![Thirumavalavan x page](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/szQiH7z6tZpJ7V9KEJfI.jpg)
பெட்ரோல், டீசல் விலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.92.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாத்தனூர் அணை நிலவரம்
சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 4,500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 7.3 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையில் நீர் இருப்பு 7.08 டி.எம்.சி. ஆக தற்போது உள்ளது. 119 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 117.95 அடி அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. நீர்வரத்து 4,500 கன அடியாக உள்ள நிலையில், அதே அளவுக்கு நீர் திறந்து விடப்படுகிறது.
-
Dec 06, 2024 21:31 IST
அம்பேத்கர் பிறந்தநாளை ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்: விஜய்
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "அம்பேத்கர் பிறந்தநாளை ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்" என்று ஒன்றிய அரசுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளார்.
-
Dec 06, 2024 21:30 IST
திருவண்ணாமலை மண்சரிவு: மலையின் தன்மை குறித்து ஆய்வு
திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவு தொடர்பாக மலையின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பாக தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு நாளை வருகை தர உள்ளார்கள்.
-
Dec 06, 2024 20:45 IST
தமிழ்நாட்டிற்கு அதிகபட்ச நிதியைப் பெற்றுக் கொடுங்கள்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்த மத்தியக் குழு அதிகாரிகளிடம் தமிழகத்திற்கு அதிகபட்ச நிதியை பெற்று கொடுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
Dec 06, 2024 20:16 IST
வயநாடு நிலச்சரிவு - ரூ 153 கோடி பிடித்தம் செய்த மத்திய அரசு
வயநாடு நிலச்சரிவின்போது இந்திய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மேற்கொண்டதற்காக கேரள மாநிலத்துக்கு வழங்கவேண்டிய பேரிடர் நிதியில் இருந்து ரூ 153 கோடியை மத்திய அரசு பிடித்தம் செய்துள்ளது
-
Dec 06, 2024 20:05 IST
பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த உதயநிதி
வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 401 கி.மீ. நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், 2025 மே மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
-
Dec 06, 2024 20:04 IST
'கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராகனும்' - ஆதவ் அர்ஜுனா
"பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது. கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும்" என்று என்று புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
-
Dec 06, 2024 20:02 IST
'திருமா மனசாட்சி இங்குதான் உள்ளது' - ஆதவ் அர்ஜுனா
"திருமாவளவன் இந்த மேடையில் இல்லை. ஆனால், அவரின் மனசாட்சி இங்குதான் உள்ளது. கால சூழ்நிலைகள் தலித் மக்களுடைய விலங்குகளை உடைக்கும்" என்று புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
-
Dec 06, 2024 19:41 IST
'2026-ல் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்' - ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய வி.சி.க துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை. 2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
-
Dec 06, 2024 19:38 IST
முதல் நாளில் ரூ.294 கோடி வசூல் செய்த ‘புஷ்பா - 2’
அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா - 2’ திரைப்படம், உலகளவில் ஒரே நாளில் ரூ. 294 கோடி வசூலைக் குவித்துள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்யப்பட்ட படம் என்ற சாதனையை படைத்துள்ளதாகவும் பட நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
Dec 06, 2024 19:12 IST
ஃபீஞ்சல் புயல் பாதிப்பு - ரூ. 944.80 கோடி விடுப்பு
ஃபீஞ்சல் புயல் பாதிப்பு சீரமைப்புப் பணிகளுக்காக ரூ. 944.80 கோடியை விடுவித்தது மத்திய அரசு!
-
Dec 06, 2024 19:07 IST
வசூல் சாதனை படைத்த 'மகாராஜா'
நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் உலகளவில் ரூ. 150 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. அண்மையில் சீனாவில் வெளியாகியிருந்தது.
-
Dec 06, 2024 18:57 IST
பெரியார் - அண்ணா புத்தக வடிவில் நுழைவாயில்
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்களின் வடிவில் அமைக்கப்பட்டிருந்த சேலம் புத்தகக் கண்காட்சியின் முகப்பு வாயில்.. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது. புத்தகக் கண்காட்சி தொடங்கிய முதல் 3 நாட்கள் தொடர் மழை பெய்ததால், இக்கண்காட்சியை நீட்டிக்க வேண்டுமென புத்தகப் பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
#Watch | தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்களின் வடிவில் அமைக்கப்பட்டிருந்த சேலம் புத்தகக் கண்காட்சியின் முகப்பு வாயில்.. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது.
