Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
இ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், இயல்பறிவுக்கும் எதிரானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இரு நீதிபதிகளின் உத்தரவு, அதிமுக கட்சி விதிகளில் இல்லாத ‘வீட்டோ’ அதிகாரத்தை பன்னீர் செல்வத்திற்கு அளித்துள்ளது.
தனது ஒப்புதல் இல்லாமல் தலைமை குறித்த விவாதத்தை நடத்த முடியாது என ஓபிஎஸ் தெரிவிப்பது தவறானது. இந்த மேல்முறையீடு மனு விசாரித்து தீர்ப்பு வரும் வரை சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Tamil News Latest Updates
மாநில அணை பாதுகாப்பு அமைப்பு!
தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க, மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ’மாநில அணை பாதுகாப்பு’ அமைப்பை தமிழக அரசு உருவாக்கியது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களின் தலைமைப் பொறியாளர்கள் உட்பட 15 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அணையின் பாதுகாப்பு, நீர் வருகை, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவைகளை இந்த அமைப்பு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து – இந்தியா கடைசி டெஸ்ட் போட்டி!
இங்கிலாந்து – இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை:1) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் சேர்த்துள்ளது. ஜடேஜா 83 ரன்னிலும், முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் (0) களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் ஆண்டர்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டும் பாட்ஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மத உணர்வை தூண்டும் வகையில் வலைதளங்களில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமர் ஜூபைரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
உதய்பூர் தையல்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ரியாஸ் கவுஸ் ஆசிப் உசேன் மற்றும் மொஹ்சின் கான் 4 பேரையும் தேசிய புலனாய்வு அமைப்பின் சார்பில் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஜெய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கலில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து நரிக்குறவ இன மக்களிடம் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்
குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 800-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலக்குறைவு மற்றும் காலரா நோய் தாக்கப்பட்ட நிலையில் காரைக்கால் மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பாஜக சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று தமிழகத்தில் ஆதரவு திரட்டி வரும் நிலையில், அவரை சந்தித்த இபிஎஸ் அதிமுக எம்எல்ஏ மற்றும் எம்பிக்களின் ஆதரவு திரௌபதி முர்முக்கு தான் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து .இ.பி.எஸ் புறப்படும் வரை காத்திருந்து திரௌபதி முர்முவை சந்தித்த ஓபிஎஸ் அதிமுக சார்பில் ஆதரவு தெரிவித்துள்ளோம் அதிமுக சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறியுள்ளார்.
இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக மேடைக்கு வந்து திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக தொழிலதிபர் மீது பதிவான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில் இது பொய்யான வழக்கு என கண்டறியப்பட்டால் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று தமிழகத்தில் தனது ஆதரவை திரட்டி வரும் நிலையில், அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு வெற்றிபெற வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும், சமூக நீதி குறித்து பேசுபவர்களும் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் அனைவரும் திரௌபதி முர்முவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் திராவிட மாடல், சமூகநீதி என பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பழங்குடியின பெண்ணை ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இந்த விழா மேடையில், ஈபிஎஸ் அமர்ந்துள்ள நிலையில், ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை.
நிகழ்ச்சி நடைபெறும் ஓட்டலில் தனி அறையில் உள்ள ஓபிஎஸ் மேடைக்கு வராத நிலையில், ஈபிஎஸ், எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மேடையில் உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146, ஜடேஜா 104 ரன்கள் எடுத்தனர்
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி ஹைதராபாத் சென்றார்
அவதூறு கருத்து தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துகளை தெரிவித்திருந்த நிலையில், கொல்கத்தா போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
குடியரசுத் தலைவருக்கான பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்கின்றனர்
லாட்டரி விற்பனையாளர் மார்டினின் ரூ173 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது
பூந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரத்தில் கண்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரிக்குள் சிக்கிய ஓட்டுநர் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். இதனால், ஸ்ரீபெரும்புதூர் செல்லக்கூடிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் துவங்கியுள்ளது. இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்
வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித்(60) நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மானியத் தொகையில் ஊழல் செய்ததாக வழக்கு விசாரணையில் உள்ளதால் வேளாண் துறை செயலர் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால், ஜூலை 11 முதல் 16 ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
சென்னை தண்டையார்பேட்டையில் பாழடைந்த நிறுவனத்தின் சுற்று சுவர் இடிந்து விழுந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த 3 பேரும், ராயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மசூத் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை, கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும். அகற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை. அதனால் வீண் விமர்சனங்களுக்கும், அரை வேக்காடுகளுக்கும் பதிலளிப்பதில்லை.
உங்களையெல்லாம் சிறிது நேரம் பார்த்துக்கொண்டே இருக்க நினைக்கிறேன். கடலலை போல் திரண்டுள்ளீர்கள். கடலில்லாத கரூரில் மக்கள் கடலை வரவழைத்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு புதுச்சேரிக்குச் சென்றடைந்துள்ளார். அங்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு கோர உள்ளார்
கரூர் என்றால் பிரம்மாண்டம். அதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு. இதை செய்து காட்டிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பாராட்டுகள். அவருடன் துணை நின்ற அனைவருக்கும் வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
கீழமை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் அனைத்து வழக்குகளின் உத்தரவுகளை உடனடியாக நீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பதிவேற்றம் செய்யாததால் வழக்கின் பழைய நிலைகளை மறைத்து புதிய உத்தரவுகள் பெறப்படுகிறது என நீதிபதி தெரிவித்துள்ளார்
பணிகளுக்கு இலக்கு வைத்து முடித்து காட்டுபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகளை குறுகிய காலத்தில் வழங்கியவர் என கரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின் புகழ்ந்து பேசினார்.
தெலுங்கானா மாநிலத்தில், 2023ஆம் ஆண்டு பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஹைதரபாத்தில், 18 ஆண்டுகளுக்கு பிறகு 2 நாள் பாஜக செயற்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
மணிப்பூர் மாநிலம், நோனி பகுதியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 ராணுவ வீரர்களும் அடங்குவர்.
கரூர், திருமாலையூரில் ரூ. 581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ. 28 கோடியில் முடிக்கப்பட்டுள்ள 95 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து. ரூ. 500. 03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 17,092 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்தனர். 14,684 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். மேலும் 1.09 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பள்ளி நிர்வாக குழு மூலம் ஆசிரியர் நியமனம் செய்வது விதிகளுக்கு முரணானது என கோரப்பட்ட வழக்கில், கல்வி பெறும் உரிமை சட்டத்தின் படி, தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை மற்றும் புதுச்சேரி வருகை தருகிறார். அங்கு, கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோருகிறார்
உக்ரைனுக்கு மேலும் 82 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
13000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியானது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து புதிய அறிவிப்பை கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார். அதன்படி பணியில் சேர விருப்பம் இருப்போர், ஜூலை 4 முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.