ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் சூரிய நாட்காட்டியின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அதன்படி இன்று புத்தாண்டை முன்னிட்டு, மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, வாசல் தெளித்து, வண்ண கோலமிட்டு, விளக்கேற்றி, புத்தாடை அணிந்து அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளில் பங்கேற்றனர். இதனால் அதிகாலையிலே பல கோயில்களில் கூட்டம் குவிந்தது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு, வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நாகை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், சென்னைக்கு திரும்ப ஏதுவாக ஏப்ரல் 17ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
IPL 2022: ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், பெங்களூரு அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே – 95, உத்தப்பா – 88 ரன்கள் எடுத்தனர். 217 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
Tamil Nadu news live update
டிடிவி தினகரனிடம் விசாரணை!
இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரமாக விசாரணை நடத்தினர். ஏப்ரல் 8ஆம் தேதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி கடிதம் அளித்த நிலையில், டெல்லி அமலாக்கத்துறையில் டிடிவி தினகரன் நேற்று ஆஜரானார்.
உ.பி. மேலவை தேர்தல்!
உத்தரப்பிரதேச மாநிலம் மேலவை தேர்தலில் 36 இடங்களில் 33 இடங்களை கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. இதன்மூலம் உ.பி.யில் 40 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு ஆளுங்கட்சி மேலவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!
தென்னாபிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்துள்ள BA-4, BA-5 என்ற 2 புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக உத்தரவு!
பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக எல்.முருகன் தெரிவித்தை கருத்தை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை சார்பாக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏப்ரல் 22ஆம் தேதி ஆஜராக, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த முறை ஆஜராக உத்தரவிட்டபோது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இருப்பதால் கலந்துகொள்ள முடியவில்லை என எல்.முருகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
இந்தித் திணிப்புக்கு எதிரான கருத்தைக் கூறியதால் ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்
விருதுநகர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி,மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன். உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₨2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் – எனறும் கூறியுள்ளார்.
சென்னை, கோயம்பேட்டில் தனியார் ஆம்னி பேருந்துகளில் இரு மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டணத் தொகை குறித்து பயணிகளிடம் அமைச்சர் சிவசங்கர் நேரில் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ் புத்தாண்டு தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது. ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த விருந்தை புறக்கணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவை திமுக உறுப்பினர்கள் நாளை கொண்டாட வேண்டும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
திமுக அலுவலகங்களிலும், 238 சமத்துவபுரங்களிலும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை, கோயம்பேட்டில் தனியார் ஆம்னி பேருந்துகளில் இரு மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. கட்டண வசூல் புகார் குறித்து போக்குவரத்துத் துறை இணை ஆணையர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகை பயணிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
விருதுநகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இடி தாக்கி ஒரு பெண், 3 ஆண்கள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையையொட்டி சொந்த ஊர் செல்ல சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அதிகளவில் கூடியதால் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான டிக்கெட் வாங்க பயணிகள் குவிந்தனர்
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வரும் நிலையில், உக்ரைன், கீவ் பகுதியில் ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதலால் 7 பேர் பலியாகியுள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 245 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும், நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ₨83 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளங்கள், கடல் அரிப்பு தடுப்பு மற்றும் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், நெல்லையில் ₨5 கோடி மதிப்பீட்டில் வண்ணமீன் காட்சியகம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளா.
அமைச்சர்கள் அரசு சார்ந்த சுற்றுப் பயணத்தின்போது, ஹோட்டல்களில் தங்குவதற்கு பதிலாக அரசு விருந்தினர் மாளிகைகளிலேயே தங்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் அமைச்சர்கள் உறவினர்களை தனிப்பட்ட செயலர்களாக நியமிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்
தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானங்களை நிறுத்தி வைத்து, மக்களின் உரிமையை அவமதிகும் ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர்: செங்கல்பட்டு, அச்சிறுப்பாக்கத்தில் ரூ.71.22 கோடி மதிப்பீட்டில் பால் பண்ணை அமைக்கப்படும் என தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனுடைய மையம் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று கூறினார்.