— Sun News (@sunnewstamil) December 6, 2024
புத்தகக் கண்காட்சி தொடங்கிய முதல் 3 நாட்கள் தொடர் மழை பெய்ததால், இக்கண்காட்சியை… pic.twitter.com/bJwnTEXnmc -
Dec 06, 2024 18:51 IST
விஜய் உடன் எந்த சிக்கலும் இல்லை - திருமாவளவன்
"விஜய் உடன் எந்த சிக்கலும் இல்லை. விஜய்க்கும், எங்களுக்கும் இதுவரை கருத்து முரண் ஏற்பட்டதில்லை. த.வெ.க தலைவர் விஜயை நாங்கள் விமர்சிக்கவில்லை" என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
Dec 06, 2024 18:47 IST
மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் தி.மு.க எம்.பி. வில்சன் உரை
மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் தி.மு.க எம்.பி. வில்சன் தனது உரையில் கூறியிருப்பதாவது: -
"ஒன்றிய அரசினால் புறக்கணிப்பையும், ஏற்றத்தாழ்வையும் தமிழ்நாடு தொடர்ந்து சந்தித்து வருவதால், பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் முடங்கியுள்ளன. 2023-24 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில், வெறும் 2.5% மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டது, இது போதுமானதல்ல.
ஒன்றிய அரசால் நிதியளிக்கப்படும் திட்டங்களுக்கான சுமையை மாநில அரசின் மீது ஒன்றிய அரசு படிப்படியாக மாற்றி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடு என்பது உத்தரபிரதேசத்திற்கான ஒரு வருட ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு சமமானதாக உள்ளது.
தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. பரந்தூர் விமான நிலையம், ஓசூர் விமான நிலையம், கிரீன்ஃபீல்ட் கடலூர் துறைமுகம், கோவை, மதுரை மற்றும் ஓசூர் மெட்ரோ திட்டங்கள், கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்புதல் மற்றும் பணிகளை ஒன்றிய அரசு விரைவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாடு நீண்ட காலமாக இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது. ஆயினும்கூட, மாநிலத்திற்கு உரிமையான நிதியினையும் மற்றும் ஆதரவையும் திட்டமிட்டு மறுப்பது மாநிலத்தின் நிதிநிலையை பெரிதும் பாதிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
Dec 06, 2024 18:02 IST
விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு
டெல்லி நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டுள்ள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி ஹரியானா, பஞ்சாப் விவசாயிகள் தலைநகர் நோக்கி பேரணியாக சென்றுள்ளனர். அப்போது, டெல்லி எல்லையில் ஷம்பு பகுதியில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
காவலர்களின் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசியுள்ளனர். தற்போது விவசாயிகளின் போராட்டத்தை ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மேலும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் பகீரத் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
-
Dec 06, 2024 17:54 IST
வெள்ள பாதிப்பு - சென்னை வந்தது மத்தியக் குழு
ஃபீஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வருகை தந்துள்ளது. மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவில், பொன்னுசாமி, சோனமணி ஹேபம், சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பச்கேட்டி, பாலாஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் நாளை காலை முதல் ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். அதற்கு முன்பு இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளனர்.
