Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
காலரா பரவல் எதிரொலியாக, காரைக்காலில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீரை விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளின் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உள்ளதால், காரைக்காலில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
மகாராஷ்டிராவில், இன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. முன்னதாக, பேரவைத் தலைவர் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஷிண்டே தலைமையிலான அரசு எளிதில் வெற்றி பெறும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான்.. அமித்ஷா!
வாரிசு அரசியல், சாதி வெறி, திருப்திப்படுத்தும் அரசியல் ஆகியவை மிகப்பெரும் பாவங்கள் ஆகும். இவைதான் நாட்டின் பல்லாண்டு கால துன்பங்களுக்கு காரணங்களாக அமைந்துள்ளன. தெலுங்கானா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பா.ஜ.க. முடிவுரை எழுதும். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான் என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் அமித்ஷா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று 12 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள்
தொடர்பாக காணொலி மூலம் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, 9498100865, 04366-225925 ஆகிய
எண்களில் பதிவு செய்து புகார் அளிக்கலாம் என மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் வாடிக்கையாளர்களை சேவைக் கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை கைது செய்த 12 தமிழக மீனவர்களுக்கு 8ம் தேதி வரை சிறையிடலடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை பயணச்சீட்டு வழங்கும் போது நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. நடத்துநர்கள் பயணிகளுக்கு எச்சில் தொடாதவாறு பயண சீட்டு வழங்க வேண்டும். பயணச்சீட்டு வழங்கும் போது தண்ணீர் உறுஞ்சும் ஸ்பாஞ்சை பயன்படுத்தலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
5வது டெஸ்ட்டில், இங்கிலாந்துக்கு 378 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்தது. 2வது இன்னிங்சில் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, அதிகபட்சமாக புஜாரா – 66, ரிஷப் பண்ட் – 57 ரன்கள் குவித்தனர்
முதுநிலை ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதனை http://trb.tn.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்
ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த சித்ரவதை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்துகொண்டார். எனவே, ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்
இரட்டை தலைமை அதிமுக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2 பேரும் ஒற்றுமையாக கட்சியை கொண்டு சென்றிருந்தால், அதிக வெற்றி பெற்றிருக்க முடியும் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காலை முதல் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன
சென்னையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பிரியாணி, சிக்கன் லாலிபாப் கெட்டுப்போய் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹோட்டலுக்கு நேரில் சென்று விளக்கம் கேட்ட வாடிக்கையாளர், உணவு கெட்டுபோனதை ஹோட்டல் நிர்வாகம் ஒப்புக்கொண்ட நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் வாடிக்கையாளர் புகார் அளித்ததால் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் 2024ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா மாநிலத்தில் உதவி ஆய்வாளர் நியமன மோசடி வழக்கில் ஏடிஜிபி அம்ரித் பால் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் பணியில் இருக்கும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
11ம் தேதி பொதுக்குழுவுக்கு தடையில்லை என சொன்ன சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு ஏற்பாடுகளில் வேகம் காட்ட துவங்கியிருக்கிறது. பொதுக்குழுவில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு,நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு அம்மா உணவகம் அமைக்க கோரிய வழக்கு போடப்பட்டது. அந்த மனுவில், சுகாதாரமான குறைந்த விலை உணவை வழங்க ஏதுவாக அம்மா உணவகங்கள் அமைக்கக் வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்தவழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தமான் தீவுகளில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களுக்கான ஊதியத்தை உயர்த்தும் மசோதா நிறைவேற்றபட்டுள்ளது. அதன்படி டெல்லி எம்.எல்.ஏக்களுக்கு மாத ஊதியம் ரூ.54,000-ல் இருந்து ரூ.90,000 ஆக உயர்கிறது
விருதுநகர், புலிப்பாறைப்பட்டியில் கோயில் அருகே அங்கன்வாடி மையம் அமைக்க தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை .
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக வரும் 7ம் தேதி இபிஎஸ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய இந்தியாவை நாம் கட்டமைக்கும் வேளையில், இளைஞர்கள் முன்வந்து இந்த தொலைநோக்கு திட்டத்தில் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் புதிய வாய்ப்புகள், வளர்ச்சிக்கான புதிய வழிகள் மற்றும் புதிய கனவுகளுடன் புது இந்தியாவை கட்டமைக்க இளைஞர்களின் பங்கு முக்கியமானது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அவதூறு கருத்துக்களை கூறினால் தினகரன் நீதிமன்றத்தில் நிற்க நேரிடும் என்றும் தினகரன் மீது மானநஷ்ட வழக்கு தொடங்கப்படும் என்று கூறியுள்ள கே.பி.முனுசாமி தனது இருப்பை காட்டவே சசிகலா பேசி வருகிறார் கைது நடவடிக்கைகளுக்கு அதிமுக அஞ்சாது என்றும் கூறியுள்ளார்
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்திற்கு உயர்த்த வேண்டும். தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும், நிர்வாகிகளை தண்டிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி பொதுக்குழுவில் அதிமுக அவைத் தலைவரை தேர்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேசம், குலு மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் பேருந்து விபத்தில் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனையடைந்தேன், குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று கூறிப்பிட்டுள்ளார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ₨2 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ₨50 ஆயிரம் என நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்கு தேவையான 144 வாக்குகளை கடந்து ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மதுரையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைதானார்.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நாளை மறுநாள் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் மேலும் 16,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்தனர். கொரோனாவில் இருந்து மேலும் 13,958 பேர் குணமடைந்துள்ளனர். 1.13 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வளர்மதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இ.பி.எஸ் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ78.99 ஆக உள்ளது.
தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது திமுக அரசு தான். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தது திமுக அரசு. 1938 முதல் இன்று வரை தமிழ் காப்பு போராட்டங்கள் திமுகவால் நடத்தப்பட்டன என்று வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் முதலமைச்சர் பேசினார்.
சென்னை-எத்தியோப்பியா நாட்டுக்கு இடையே நேரடி பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டது. எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து முதல் விமானம் 180 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்தது. அடிஸ் அபாபா நகரில் இருந்து, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவுக்கு, ஏற்கெனவே எத்தியோப்பியா விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, சென்னை நான்காவது நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இம்மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொள்கிறது..
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி, உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி இன்று முறையிட திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 8 வருடங்களாக ட்ரைலர் லாரிகளின் வாடகை ஏற்றாததால், சென்னையில் கண்டெய்னர் ட்ரெய்லர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக, துறைமுக ஒப்பந்த குழு அறிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும், நிர்வாகிகளை தண்டிக்க கோரி அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 அக உயர்ந்துள்ளது. அதில் 27 ராணுவ வீரர்களும் அடங்குவர்.
பட்டயப்படிப்பு முடித்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், இன்று முதல் பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.