scorecardresearch

Tamil News Updates: உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை!

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today, Tamil New year 2022, KGF 2 Movie Review, Beast Movie Review 14 April 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி என்று அழைத்து துக்க நாளாக கடைபிடிக்கின்றனர். இன்று புனித வெள்ளி நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான கிறிஸ்வர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர். முக்கியமாக, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் புத்தாண்டு தொடங்கியது!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் சூரிய நாட்காட்டியின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அதன்படி சித்திரை முதல் நாளான இன்று ‘சுப கிருது’ புத்தாண்டை முன்னிட்டு,  மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளில் பங்கேற்றனர். இதனால் அதிகாலையிலே பல கோயில்களில் மக்கள் கூட்டம் குவிந்தது.

ஆளுநர் தேநீர் விருந்து.. அரசியல் கட்சியினர் புறக்கணிப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ் புத்தாண்டு தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது. தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் ஆளுநர், சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழகத் தலைவர்களை கேலி செய்வது போல் உள்ளது என  விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சிளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இலங்கைக்கு நிலை நமக்கும் ஏற்படும்.. ப.சிதம்பரம்!

இந்தியாவின் சில்லறை பணவீக்கம், 7 ச தவீதத்தை தாண்டி விட்டதால், இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நமக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.  ஒரே நாடு- ஒரே தேர்வு முறை, ஒரே நாடு- ஒரே ரேஷன். ஒரே நாடு- ஒரே தேர்தல் என்றால் இது சர்வாதிகாரா நாடா என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tamil Nadu news live update

சமத்துவ நாள்.. மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவை திமுக உறுப்பினர்கள் கொண்டாட வேண்டும். திமுக அலுவலகங்களிலும், 238 சமத்துவபுரங்களிலும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும் என  மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

IPL 2022: ஐபிஎல் போட்டியில் மும்பை-பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் இலக்குடன் விளையாடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல்!

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்பு சார்ந்து 4 நாட்களுக்கு பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
21:14 (IST) 14 Apr 2022
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நீட் விலக்கு மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாதது வேதனை அளிக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

19:44 (IST) 14 Apr 2022
வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்து ஆலோசனை

வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் மேல் நடவடிக்கை குறித்து தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

19:42 (IST) 14 Apr 2022
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ள நிலையில், நாளை முறைப்படி ராஜினாமா கடிதத்தை கர்நாடக முதல்வரிடம் அளிக்க உள்ளதாகவும், சந்தோஷ் பாட்டீல் தற்கொலைக்கு காரணம் என புகார் கூறப்பட்டதால், ஈஸ்வரப்பா ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

19:41 (IST) 14 Apr 2022
அழகர் மலையில் இருந்து புறப்பட்டார்

நாளை மறுநாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக அழகர் மலையில் இருந்து கள்ளர் திருக்கோலத்தில் புறப்பட்டார்

18:23 (IST) 14 Apr 2022
பாஜகவுக்கு அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை – திருமாவளவன்

திருமாவளவன்: “கோயம்பேட்டில் அம்பேத்ரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது, திட்டமிட்டு ரவுடிகளை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரைக் கைதுசெய்ய வேண்டும். சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவுக்கு, அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை; இந்த நாடக அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்” என்று கூறினார்.

17:53 (IST) 14 Apr 2022
ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்துவருவதால் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து அழைப்பை தமிழக அரசு புறக்கணித்தது. இந்த நிலையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுகிறது. அதிமுக தலைவர்கள், பாஜக தலைவர்கள் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

17:46 (IST) 14 Apr 2022
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

17:32 (IST) 14 Apr 2022
ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளது.

16:52 (IST) 14 Apr 2022
ட்விட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் முயற்சி

ட்விட்டர் நிறுவனத்தை 41 பில்லியன் டாலருக்கு வாங்க எலான் மஸ்க் முன்வந்துள்ளார். முன்னதாக ட்விட்டர் இயக்குநர் குழுவில் இணைய மறுத்த நிலையில், தற்போது முழுமையாக கைப்பற்ற எலன் மஸ்க் முயற்சிக்கிறார். இதனிடையே தற்போது, ட்விட்டரின் 9.1% பங்குகளை டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் தன்வசம் வைத்துள்ளார்

16:35 (IST) 14 Apr 2022
15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது

15:35 (IST) 14 Apr 2022
இலங்கை அகதிகளோடு மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாடினார்.

14:58 (IST) 14 Apr 2022
பாலியல் வன்கொடுமை – 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூனைத் அகமது, ஹரிஹரன், மாடசாமி, பிரவீன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநர் ஆட்சியர் உத்தரவு

14:36 (IST) 14 Apr 2022
தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்பு

ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும் என அறிவிப்பு. எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் குழு பங்கேற்கிறது.

14:12 (IST) 14 Apr 2022
பீஸ்ட் படத்தில் இது தவறு – பிரேமலதா

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவது தவறு என பீஸ்ட் படம் குறித்து கேள்விக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

13:46 (IST) 14 Apr 2022
தென் தமிழகத்தில் இன்றும் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருச்சி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13:39 (IST) 14 Apr 2022
பிளாக்கில் பீஸ்ட் டிக்கெட் – விஜய் இயக்க நிர்வாகி கைது

சென்னையில் பீஸ்ட் பட டிக்கெட்டை பிளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஜாபர்கான்பேட்டையில் உள்ள தியேட்டரில் கைது செய்யப்பட்ட வேல்முருகன் பிறகு ஜாமினில் விடுவிப்பு

13:19 (IST) 14 Apr 2022
தேநீர் விருந்து புறக்கணிப்பு – வேல்முருகன்

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.

