Latest Tamil News : கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி இன்று செலுத்திக்கொண்டார். மேலும், தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில், மதியம் 12:30 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக அரசியல் கட்சியினர், தங்களுடைய ஒவ்வொரு பரப்புரை திட்டம் குறித்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுமதி பெறுவது குறித்தும் அறிவுறுத்தப்படவுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் ரூ.25அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சிலிண்டரின் விலை ரூ.835-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி இறுதியில் ரூ.810- ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 25 ரூபாய் அதிகரித்துள்ளது, மக்களிடத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.
நெல்லை டவுன் பகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக துணை வட்டாட்சியர் விஜயா புகார் தெரிவித்ததை அடுத்து, நெல்லை மாநகர காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக கட்சிகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக சார்பில் கே. பி. முனுசாமி, வேலுமணி, தங்கமணி, வைத்திலிங்கம் கலந்து கொண்டுள்ளனர். பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ. 1,13,143 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 21,092 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 27,273 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 55,253 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூ. 24,382 கோடி உட்பட), செஸ் வரி ரூ. 9,525 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூ. 660 கோடி உட்பட) அடங்கும்
இந்தியாவில் அளிக்கப்படும் கோவிட் தொற்றுக்கான இரண்டு தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை என்றும், நோய் எதிர்ப்பு திறனை பொருத்தவரை துல்லியத்தன்மை கொண்டவை என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது எந்தெந்த தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டி குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என தனது முகநூல் பக்கத்தில் தேசிய முற்போக்கு திராவிடர் கழக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சட்டமன்ற பொதுத்தேர்தல் கூட்டணி குறித்து கே. பி. முனுசாமி , அமைச்சர்கள் . வேலுமணி, தங்கமணி தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இந்த நிலையில், கட்சியின் துணைச் செயலாளர் முகநூல் பதிவு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி! 117 பெண் வேட்பாளர்கள்! 117 ஆண் வேட்பாளர்கள்! என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
மார்ச் 07, சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடலில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் உயிர்க்கினிய உறவுகள் அனைவரும் எழுச்சியும் புரட்சியுமாக திரள்வோம் என்றும் தெரிவித்தார்.
உரத்தநாட்டில் தந்தை பெரியார் சிலைக்கு நேற்றிரவு (28.2.2021) கோழைத்தனமாக காவித் துண்டை அணிவித்தும், தலைக்குக் குல்லாய்ப் போட்டும் தங்களது அற்பப் புத்தியைக் காட்டிக் கொண்டுள்ளனர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்தார். பொதுவாக காவி அணிவிப்பவர்கள் எல்லாம் மனநலம் - இனநலம் எல்லாம் பாதித்தவர்கள்தான் என்றாலும், உண்மை குற்றவாளிகளைத் தப்ப விடுதல் காவல்துறைக்கும், பா.ஜ.க. கூட்டணி சேர்ந்துள்ள தமிழக அரசுக்கும் மிகப்பெரிய அவலம் - கடும் விலை தரவேண்டியிருக்கும் இதற்கு! என்றும் தெரிவித்தார்.
80 வயதிற்கும் அதிகமாநோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு முறைக்கு வரும் 12 ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்
முதன்முறையாக பிகார் தேர்தலில் இரு பிரிவினருக்கு தபால் வாக்கு முறை வழங்கப்பட்டது.
இன்று முதல் நாள் நான்காம் முறையாக மேலும் ரூ.25 விலையை உயர்த்தப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்தார்.
விலை உயர்வு குறித்து, சிறிதும் கவலைப்படாத இரக்கமற்ற அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருவதையும் இவை குறித்துக் கவலைப்படாமல் மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமியின் அரசையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலச் செயற்குழு மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் உயர்த்தப்பட்ட விலை உயர்வை உடன் திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாக மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள 2021 கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்காளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரியில் மாணவர்கள் மற்றும் மீனவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் கன்னியாகுமரி தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் மறைந்த வசந்தகுமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின், வசந்தகுமார் குடும்பத்தினரக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ஜெர்மனி, கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் தமிழியல் ஆய்வு நிறுவனம் நிதிப்பற்றாக்குறையால் மூடப்படுகிறது! ரூ.1.24 கோடி தருவதாக அறிவித்துவிட்டு அதனைத் தராத அதிமுக அரசின் அலட்சியத்தாலேயே மூடப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கொறிக்க வைத்தார்.
