பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடங்க உள்ளது. வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் மாதவன் நடிப்பில் உருவான ‘Rocketry’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
IPL 2022: குஜராத் அணி வெற்றி!
ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதேபோல், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 179 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தொடர்ந்து மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதுகின்றன.
கமல் விக்ரம் படத்தின் டிரைலர் வெளியீடு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விக்ரம் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
Tamil news today live
நெல்லை கல்குவாரி விபத்து!
நெல்லை, பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்தில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 2வது நாளாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நெல்லை கல் குவாரி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் முருகன், விஜய் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நேற்று வழங்கினர்.
கல் குவாரி விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். 5 வருடங்களுக்கு குவாரி செயல்பட 2018ஆம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்டுள்ளது – நெல்லையில், சபாநாயகர் அப்பாவு பேட்டி!
நெல்லை கல்குவாரி விபத்து.. 4 பேர் மீது வழக்கு!
நெல்லை, பொன்னாக்குடி அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் மீது, 3 பிரிவுகளில் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நுால் விலை உயர்வை கண்டித்து போராட்டம்!
ஈரோடு, கரூர் உட்பட தமிழகம் முழுவதும், நுால் விலை உயர்வை கண்டித்தும், நூல் விலையை குறைக்க கோரியும் இன்றும், நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் கரூரில் மட்டும் ₨100 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்துள்ளது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்துள்ளது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்துவமான வேலைவாய்ப்பு வழங்கப்படும். சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியலின் படி, மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 கி.மீ தூரத்திற்குள் மட்டுமே வேலை வழங்கப்படும். 15 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் ஊதியம் செலுத்தப்படும் வேலை அட்டை கோரும் தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு நீல நிற அட்டை வழங்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
புத்தர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க நேபாளம் சென்ற பிரதமர் மோடி லக்னோ திரும்பினார். லக்னோவில் பிரதமர் மோடிக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு அளித்தார்
தூத்துக்குடி ஈ.சி.ஆர். சாலையில் அமைந்துள்ள 'வணக்க வழிபாட்டு இல்லம்' என்ற தேவாலயத்தை பொது வழிபாட்டிற்காக திறக்க உத்தரவிட கோரிய மனு மீது மாவட்ட நிர்வாகம் விரைவில் உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
மே 24 முதல் மே 31ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது
நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை, என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன்.
இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன. இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.
நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் திருப்பூர் பின்னலாடை நிறுவன தொழிலாளர்களுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும். நூல் விலை குறைப்பு, பருத்தி பதுக்கல் தடுப்பு, குறைந்த விலையில் நூல் கிடைப்பது உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வேதபாராயணம் பாடுவதில் முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடகலை பிரிவினர் வேதபாராயணம் செய்ய அனுமதி மறுத்து உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், வேதபாராயணம் பாடுவதில் முந்தைய நிலையே தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடகலை, தென்கலை இடையே நிலவும் பிரச்சினையை ஒழுங்குபடுத்தவே அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.
தென்கலை பிரிவினரை மட்டும் வேதபாராயணம் பாட அனுமதித்தது பாரபட்சமானது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
லும்பினியில் நடைபெற்ற புத்த பூர்ணிமா விழாவில் பேசிய நரேந்திர மோடி, இந்தியா – நேபாள உறவு இமயமலையைப் போல அசைக்க முடியாதவை என்று கூறினார்.
பௌத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா திங்கள்கிழமை லும்பினியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே மாநகர் பேருந்து ஓட்டுநரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக புகார்; ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்தை நிறுத்தி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நந்தனம் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படியில் நின்று பயணம் செய்தபோது உள்ளே போகச் சொன்னதால் நடத்துநரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, மாமல்லபுரத்தில் 'செஸ் ஒலிம்பியாட்' நடத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த செயலாளர்கள் பங்கேற்றனர்.