12:59 (IST) 14 Apr 2022
“தென் மேற்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும்”

தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவுக்கு பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

12:42 (IST) 14 Apr 2022
நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநர் எதுவும் கூறவில்லை-அமைச்சர்

நீட் விலக்கு மசோதா அனுப்பப்படாதது குறித்து ஆளுநர் எதுவும் சொல்லவில்லை. நீட் விலக்கு மசோதாவுக்கு எந்தவித உத்தரவாதத்தையும் ஆளுநர் அளிக்கவில்லை. ஆளுநருடனான சந்திப்பு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

12:31 (IST) 14 Apr 2022
தமிழ்நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைபிடிப்பு

சென்னையில் அம்பேத்கர் உருவபடத்திற்கு மரியாதை செலுத்தி சமத்துவநாள் உறுதிமொழியை ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

12:21 (IST) 14 Apr 2022
ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு

ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் அறிவித்தனர்.

12:10 (IST) 14 Apr 2022
கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் நல்ல மழை வெளுத்து வாங்கியது.எனினும், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் படகில் ஜாலி ரைடு சென்றனர்.

11:53 (IST) 14 Apr 2022
516 படுக்கைகள் கொண்ட பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவு-முதல்வர் திறந்து வைப்பு

சென்னையில் செவிலியர் கண்காணிப்பு மையங்கள் மற்றும் 516 படுக்கைகள் கொண்ட பன்முக உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவுகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

11:44 (IST) 14 Apr 2022
ஆளுநருடன் அமைச்சர்கள் சந்திப்பு

சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் திடீரென சந்தித்து பேசினர். இன்று மாலை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஆளுநரை முன்கூட்டியே சந்தித்து நீட் விலக்கு மசோதா தொடர்பாக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.

11:36 (IST) 14 Apr 2022
அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற நாம் உறுதியேற்க வேண்டும் – பிரதமர்

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத பங்களிப்பை ஆற்றியவர் டாக்டர் அம்பேத்கர் அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு நாம் உறுதியேற்க வேண்டும் என்று அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

11:11 (IST) 14 Apr 2022
சேலம் அருகே சாலை விபத்து

தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே கன்டெய்னர் லாரி ஒன்று, சாலையில் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்த 6 கார்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

11:01 (IST) 14 Apr 2022
மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான, மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.

11:00 (IST) 14 Apr 2022
ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் திறப்பு!

சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ. 364.22 கோடி மதிப்பில் 2,099 அதிநவீன கருவிகளுடன் 47 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

11:00 (IST) 14 Apr 2022
அம்பேத்கர் பிறந்தநாள்.. பிரதமர் மோடி மரியாதை!

இன்று அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில், அம்பேத்கர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

10:31 (IST) 14 Apr 2022
தங்கம் விலை ரூ. 40 ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 40,048க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,006க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

09:52 (IST) 14 Apr 2022
பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி, ட்வீட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

09:46 (IST) 14 Apr 2022
அம்பேத்கர் பிறந்தநாள்.. முதல்வர் மரியாதை!

அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

09:44 (IST) 14 Apr 2022
ஆந்திரா தீ விபத்து.. ரூ. 25 லட்சம் நிவாரணம்!

ஆந்திரா, ஏலூர் ரசாயண தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

09:08 (IST) 14 Apr 2022
தீ விபத்து!

ஆந்திர மாநிலம் ஏலூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

09:08 (IST) 14 Apr 2022
வீராங்கனை அலிசன் பெலிக்ஸ் ஓய்வு!

அமெரிக்க ஓட்டப்பந்தைய வீராங்கனை அலிசன் பெலிக்ஸ், இந்த ஆண்டு ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். இவர் 11 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

09:07 (IST) 14 Apr 2022
எலான் மஸ்க் மீது வழக்கு!

ட்வீட்டர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதில் முறைகேடு செய்ததாக, எலான் மஸ்க் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ட்வீட்டர் பங்குதாரர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

09:07 (IST) 14 Apr 2022
கேஜிஎஃப் 2 இன்று வெளியானது!

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கே.ஜி.எஃப்-2' திரைப்படம் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியானது.

08:34 (IST) 14 Apr 2022
இடி,மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழப்பு.. நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி,மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்தனர். அவர்களின், குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

08:33 (IST) 14 Apr 2022
சீமான் எச்சரிக்கை!

இந்தித் திணிப்புக்கு எதிரான கருத்தைக் கூறியதால் ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

08:33 (IST) 14 Apr 2022
பள்ளிகளில் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நாடாளுமன்ற எம்.பி.க்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும்வரை,பரிந்துரை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

08:33 (IST) 14 Apr 2022
மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்!

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் இன்று காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு, பக்தர்களுக்கு அனுமதி வழங்கியதால், திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.

Web Title: Tamil news today live petrol and diesel prices on april 14 tamil new year 2022 wishes kgf 2 movie review beast movie review