scorecardresearch

News Highlights: விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்? தேமுதிக திடீர் அதிருப்தி

Today’s Tamil News: சென்னையில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

Latest Tamil News : கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி இன்று செலுத்திக்கொண்டார். மேலும், தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில், மதியம் 12:30 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக அரசியல் கட்சியினர், தங்களுடைய ஒவ்வொரு பரப்புரை திட்டம் குறித்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுமதி பெறுவது குறித்தும் அறிவுறுத்தப்படவுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் ரூ.25அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சிலிண்டரின் விலை ரூ.835-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி இறுதியில் ரூ.810- ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 25 ரூபாய் அதிகரித்துள்ளது, மக்களிடத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

நெல்லை டவுன் பகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக துணை வட்டாட்சியர் விஜயா புகார் தெரிவித்ததை அடுத்து, நெல்லை மாநகர காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Live Blog

Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
Highlights

  21:53 (IST)01 Mar 2021
  அதிமுக –  பாஜகவ தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை

  சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக –  பாஜக கட்சிகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  

  அதிமுக சார்பில் கே. பி. முனுசாமி, வேலுமணி, தங்கமணி, வைத்திலிங்கம் கலந்து கொண்டுள்ளனர். பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.   

  20:56 (IST)01 Mar 2021
  பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 1,13,143 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது

  2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ. 1,13,143 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 21,092 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 27,273 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 55,253 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூ. 24,382 கோடி உட்பட), செஸ் வரி ரூ. 9,525 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூ. 660 கோடி உட்பட) அடங்கும்

  20:54 (IST)01 Mar 2021
  இரண்டு தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை – டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் விளக்கம்

  இந்தியாவில் அளிக்கப்படும் கோவிட் தொற்றுக்கான இரண்டு தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை என்றும், நோய் எதிர்ப்பு திறனை பொருத்தவரை துல்லியத்தன்மை கொண்டவை என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார். 

  20:51 (IST)01 Mar 2021
  திமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது- தொல். திருமாவளவன்

  திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது எந்தெந்த தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டி குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும்  என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.   

  19:50 (IST)01 Mar 2021
  நமது முதல்வர் விஜயகாந்த் – எல்.கே. சுதீஷ் முகநூலில் பதிவு

  நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என தனது முகநூல் பக்கத்தில் தேசிய முற்போக்கு திராவிடர் கழக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் பதிவிட்டுள்ளார்.

  முன்னதாக, சட்டமன்ற பொதுத்தேர்தல் கூட்டணி குறித்து  கே. பி. முனுசாமி , அமைச்சர்கள் . வேலுமணி, தங்கமணி தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

  இந்த நிலையில், கட்சியின் துணைச் செயலாளர் முகநூல் பதிவு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.    

  19:45 (IST)01 Mar 2021
  234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி- நாம் தமிழர் சீமான் அறிவிப்பு

  234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி! 117 பெண் வேட்பாளர்கள்! 117 ஆண் வேட்பாளர்கள்! என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.   

  மார்ச் 07,  சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடலில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் உயிர்க்கினிய உறவுகள் அனைவரும் எழுச்சியும் புரட்சியுமாக திரள்வோம் என்றும் தெரிவித்தார்.  

  19:35 (IST)01 Mar 2021
  உரத்தநாட்டில் தந்தை பெரியார் சிலைக்குக் காவித் துண்டா? – கி. வீரமணி கண்டனம்

  உரத்தநாட்டில் தந்தை பெரியார் சிலைக்கு நேற்றிரவு (28.2.2021) கோழைத்தனமாக காவித் துண்டை அணிவித்தும், தலைக்குக் குல்லாய்ப் போட்டும் தங்களது அற்பப் புத்தியைக் காட்டிக் கொண்டுள்ளனர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி  கண்டனம் தெரிவித்தார். பொதுவாக காவி அணிவிப்பவர்கள் எல்லாம் மனநலம் – இனநலம் எல்லாம் பாதித்தவர்கள்தான் என்றாலும், உண்மை குற்றவாளிகளைத் தப்ப விடுதல் காவல்துறைக்கும், பா.ஜ.க. கூட்டணி சேர்ந்துள்ள தமிழக அரசுக்கும் மிகப்பெரிய அவலம் – கடும் விலை தரவேண்டியிருக்கும் இதற்கு! என்றும் தெரிவித்தார்.   

  19:31 (IST)01 Mar 2021
  தபால் வாக்கு முறைக்கு வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

  80 வயதிற்கும் அதிகமாநோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு முறைக்கு வரும் 12 ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்

  முதன்முறையாக பிகார் தேர்தலில் இரு பிரிவினருக்கு தபால் வாக்கு முறை வழங்கப்பட்டது.      

  19:20 (IST)01 Mar 2021
  நான்காம் முறையாக மேலும் ரூ.25 விலையை உயர்த்தப்பட்டதற்கு முத்தரசன் கண்டனம்

  இன்று முதல் நாள் நான்காம் முறையாக மேலும் ரூ.25 விலையை உயர்த்தப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்தார்.  

  விலை உயர்வு குறித்து, சிறிதும் கவலைப்படாத இரக்கமற்ற அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருவதையும் இவை குறித்துக் கவலைப்படாமல் மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமியின் அரசையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலச் செயற்குழு மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் உயர்த்தப்பட்ட விலை உயர்வை உடன் திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாக மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.   

  18:41 (IST)01 Mar 2021
  மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

  திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   

  18:26 (IST)01 Mar 2021
  கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் : மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறலாம்.

  நடைபெறவுள்ள 2021 கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது. 

  18:23 (IST)01 Mar 2021
  மறைந்த வசந்தகுமார் நினைவிடத்திற்கு ராகுல் காந்தி அஞ்சலி</div>

  தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்காளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரியில் மாணவர்கள் மற்றும் மீனவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் கன்னியாகுமரி தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் மறைந்த வசந்தகுமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின், வசந்தகுமார்  குடும்பத்தினரக்கு ஆறுதல் தெரிவித்தார்.

  17:48 (IST)01 Mar 2021
  தமிழியல் ஆய்வு நிறுவனம் நிதிப்பற்றாக்குறையால் மூடப்படுகிறது – ஸ்டாலின் கோரிக்கை

  ஜெர்மனி, கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் தமிழியல் ஆய்வு நிறுவனம் நிதிப்பற்றாக்குறையால் மூடப்படுகிறது! ரூ.1.24 கோடி தருவதாக அறிவித்துவிட்டு அதனைத் தராத அதிமுக அரசின் அலட்சியத்தாலேயே மூடப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கொறிக்க வைத்தார்.    

  17:45 (IST)01 Mar 2021
  ‘ஸ்டாலின் தான் வராரு’ விளம்பர பதாகை வைப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

  ‘ஸ்டாலின் தான் வராரு’ விளம்பர பதாகை வைப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. விளம்பரப் பதாகை வைப்பது தொடர்பாக  திமுக தேர்தல் அணையத்திற்கு எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம், விளம்பரம் தொடர்பான உண்மை தன்மை அனைத்திற்கும் அந்த விளம்பரத்தை வெளியிடுபவர் தான் பொறுப்பாக வேண்டும். கடைகளில் விளம்பர பதாகை வைக்க மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். விளம்பர பதாகை வைப்பது குறித்து, அந்த பகுதி மாவட்ட அதிகாரி முடிவு செய்வார்கள். விளம்பர பதாகை வைப்பது தொடர்பான செலவுகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  17:38 (IST)01 Mar 2021
  திமுக – மமக இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

  அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு  தலைமையிலான குழுவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குடன் திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.

  17:37 (IST)01 Mar 2021
  அதிமுகவினருக்கு வரும் புதன்கிழமை வரை மட்டுமே விண்னப்பப் படிவங்கள் வழங்கப்படும்

  அஇஅதிமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும், அதிமுகவினருக்கு  03-03-2021 வரை, புதன்கிழமை மட்டுமே விண்னப்பப் படிவங்கள் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.  

  17:32 (IST)01 Mar 2021
  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  மனிதநேய மக்கள் கட்சியுடன் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  மனிதநேய மக்கள் கட்சியுடன் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று , முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில் தற்போது 2ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.  ஐ.யூ.எம்.எல். சார்பில் காதர் மொய்தீன், அபுபக்கர் பங்கேற்றுள்ளனர்.  மனிதநேய மக்கள் கட்சியு சார்பில் ஜவாஹிருல்லா, அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  

  17:19 (IST)01 Mar 2021
  டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்

  டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என அறிவித்தது  

  16:48 (IST)01 Mar 2021
  அதிமுக விருப்ப மனுக்கள் மார்ச் 3ம் தேதி வரை மட்டுமே பெறப்படும் – அதிமுக தலைமை அறிவிப்பு

  அதிமுக ஏற்கனவே விருப்ப மனுக்கள் அளிக்க மார்ச் 5ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக விருப்ப மனுக்கள் வரும் 3ஆம் தேதி, மாலை 5 மணி வரை மட்டுமே பெறப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

  16:29 (IST)01 Mar 2021
  உரிய ஆதாரங்களுடன் ரூ.50,000 மேல் பணம் செல்லலாம் – ஐகோர்ட் அறிவுறுத்தல்

  உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50,000 மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆதாரங்களைக் காட்டாவிட்டால் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  16:26 (IST)01 Mar 2021
  ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கே இந்த நிலை… சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன? – நீதிபதி கேள்வி

  பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை சரியான கோணத்தில் செல்கிறதா என கண்காணிக்கப்படும்  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன? நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  15:59 (IST)01 Mar 2021
  தேமுதிக வேட்பாளர் நேர்காணல் மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

  தேமுதிக வேட்பாளர் நேர்காணல் மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் என தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 

  15:36 (IST)01 Mar 2021
  என்னுடைய பிறந்தநாள் செய்தி! – மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு

  தனது பிறந்த நாளான இன்று இணையப்பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பிறந்த நாள் என்பது கொண்டாட்டமாக இருக்க வேண்டியதில்லை எனவும், அடுத்தவர்களுக்கு பயனுள்ள வகையில்இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.  

  15:31 (IST)01 Mar 2021
  தீப்பற்றி எரிந்த எம்.ஜி.ஆர் சிலை – அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்

  திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள  எம்.ஜி.ஆர் சிலை திடீரென தீப்பற்றி எரிந்தது. திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அந்த பகுதியைச் சேர்ந்த திமுகவினர் வெடி வெடித்ததில், தீ பொறி அங்கு துணியால் போர்த்தி வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலையின் மீது பட்டுள்ளது. அதனால் சிலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது என்று கூறப்படுகிறது. 

  15:25 (IST)01 Mar 2021
  சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு!

  பிரதமர் மோடியைத் தொடர்ந்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

  15:23 (IST)01 Mar 2021
  அதிமுகவுடன் அதிருப்தி… தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் ‘வாய்ப்புகள்’ என்னென்ன?

  எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தனது கூட்டணிக்கட்சியான பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக உடன்பாடு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் அதிமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் 12 முதல் 15 தொகுதி வரை ஒதுக்குவதாக கூறப்பட்டது. குறைந்த பட்சம் 20 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக பிடிவாதத்தில் உள்ளது. அதோடு அதிமுகவுடனான 3ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு செல்லாமல் புறக்கணித்து வருகிறது. 

  அதிமுக உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை எனக் கூறி சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ஐஜேகேவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யத்துடனும் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே இந்த கூட்டணியில் தேமுதிகவும் மக்கள் நீதி மய்யத்துடன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  14:37 (IST)01 Mar 2021
  10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிப்பேன் – ஸ்டாலின்

  திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

  14:29 (IST)01 Mar 2021
  காவலர்கள் தன்னிச்சையாக சோதனையில் ஈடுபட கூடாது – தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

  சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில் “காவலர்கள் தன்னிச்சையாக சோதனையில் ஈடுபட கூடாது. தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. கட்டாயம் முழு சீருடையில் பணியில் இருக்க வேண்டும். தணிக்கையின் போது அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். தணிக்கையின் போது சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். மற்றும் காவலர்கள் தன்னிச்சையாக சோதனையில் ஈடுபட கூடாது” எனத் தெரிவித்துள்ளது 

  14:12 (IST)01 Mar 2021
  மாணவர்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி

  சட்ட மன்ற பொதுத்தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முலகுமுது புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மாணவி ஒருவர் பாடிய பாடலுக்கு, அவர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார். 

  13:51 (IST)01 Mar 2021
  தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு முக்கியமானது – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

  “தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் அதிமுக-பாஜக இடையே இழுபறி இல்லை. 2 நாளில் இறுதியாகும். மற்றும் தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு முக்கியமானது” என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

  13:39 (IST)01 Mar 2021
  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது – ராகுல் காந்தி

  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது. தொழில்களை முடக்கவேண்டும், அடுப்புகளை தீயிட்டு எரிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பமாக உள்ளது என்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  13:22 (IST)01 Mar 2021
  நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவு – உயர்நீதிமன்றம்

  நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்றும், 3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

  12:13 (IST)01 Mar 2021
  பாலியல் புகாரை தொடர்ந்து ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தை விசாரிக்க விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜேஷ் தாஸ் மீது 2 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

  12:08 (IST)01 Mar 2021
  விவசாயத்தில் சிறப்பு கவனம் தேவை – மோடி

  விவசாயத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய பட்ஜெட் தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

  11:43 (IST)01 Mar 2021
  வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யம் தீவிரம்

  வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக இருப்பதாகவும் மார்ச் 7-ம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், விருப்பமனு அளித்தவர்களிடம் கமல்ஹாசன் நேர்காணலில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தங்கள் கூட்டணியில் சேர கமலுக்கு சரத்குமார் நேரில் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  11:41 (IST)01 Mar 2021
  திமுக கூட்டணியில் மதிமுக, விசிகவிற்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு

  தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுக மற்றும் விசிக ஆகிய இரண்டு கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்தியது. இதில் இரண்டு கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் இன்று ஒப்பந்தம் செய்யவிருக்கிறது. 2 கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சிலரை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க திட்டம்.

  11:38 (IST)01 Mar 2021
  ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு

  சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலையா என நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

  11:04 (IST)01 Mar 2021
  அதிமுக ஆலோசனை கூட்டம்

  சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அதிமுக இன்று ஆலோசனை கூட்டம். அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் கூட்டணி கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. நேற்று அமித்ஷாவுடன் பேச்சு நடத்திய நிலையில், இன்று ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  11:02 (IST)01 Mar 2021
  திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

  திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஊடகங்களிலும், தொலைபேசி வாயிலாகவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி என ஸ்டாலின் கூறியுள்ளார்.

  11:00 (IST)01 Mar 2021
  திருச்சியில் வரும் 7-ம் தேதி திமுக பொதுக்கூட்டம்

  திருச்சியில் வருகிற மார்ச் 7-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அந்தக் கூட்டத்தில் லட்சிய பிரகடனம் வெளியிடப்படும் என்றும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

  10:19 (IST)01 Mar 2021
  தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்

  தரைக்காற்று வீசாததாலும், வடக்கிலிருந்து கற்று வருவதாலும் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பைவிட அதிக வெப்பமாக இருக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  10:14 (IST)01 Mar 2021
  ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

  இம்மாதம் 31-ம் தேதி வரை ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

  09:49 (IST)01 Mar 2021
  திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள்

  திமுக தலைவர் ஸ்டாலின், தன் பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

  09:46 (IST)01 Mar 2021
  ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் ட்வீட்

  திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

  Tamil News Today : வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்ட ராமதாஸ் எப்படி 10.5%க்கு ஒப்புக்கொண்டார்? அப்படி என்றால் மீதமுள்ள 9.5% மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாரா? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

  Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

  Web Title: Tamil news today live modi corona vaccine tamil nadu politics eps admk stalin dmk