா தேவையில்லாதது என்று திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    11:06 (IST)20 Sep 2020

    வடகிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்

    வடகிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    11:01 (IST)20 Sep 2020

    தமிழக அரசுக்கு 2018-19 மின் ஆளுமைக்கான விருது வழங்கியது மத்திய அரசு

    ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியதற்காக மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    10:59 (IST)20 Sep 2020

    திறன் மேம்பாட்டு கழகத்தின் புதிய இணையதளத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட http://tnskill.tn.gov.in என்ற இணையதளத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார். இதன் மூலம் பயிற்சி மற்றும் பணி தொடர்பான தகவல்களை பயனாளர்கள் பெற முடியும்.

    10:54 (IST)20 Sep 2020

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா பாதிப்பால் 1,133 பேர் மரணம்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92,605 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கொரோனாவால் பாதிகாப்பட்டோரின் எண்ணிக்கை 54 லட்சத்து 620 ஆக உயர்ந்துள்ளது. 1,133 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    09:48 (IST)20 Sep 2020

    முன்னாள் பிரதமர் தேவ கவுடா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்

    முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேவ கவுடா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.

    09:30 (IST)20 Sep 2020

    விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 122 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

    விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 122 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அம்மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,338 ஆக அதிகரித்துள்ளது.

    09:15 (IST)20 Sep 2020

    விவாசாய மசோதா : தமிழக அரசு ஆதரவு அளித்தது கவலையளிக்கிறது - பி.ஆர்.பாண்டியன்

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவாசாய மசோதாவை தமிழக அரசு அளித்தது கவலை அளிக்கிறது என்று விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Tamil News Today Updates : ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.
    Tamil Nadu Coronavirus Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment