Tamil Nadu News Today : பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், வங்கிகள் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய அளவில் அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் நேற்று முதல் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அரசுடன் நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் ஊழியர்களின் இந்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாகவும் மருத்துவ கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தீவிரமாக உள்ளது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
வருண் சிங்கின் உடல் இன்று தகனம்
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் மத்தியப்பிரதேசத்தின் போபாலில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.
பெட்ரோல் - டீசல் விலை
சென்னையில் 43-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும் டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:49 (IST) 17 Dec 2021தமிழகத்தில் புதிதாக 621 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று புதிதாக 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,38,583 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 11 பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 36,667 ஆக உயர்ந்துள்ளது.
- 20:31 (IST) 17 Dec 2021நெல்லை விபத்து : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
நெல்லையில் பள்ளி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் வருகினறனர். இதனால் டிசம்பர் 26ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 19:53 (IST) 17 Dec 2021குன்னூரில் மீட்பு பணியை துரிதமாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு அண்ணாமலை பாராட்டு
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணியை துரிதமாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு 100 மதிப்பெண். தலைமை செயலாளர் ஆகியோர் துரிதாமாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளை எடுத்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- 19:11 (IST) 17 Dec 2021போலியான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியை பிடித்துள்ளதாக இபிஎஸ் விமர்சனம்
ஒரே நாடு ஒரு தேர்தல் என்ன திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில்திமுக அரசு நீடிக்காது என்று முன்னாள் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். திமுக அரசை கண்டித்து சேலத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர் போலியான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும், இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகை வழக்குவது எப்போது என கேட்டுள்ளார்.
- 19:09 (IST) 17 Dec 2021போலியான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியை பிடித்துள்ளதாக இபிஎஸ் விமர்சனம்
ஒரே நாடு ஒரு தேர்தல் என்ன திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில்திமுக அரசு நீடிக்காது என்று முன்னாள் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். திமுக அரசை கண்டித்து சேலத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர் போலியான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும், இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகை வழக்குவது எப்போது என கேட்டுள்ளார்.
- 18:47 (IST) 17 Dec 2021பஞ்சாப் சட்டபை தேர்தலில் பாஜகவும் பஞ்சாப் லோக் காங்கிரசும் கூட்டணி
வரவிருக்கும் பஞ்சாப் சட்டபை தேர்தலில் பாஜகவும் பஞ்சாப் லோக் காங்கிரசும் இணைந்து போட்டியிடும் என்று பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். மேலும் இந்த தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு 101 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
- 18:11 (IST) 17 Dec 2021முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படை
வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- 18:09 (IST) 17 Dec 2021சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் : மதுரை நீதிமன்றம் புதிய உத்தரவு
சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு குறித்த வழக்கை 5 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 18:08 (IST) 17 Dec 2021நெல்லை பள்ளி விபத்து : உறவினர்கள் முற்றுகை போராட்டம்
நெல்லை தனியார் பள்ளியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில, இறந்த மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பிணவறை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- 18:07 (IST) 17 Dec 2021நெல்லை பள்ளி விபத்து : உறவினர்கள் முற்றுகை போராட்டம்
நெல்லை தனியார் பள்ளியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில, இறந்த மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பிணவறை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- 16:58 (IST) 17 Dec 2021அனைத்து பள்ளிகளின் கட்டிடங்களும் ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
நெல்லையில் பள்ளிக்கூடத்தில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
மேலும், "கட்டிடத்தின் உறுதித் தன்மையை அறியும் வகையில் இன்ஜீனியர்களையும் பள்ளிக் கல்வித்துறையை சார்ந்திருக்கிற உயர் அதிகாரிகளையும் கொண்ட ஒரு குழு உடனடியாக அமைக்கப்பட்டு அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இன்று நடந்தது போலான துரதிர்ஷ்ட சம்பவம் ஒன்று இனிமேல் என்றும் நடைபெறக் கூடாது."என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- 16:46 (IST) 17 Dec 2021பிரதமரின் செயலாளரை தலைமைத் தேர்தல் ஆணையர்கள் சந்தித்த விவகாரம்; முன்னாள் ஆணையர்கள் கடும் சாடல்!
பொது வாக்காளர் பட்டியல் தொடர்பான கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் இரு தேர்தல் ஆணையர்களான ராஜீவ் குமார் மற்றும் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் நேற்று வியாழக்கிழமை பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ராவை சந்தித்தனர்.
இது தற்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னுதாரணத்தையும் அரசியலமைப்பு விதிமுறைகளையும் மீறிய ஒரு “சம்மன்” போல இது உள்ளது என்றும், இதுபோன்ற வார்த்தைகள், தேர்தல் குழுவில் ஒரு படபடப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பல முன்னாள் அதிகாரிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
- 16:26 (IST) 17 Dec 2021பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுதுவம் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்யக்கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், உறுதித்தன்மை இல்லாத கட்டிடங்களை உடனடியாக இடிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 16:11 (IST) 17 Dec 2021கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை, நீர்வீழ்ச்சி பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை சுற்றுலா தலங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாக உத்தரவிட்டுள்ளது.
- 16:10 (IST) 17 Dec 2021தந்தை நினைவு தினம் "நாட்டு மக்கள் 11 நாட்கள் சிரிக்க தடை" வடகொரியா அவலம்
தற்போது வடகொரியாவில் இருந்து தற்போது அடுத்த அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி இருக்கிறது. வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களின் தந்தை கிம் ஜோங் இல் கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் மரணம் அடைந்தார்.
அவரது நினைவு தினத்தை முன்னிட்டு வடகொரிய நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- 15:55 (IST) 17 Dec 2021கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10,000 பரிசு - திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.
திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என்றும், இது குறித்து 63799 04848 என்ற வாட்ஸ்ஆஃப் எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என்றும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண் குமார் தெரிவித்துள்ளார்.
- 15:18 (IST) 17 Dec 2021நெல்லை பள்ளி கட்டட விபத்து: உயிரிழந்த மாணவர்களின் விவரம் வெளியீடு
நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மாணவர்களின் விபரங்களை, பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 9-ஆம் வகுப்பு மாணவர் அன்பழகன், 8ஆம் வகுப்பு மாணவர் விஷ்வ ரஞ்சன், 6ஆம் வகுப்பு மாணவர் சுதீஸ் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சய், இசக்கி பிரகாஸ், சேக் அபுபக்கர், அப்துல்லா ஆகிய 4 மாணவர்கள் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 15:13 (IST) 17 Dec 2021"சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்" - சசிகலா அறிக்கை!
திருநெல்வேலியில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 4 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்துள்ள 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- 14:39 (IST) 17 Dec 2021நெல்லை பள்ளி கட்டிட விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
திருநெல்வேலியில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 14:23 (IST) 17 Dec 2021தனியார் பள்ளி கட்டிடம் இடிந்த விவகாரம்: நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பதில்!
நெல்லையில் தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 3 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேசுகையில், "பள்ளி இடைவேளை நேரத்தில் கழிவறை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிடம் அடித்தளம் இல்லாமல் கட்டப்பட்டிருந்ததால் இடிந்து விழுந்துள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
- 14:12 (IST) 17 Dec 2021நெல்லை தனியார் பள்ளி கட்டிடம் இடிந்த விவகாரம்: அறிக்கை தர பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு
நெல்லையில் தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்ததில் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் அபுபக்கர், சஞ்சய், இசக்கி பிரகாஷ், அப்துல்லா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், இந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
- 13:20 (IST) 17 Dec 2021பெகாசஸ் விவகாரம் - மேற்கு வங்க அரசு அமைத்த விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
பெகாசஸ் மென்பொருள் மூலம் முக்கியமான ஆளுமைகளின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதை விசாரிக்க நீதிபதி மதன் லோகுர் தலைமையில் மேற்கு வங்க அரசு அமைத்த விசாரணை குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அக்டோபர் மாதம் குழு அமைத்தது குறிப்பிடத்தக்கது.
- 13:13 (IST) 17 Dec 2021வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருமாறும் - அமித் ஷா
2022ம் ஆண்டில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும், அது இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தாண்டினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
- 12:52 (IST) 17 Dec 2021டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் தொற்று
டெல்லியில் மேலும் 10 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 90 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 12:50 (IST) 17 Dec 2021தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு
தமிழக அரசின் மாநில பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிக்கப்பட்டதோடு தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற உத்தரவோடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- 12:44 (IST) 17 Dec 2021ஜனவரி 21ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள்
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஜனவரி 21ம் தேதி முதல் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் துவங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
- 12:07 (IST) 17 Dec 2021வானிலை முன்னறிவிப்பு
இன்று மற்றும் நாளை தென்கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 12:05 (IST) 17 Dec 2021கர்நாடகா எம்.எல்.ஏ. ரமேஷ் குமார் மன்னிப்பு
எனது கருத்து பெண்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதில் பிரச்சனை ஏதும் இல்லை. இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்கின்றேன் என்று பாலியல் வன்புணர்வு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கர்நாடக எம்.எல்.ஏ. ரமேஷ் குமார் கூறியுள்ளார்.
- 12:03 (IST) 17 Dec 2021திங்கள் வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு
12 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் திங்கள் கிழமை வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
- 12:01 (IST) 17 Dec 2021பள்ளிக் கட்டடம் இடிந்து 2 மாணவர்கள் பலி
நெல்லையில் உள்ள டவ்ன் சாஃப்டர் பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த 3 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
- 11:44 (IST) 17 Dec 2021பொறியியல் படிப்புக்கான நேரடி செமஸ்டர் தேர்வு தேதி: அண்ணா பல்கலை,. அறிவிப்பு!
- தமிழகத்தில் என்ஜினியரிங் மாணவர்களுக்கு வரும் ஜனவரி 21ம் தேதி முதல் நேரடி தேர்வுகள் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
- அதன்படி பி.இ., பி.டெக்., பி.ஆர்க் மாணவர்களுக்கு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும்
- எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்., மாணவர்களுக்கு ஜன. 21 முதல் பிப்ரவரி இறுதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
- 11:32 (IST) 17 Dec 2021கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: வாத்துகள் கொல்லப்படும் காட்சி!
கேரளாவின் கோட்டயத்தில் பறவைக் காய்ச்சல் பீதியின் மத்தியில் வாத்துகள் பெருமளவில் கொல்லப்படுகின்றன. கல்லாறு, வெச்சூர், ஐமனம் போன்ற இடங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன: பி.கே.ஜெயஸ்ரீ, கோட்டயம் மாவட்ட ஆட்சியர்
Mass culling of ducks takes place amid a bird flu scare in Kottayam, Kerala
— ANI (@ANI) December 17, 2021
Killing and burning of ducks being done. Places like Kallara, Vechoor and Aimanam were affected by bird flu: P. K Jayasree, Kottayam District Collector pic.twitter.com/rhh6KCxoA3 - 11:27 (IST) 17 Dec 2021வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 70 பேருக்கு கொரோனா பாதிப்பு!
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த பயணிகளில் 70 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
- 11:26 (IST) 17 Dec 2021கோவை சிறுமி கொலை..ஆதாயத்திற்காக சிறுமி கொல்லப்பட்டுள்ளார்..மாநகர காவல் இணை ஆணையர்!
கோவை சரவணம்பட்டி சிறுமி கொலை வழக்கில், சிறுமியின் தாயின் நண்பரான முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். சிறுமியின் தாயாருக்கும் குடும்ப நண்பரான முத்துக்குமாருக்கும் நகை, பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. ஆதாயத்திற்காக சிறுமி கொல்லப்பட்டதாக மாநகர காவல் இணை ஆணையர் உமா செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
- 11:09 (IST) 17 Dec 2021முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இதையொட்டி முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாகி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- 11:09 (IST) 17 Dec 2021இந்தியாவில் குடிசைப் பகுதிகள் அதிகரிப்பது வேதனை அளிக்கிறது: உச்ச நீதிமன்றம்!
மும்பையில் ரயில்வே நிலத்தில் வசிக்கும் குடிசைவாசிகளை வெளியேற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள்; இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களும் குடிசைப் பகுதிகளாக மாறிவிட்டன. நம் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த அவலம் தொடர்வது வருத்தம் அளிக்கிறது என்று வருத்தம் தெரிவித்தனர்.
- 10:36 (IST) 17 Dec 2021பொதுப்போக்குவரத்து வாகன தகுதிச் சான்றிதழ் டிச.31 வரை செல்லும்!
வாகன புதுப்பிப்பு, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களின் அனைத்து ஆவணங்களும் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- 10:30 (IST) 17 Dec 2021விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம்!
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் இருந்து வரும் பயணிகள் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என அறிவிப்பு.
- 10:22 (IST) 17 Dec 2021இந்தியா முழுவதும் 7447 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7447 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 10:16 (IST) 17 Dec 2021திண்டுக்கல் சிறுமி மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழப்பு: ஓபிஎஸ் வேதனை!
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 வயது சிறுமி தீயில் கருகி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. சிறுமி உயிரிழப்பதற்கான காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க முதல்வர் தனிகவனம் செலுத்த வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
- 09:56 (IST) 17 Dec 2021திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு, பொங்கல் பரிசு தொகை, மழை வெள்ள இழப்பீடு உள்ளிட்டவைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
- 09:55 (IST) 17 Dec 2021கோவையில் மாணவி கொலை வழக்கில் நண்பர் கைது
கோவையில் 14 வயது பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் முத்துக்குமார் என்பவர் கைது. செய்யப்பட்டிருக்கிறார். குடும்ப நண்பரான முத்துக்குமார், நகைக்காக மாணவியை வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- 09:55 (IST) 17 Dec 2021அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் மோடி திறப்பு
உத்தரப்பிரதேசம், வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் 'புதிய நகர்ப்புற இந்தியா' என்ற மையப்பொருளில் பிரதமர் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.