இலங்கையில் மீண்டும் ஊரங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய இன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதி அதிகாரத்தின் கீழ் தவிர, பொது வீதி, ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது பொது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்த அட்டவணை தயாராகிவிட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும், கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழக அரசு பேருந்துகள், அங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி மக்களின் கடைகள் மற்றும் வீடுகளை பாஜக புல்டோசர் வைத்து இடிப்பது சரியல்ல என மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை, பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தொடர் பாறை சரிவால் தேசிய பேரிடர் மீட்பு படை மீட்பு பணியை தற்காலிகமாக நிறுத்தியது.
தற்போது தொழிலாளி ஒருவரின் உடல் பாறைகளுக்கு அடியில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் பாறைகளில் பெரிய அளவில் விரிசில் ஏற்பட்டு உள்ளதால் அவை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை, பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தொடர் பாறை சரிவால் தேசிய பேரிடர் மீட்பு படை மீட்பு பணியை தற்காலிகமாக நிறுத்தியது
சென்னை, தாம்பரம் அருகே கல்லூரி மாணவன் அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய நிலையில் மாணவன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரவாயல் – சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் வி.கே.சிங் முன்னிலையில் கையெழுத்தானது மதுரவாயல் – சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை ₨5,885 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்குவாரி விபத்து தொடர்பாக விசாரணை அதிகாரியாக உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜா சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தி இருப்பது பெருமை என்று கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது என்றும் கூறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை: ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு கட்டியதாக போலி கணக்கு காட்டி ரூ.7 கோடி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2016 முதல் 2020ம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 435 வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக போலி கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 25 பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ் மொழி இலக்கணமும், இலக்கியமும், பாரம்பரியமுமிக்கது, பழமை வாய்ந்தது. உலகின் தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி கூறுகிறார் என சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
திருவாரூரில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தவனை தொகையை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக, பணி பார்வையாளர் மகேஸ்வரன் கைது. லஞ்சம் கொடுத்த பிறகும் தவணை தொகையை விடுவிக்கவில்லை எனக் கூறி இளைஞர் மணிகண்டன் தற்கொலை
கிருஷ்ணகிரி பன்னியள்ளி அரசு ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் நேற்று முன் தினம் மாங்கொட்டையை எறிந்து விளையாடிய போது மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இன்று பள்ளிக்கு வந்த மாணவனை முதுகில் கத்தியால் குத்திய சக மாணவன. காயமடைந்த மாணவனுக்கு காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
நெல்லையில் 55 குவாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்; சரியில்லாத குவாரிகள் மூடப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்த நிலையில், நெல்லையில் இதுவரை 6 குவாரிகள் மூடப்பட்டு, ரூ 20 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தகவல்
மீட்பு பணியில் ஓய்வு பெற்ற சி.ஐ.எஸ்.எஃப், என்.டி.ஆர்.எஃப் வீரர்கள். கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி மீட்கும் பணி நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை மீட்கும் பணி தீவிரம்
மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலை. உருவாக்கி உள்ளது. தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. வேலைகள் இருக்கின்றன, திறன் குறைவாக இருக்கிறது; இதனை சரி செய்யவே நான் முதல்வன் திட்டம் என சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்க உதவுகின்றன 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர வேண்டும் பி.ஏ, பி.எஸ்.சி படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உரை
முக்கிய கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 44 ஆயிரம் கோவில்கள் உள்ளதால் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை திட்டம் கடினம் – அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 56 உயர்ந்து ரூ.37,952க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 4,744க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை குவாரி விபத்தில், இடிபாடுகளில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி 2வது நாளாக தொடர்ந்து வருகிறது. வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் நேரில் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பட்டமரத்தான் கோவிலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்த 2,550 பேர் குணமடைந்தனர். 17,317 பேருக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கான விண்ணப்பம் நேற்று முடிவடைந்த நிலையில், 2வது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுப்பட்டுள்ளது. அதன்படி வரும் 20 ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.