-
Dec 06, 2024 17:52 IST
வெடி பொருட்களை வெடிக்க வைத்து படப்பிடிப்பு - பொதுமக்கள் எதிர்ப்பு
முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே நடைப்பெற்றுள்ளது. வெடி பொருட்களை வெடிக்க வைத்து படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து படப்பிடிப்பை கைவிட்ட படக்குழுவினர், அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
ஏற்கனவே டங்ஸ்டன் கனிம பிரச்சினை நீடிக்கும் நிலையில், வெடி சத்தத்தை கேட்டு மக்கள் ஏராளமாக குவிந்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மண்டலத்தில் வெடிபொருட்களை அனுமதித்தது எப்படி என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படப்பிடிப்பின் போதும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
-
Dec 06, 2024 16:21 IST
பல்லாவரம் குடிநீர் பிரச்னை சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்
பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்தபின் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி: “பல்லாவரம் குடிநீர் சம்பவத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்திருக்க வேண்டும்; பல்லாவரம் குடிநீர் பிரச்னை சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
-
Dec 06, 2024 16:13 IST
பாபர் மசூதி இடிப்பு தினம்: அழிக்கவே முடியாத கறை படிந்த நாள் - சீமான்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாட்டின் மதச்சார்பின்மை, அயோத்தி மண்ணில் நிரந்தரமாய் புதைக்கப்பட்ட கருப்பு நாள் இன்று. என்றைக்கு இந்த நாட்டின் நீதிமன்றங்களில் தீர்ப்புக்கு பதிலாக நீதி வழங்கப்படுகிறதோ அன்றைக்குத்தான் இந்த உண்மையிலேயே மக்களாட்சி நாடாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
-
Dec 06, 2024 15:26 IST
தமிழகத்தில் டிச. 11-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் டிசம்பர் 11-ம் தேதி தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 06, 2024 14:48 IST
கோடநாடு வழக்கில் இ.பி.எஸ், சசிகலாவை விசாரிக்கலாம் – ஐகோர்ட்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர் தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Dec 06, 2024 14:42 IST
சென்னையில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை திருட்டு
சென்னையில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. பக்கத்துவீட்டில் சாவி கொடுத்துவிட்டு தனியார் நிறுவன அதிகாரி சூசைராஜ் திருச்சிக்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இன்று சென்னை திரும்பிய அவர், பீரோவில் இருந்த நகைகள் மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 100 சவரன் நகைகள் திருடப்பட்டது குறித்து சூசைராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
-
Dec 06, 2024 14:23 IST
இனி யாரையும் அடிக்க மாட்டேன் - திருச்செந்தூர் யானை
"இனி யாரையும் அடிக்க மாட்டேன்.." என திருச்செந்தூர் தெய்வானை யானை அதிகாரிகளிடம் காதை பிடித்து சாரி சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது
#Watch || "இனி யாரையும் அடிக்க மாட்டேன்.."
— Thanthi TV (@ThanthiTV) December 6, 2024
அதிகாரிகளிடம் காதை பிடித்து கியூட்டாக Sorry சொன்ன திருச்செந்தூர் தெய்வானை..!#ThanthiTV #tiruchendur #elephant pic.twitter.com/u6aRP7WYMa -
Dec 06, 2024 14:21 IST
அமரன் படத்தில் மாணவரின் செல்போன் எண் நீக்கம்
ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி பொறியியல் மாணவர் வாகீசன் தாக்கல் செய்த வழக்கில், அமரன் படத்தில் இடம்பெற்றிருந்த மாணவனின் செல்போன் எண் தொடர்பான காட்சி நீக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. காட்சியை நீக்கி புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளது என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர் அழைப்புகளால் தனியுரிமை பாதிக்கப்பட்டதற்கு பொது சட்டத்தின் கீழ் நிவாரணம் கோரலாம் என்று கூறிய நீதிபதி மாணவன் மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்
-
Dec 06, 2024 13:50 IST
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை; சி.பி.ஐ விசாரிக்க வலியுறுத்தியுள்ளோம் - அண்ணாமலை
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வலியுறுத்தியுள்ளோம். தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மூவர் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும். ஒரு வாரத்தை தாண்டியும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழக கிராமப்புறங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. கிராமப்புறங்களில் காவல்துறை கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
-
Dec 06, 2024 13:28 IST
தமிழகத்தில் வருகிற 11,12-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வருகிற 11,12ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிச.11ல் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் கனமழை பெய்யும். டிச.12ல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Dec 06, 2024 13:10 IST
வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது; சிங்கமுத்துவுக்கு ஐகோர்ட் உத்தரவு
5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில், நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது எனவும், உத்தரவாத மனுத்தாக்கல் செய்யவும் நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பேட்டி வீடியோக்களை நீக்கும்படி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு கடிதம் அனுப்பவும் சிங்கமுத்து தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை தாக்கல் செய்த பிறகும், சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் என வடிவேலு தரப்பு வாதிட்டது.