சட்டப்பேரவையில் பேசிய மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: “கூட்டுறவு வங்கி போல, மீனவர்கள் வங்கி சேவையை எளிதில் பெற தனி கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
பால்வளத்துறை அமைச்சர் நாசர்: “வருங்காலத்தில் ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோரின் தேவையை கருதி 10 வகையான புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும்; வளசரவாக்கத்தில் தனியார் பங்களிப்புடன் ஆவின் வர்த்தக மையம் அமைக்கப்படும்” என்று கூறினார்.
மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்தால் சோதனை நடத்த உள்ளூர் போலீசாருக்கும் அதிகாரம் உள்ளது. அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
“நுகர்வோரின் தேவையை கருதி 10 வகையான புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும்; வளசரவாக்கத்தில் தனியார் பங்களிப்புடன் ஆவின் வர்த்தக மையம் அமைக்கப்படும்!” என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
“இன்னும் 9 ஆண்டுகளில் இந்தியாவில் 40% கடற்கரைகள் காணாமல் போகும்!” மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.
சென்னையில் ஆவின் பால் விற்பனை நாளொன்று 1 லட்சம் லிட்டர் அதிகரித்திருப்பதாக பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழி வளர்ப்பில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் வருங்காலத்தில் ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் நியாயவிலை கடைகளில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அந்நாளில் உறுதிமொழி ஏற்கவும் அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு விசிக சார்பில் நெஞ்சார்ந்த நன்றி என விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.
காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் கடல் நீர் மட்ட உயர்வால் இன்னும் 9 ஆண்டுகளில் இந்தியாவில் 40 சதவீத கடற்கரைகள் காணாமல் போகும் என மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு. ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கச்சத்தீவை மீட்டெடுப்பதே தமிழக அரசின் முதன்மை குறிக்கோள். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை. கச்சத்தீவை மீட்பதுதான், மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
முன்னெச்சரிக்கை தடுப்பூசியை இலவசமாக மக்களுக்கு செலுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசின் நிதியிலிருந்து முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்த வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவில், தமிழகம், கர்நாடக அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு. கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி, இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நிறுவனங்களில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த வடமாநிலத்தவர்கள். தமிழ்நாடு தேர்வுத்துறையின் சான்றிதழ் சரிபார்ப்பில் அம்பலம். அஞ்சல் ஊழியர், சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் நிறுவனங்களில் 200க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள் போலி சான்றிதழில்ல பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம். தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கையெழுத்திட்டார். பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை
போயிங் 737 மேக்ஸ் விமானத்தை இயக்க ஸ்பைஸ்ஜெட்டின் 90 விமானிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாததால், விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை. போதிய விமானிகள் உள்ளதால், தடையால் பாதிப்பில்லை என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கம்
இலங்கை, கொழும்பு நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ’பீஸ்ட்’ படம் வெளியானது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், விஜய் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வாரந்தோறும் புதன்கிழமை இயக்கப்படும், சாய்நகர் ஷீரடி- சென்னை சென்டிரல் இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
கோடை மழையால் தூத்துக்குடியில் 60 சதவீதம் மட்டுமே உப்பு உற்பத்தி செய்யப்படுவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இன்சுலின், தைராய்டு மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து ஏப்ரல் 11ல் திறக்கப்பட்ட தண்ணீர், மதுரை வந்தடைந்தது.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் நான் நிரபராதி. இந்த விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ளது. அது யார் என்பது தெரியவில்லை. சுகேஷ் வேண்டுமென்றே இந்த வழக்கில் என்னை கூறியுள்ளார் என்று10 மணி நேர அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் கூறினார்.
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா, கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் தேரோட்டம் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும். பஞ்சாப், அரியான உத்தரப்பிரதேச மாநிலங்களில் சராசரியை விட அதிக மழை பெய்யும் என ஸ்கைமெட் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.