‘ஸ்டாலின் தான் வராரு’ விளம்பர பதாகை வைப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. விளம்பரப் பதாகை வைப்பது தொடர்பாக திமுக தேர்தல் அணையத்திற்கு எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம், விளம்பரம் தொடர்பான உண்மை தன்மை அனைத்திற்கும் அந்த விளம்பரத்தை வெளியிடுபவர் தான் பொறுப்பாக வேண்டும். கடைகளில் விளம்பர பதாகை வைக்க மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். விளம்பர பதாகை வைப்பது குறித்து, அந்த பகுதி மாவட்ட அதிகாரி முடிவு செய்வார்கள். விளம்பர பதாகை வைப்பது தொடர்பான செலவுகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஇஅதிமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும், அதிமுகவினருக்கு 03-03-2021 வரை, புதன்கிழமை மட்டுமே விண்னப்பப் படிவங்கள் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியுடன் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று , முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில் தற்போது 2ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ஐ.யூ.எம்.எல். சார்பில் காதர் மொய்தீன், அபுபக்கர் பங்கேற்றுள்ளனர். மனிதநேய மக்கள் கட்சியு சார்பில் ஜவாஹிருல்லா, அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக ஏற்கனவே விருப்ப மனுக்கள் அளிக்க மார்ச் 5ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக விருப்ப மனுக்கள் வரும் 3ஆம் தேதி, மாலை 5 மணி வரை மட்டுமே பெறப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50,000 மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆதாரங்களைக் காட்டாவிட்டால் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை சரியான கோணத்தில் செல்கிறதா என கண்காணிக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன? நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தனது பிறந்த நாளான இன்று இணையப்பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பிறந்த நாள் என்பது கொண்டாட்டமாக இருக்க வேண்டியதில்லை எனவும், அடுத்தவர்களுக்கு பயனுள்ள வகையில்இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை திடீரென தீப்பற்றி எரிந்தது. திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அந்த பகுதியைச் சேர்ந்த திமுகவினர் வெடி வெடித்ததில், தீ பொறி அங்கு துணியால் போர்த்தி வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலையின் மீது பட்டுள்ளது. அதனால் சிலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது என்று கூறப்படுகிறது.
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தனது கூட்டணிக்கட்சியான பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக உடன்பாடு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் அதிமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் 12 முதல் 15 தொகுதி வரை ஒதுக்குவதாக கூறப்பட்டது. குறைந்த பட்சம் 20 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக பிடிவாதத்தில் உள்ளது. அதோடு அதிமுகவுடனான 3ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு செல்லாமல் புறக்கணித்து வருகிறது.
அதிமுக உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை எனக் கூறி சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ஐஜேகேவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யத்துடனும் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே இந்த கூட்டணியில் தேமுதிகவும் மக்கள் நீதி மய்யத்துடன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில் "காவலர்கள் தன்னிச்சையாக சோதனையில் ஈடுபட கூடாது. தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. கட்டாயம் முழு சீருடையில் பணியில் இருக்க வேண்டும். தணிக்கையின் போது அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். தணிக்கையின் போது சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். மற்றும் காவலர்கள் தன்னிச்சையாக சோதனையில் ஈடுபட கூடாது" எனத் தெரிவித்துள்ளது
சட்ட மன்ற பொதுத்தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முலகுமுது புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மாணவி ஒருவர் பாடிய பாடலுக்கு, அவர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
#WATCH: Congress leader Rahul Gandhi dances with students of St. Joseph's Matriculation Hr. Sec. School in Mulagumoodubn, Tamil Nadu during an interaction with them pic.twitter.com/RaSDpuXTqQ
— ANI (@ANI) March 1, 2021
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது. தொழில்களை முடக்கவேண்டும், அடுப்புகளை தீயிட்டு எரிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பமாக உள்ளது என்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்றும், 3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தை விசாரிக்க விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜேஷ் தாஸ் மீது 2 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக இருப்பதாகவும் மார்ச் 7-ம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், விருப்பமனு அளித்தவர்களிடம் கமல்ஹாசன் நேர்காணலில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தங்கள் கூட்டணியில் சேர கமலுக்கு சரத்குமார் நேரில் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுக மற்றும் விசிக ஆகிய இரண்டு கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்தியது. இதில் இரண்டு கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் இன்று ஒப்பந்தம் செய்யவிருக்கிறது. 2 கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சிலரை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க திட்டம்.
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலையா என நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அதிமுக இன்று ஆலோசனை கூட்டம். அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் கூட்டணி கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. நேற்று அமித்ஷாவுடன் பேச்சு நடத்திய நிலையில், இன்று ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், தன் பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights