News In Tamil : சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் கட்டாய ஃபாஸ்டேக் முறை அமல்படுத்துவதை பிப்ரவரி 15-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த ஃபாஸ்டேக் முறை அமலுக்கு வருவதாகச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கட்டாய நடைமுறையை ஒத்திவைக்கக்கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்ததை அடுத்து பிப்ரவரி 15-ம் தேதி வரை ஒத்திவைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் சோங் சான்சன் முதலிடம். இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி 2-ம் இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்குப் பரவலான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மழையும் 3,4-ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.86.51-க்கும், டீசல் லிட்டர் ரூ.79.21-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Live Blog
Tamil News Today : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.
இப்புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்றும் வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “இந்தியாவில் வரும் 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமான சேவை தொடங்கப்படும். டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும். ஜனவரி 23ம் தேதி வரை வாரத்திற்கு 15 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 13 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,18,935 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8,380 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் ஜனவரி 6-ம் தேதி ‘இதயங்களை இணைப்போம்’ என்ற தலைப்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி பங்கேற்கிறார்.
இந்தியாவில் மேலும் 4 பேர் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதனர் என்பதை உறுதி செய்ததையடுத்து இதுவரை மொத்தம் 29 பேர் புதிய வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், ட்விட்டரில் மாஸ்டர் படத்தின் விஜய் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் ஒரே நாளில் ரூ 159 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக உமேஷ் யாதவ் விலகியதை தொடர்ந்து நடராஜனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் தற்போது 41 வயதாகும் நிலையில், விரைவில் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட்டில் இருந்து தந்போதைக்கு ஓய்வு இல்லை என கிறிஸ் கெயில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வின் தனித்தன்மையை காக்க தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020-ம் ஆண்டு கிட்டத்தட்ட 10 மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 2020-ம் ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டு அறிவிப்பது தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை அதிகரிக்கும் என்று தமிழக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளர்.
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மை செயலாளர் அந்தஸ்துக்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சன்முகம் தெரிவித்துள்ளார். மேலும் சத்யபிரதா சாகு, பீலா ராஜேஷ், கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு நிலை உயர்வு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இன்று ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த நாளை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். சென்னை, ராஜ்கோட், ராஞ்சி, அகர்தாலா, லக்னோவில் வீட்டு வசதி திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிகழ்வில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பஞ்சாப், கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். மேலும், தமிழகத்தில் சிறப்புச் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
கர்நாடகாவில் 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்.
தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான முதல் கட்ட கலநதாய்வு முடிந்துள்ள நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 4-ந் தேதி தொடங்கும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கலந்தாய்வில், 7.5% இடஒதுக்கீட்டிற்காக அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மதுரை மேலூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவைான கடனுதவி பெற மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் கடன் ஒப்பந்தம் கையெடுத்தாக வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஜினி அரசியல் கட்சி தொடங்கவிலலை என அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து பலரும் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், அரசியல் ஒரு அழுக்கு ரஜினி வராததே நல்லது என அவருடைய நெருகிய நண்பர் மோகன்பாபு தெரிவித்துள்ளார்.
2019-20-ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதியின் 8.5% வட்டியை தொழிலாளர்களின் கணக்குகளில் மத்திய அரசு செலுத்தியது.
தமிழகத்தில் முதற்கட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விதிகளை மீறி புத்தாண்டு கொண்டாடியதால் 262 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றது இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்தது உள்ளிட்ட அத்துமீறல்களில் மொத்தம் 741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.