-
Dec 06, 2024 12:45 IST
ஸ்டாலின் அதானியை சந்திக்கவில்லை - செந்தில் பாலாஜி
அதானியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தி.மு.க ஆட்சியில் எந்த தனியார் நிறுவனத்துடனும் மின்வாரியம் நேரடியாக ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிவித்துள்ள அவர், அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
-
Dec 06, 2024 12:24 IST
தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 06, 2024 12:08 IST
மக்களவையை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
அதானி விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க மறுத்ததால், எதிர்க்கட்சிகள் வெளியேற்றத்தில் ஈடுபட்டனர்.
-
Dec 06, 2024 11:38 IST
மதவெறி கொண்டோரின் எண்ணம் இங்கு நிறைவேறாது - மு.க.ஸ்டாலின்
மதவெறி, சாதி வெறி கொண்டவர்களின் எண்ணம் பெரியார், அம்பேத்கரின் மண்ணில் இந்த ஸ்டாலின் இருக்கும் வரை ஒருபோதும் நிறைவேறாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Dec 06, 2024 11:17 IST
த.வெ.க தலைவர் விஜய்யுடன் எந்த முரண்பாடும் இல்லை - திருமாவளவன்
த.வெ.க தலைவர் விஜய்யுடன் எந்த முரண்பாடும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் சாயம் பூசப்பட்டதால், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக அந்நிகழ்வில் பங்கேற்கவில்லை எனவும், விஜய்யுடன் எந்த முரண்பாடும் இல்லை எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
Dec 06, 2024 10:37 IST
ரெப்போ வட்டியில் மாற்றமில்லை
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. வட்டி விகிதம் 6.25% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
-
Dec 06, 2024 10:14 IST
தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைவு
சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,115க்கும், ஒரு சவரன் ரூ.56,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Dec 06, 2024 10:10 IST
மேட்டூர் அணை நீர் நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று விநாடிக்கு 25,098 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 14,404 கன அடியாக குறைந்துள்ளது.
டெல்டா பாசனத்திற்காகவும், கால்வாய் வழியேவும் விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீர் மட்டம் 115.32 அடியாகவும், நீர் இருப்பு 86.20 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
-
Dec 06, 2024 10:09 IST
தீபமலையில் பக்தர்களுக்கு அனுமதி? - சேகர்பாபு பேட்டி
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், தீபமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, இன்று மாலை அங்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார்.
-
Dec 06, 2024 09:35 IST
அதிகாரிகள் பட்டியல் வெளியீடு
புயல் பாதிப்புகளை பார்வையிட இன்று சென்னை வரும் மத்திய அரசின் அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
#JUSTIN | புயல் பாதிப்புகளை பார்வையிட இன்று சென்னை வரும் ஒன்றிய அரசின் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் விபரம்#SunNews | #CycloneFengal https://t.co/rqi9KkYj1f pic.twitter.com/0wE1LUshe0
— Sun News (@sunnewstamil) December 6, 2024 -
Dec 06, 2024 08:52 IST
மத்திய அரசு குழு இன்று சென்னை வருகை
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசின் குழு இன்று மாலை தமிழ்நாடு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.நாளை காலை வெள்ள பாதிப்புகளை பார்வையிட தொடங்குகின்றனர். புயல் பாதித்த மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் இக்குழு பார்வையிட உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
-
Dec 06, 2024 08:44 IST
அம்பேத்கர் நூலை இன்று வெளியிடுகிறார் விஜய்
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூலை வெளியிடுகிறார் விஜய்
ஆதவ் அர்ஜுனா நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சன்னையில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் நூலை வெளியிட நீதிபதி சந்துரு நூலை பெற்றுக் கொள்கிறார். -
Dec 06, 2024 07:38 IST
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் நாளை( டிச.7) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 12-ம் தேதி இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு. இதனால் 12, 13 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 06, 2024 07:38 IST
விழுப்புரத்தில் மட்டும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.