இன்றைய பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 67-ஆவது நாளாக எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டர் ரூ. 94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சோனியா காந்தி இன்றும் ஆஜராக உத்தரவு
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்றும் சோனியா காந்தி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று 2ஆவது நாள் விசாரணைக்கு ஆஜரான நிலையில், இன்றும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. மாநிலக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே, இந்தவழிதடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
“போலி பாஸ்போர்ட் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பாராட்டுகிறேன். அவர் ஜனநாயக காவலராக இருந்து வருகிறார்” என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மதுரை, திருச்சியில் 2019 பிப்.1 முதல் 2019 ஜூன் 30 வரை போலி ஆவணங்கள் மூலம் இலங்கை நபர்களுக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை கியூ பிராஞ்ச் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை 3 மாதத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டது. இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலி பாஸ்போர்ட் விவகாரத்தை பெரியளவில் எழுப்பியதை நாளிதழில் படித்தேன்.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், போலி பாஸ்போர்ட் முறைகேடு தொடர்பாக 41 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மதுரை 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை நீதித்துறை நடுவர் உடனடியாக கவனத்தில் எடுத்து விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும்.
மதுரையில் ஒரு காவல் நிலையத்தில் மட்டும் 54 போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையராக டேவிட்சன் ஆசிர்வாதம் இருந்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் ஆசிர்வாதம் நேர்மையானவர் என நான் சான்று அளிக்கிறேன்.
அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரத்தை கையில் எடுத்ததை நான் பாராட்டுகிறேன். அவர் ஜனநாயகத்தின் காவலராக இருந்து வருகிறார். அவர் இல்லை என்றால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்று நீதிபதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,803 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; உயிரிழப்பு இல்லை!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பைத் தொடர்ந்து, எற்பட்ட கலவரம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை ஈடுபட்டவர்களின் வீடியோ அதாரங்களை வைத்து அருண்குமார், கமல்ராஜ், ஸ்ரீதர், சத்தியமூர்த்தி, பாலமூர்த்தி ஆகிய 5 பேரை சிறப்பு புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
2018 இல் ஜுபைர் பதிவிட்ட ட்வீட் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது விசாரணை நிறுவனத்தால் கைப்பற்றப்பட்ட சாதனங்கள் மற்றும் ஆவணங்களைத் திருப்பித் தருமாறு ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க டெல்லி காவல்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை நான்கு வார கால அவகாசம் அளித்துள்ளது.
பாஸ்போர்ட் மோசடி தொடர்பான வழக்கில் டேவிட்சன் தேவாசீர்வாதம்-க்கு எவ்வித தொடர்பும் இல்லை; அவர் குற்றமற்றவர். நோடல் அலுவலர் வரையுல்ள அலுவலர்களுக்கு மட்டுமே இதில் தொடர்பிருக்க வாய்ப்பு உள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடத்தி 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு முடித்துவைத்துள்ளது.
குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். 3 பேரில் ஒரு பெண் மீட்கப்பட்ட நிலையில், இருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். ஆய்வின்போது அகில இந்திய சதுரங்க தலைவர் சஞ்சய் கபூர் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் விளையாடினார்.
முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், அமலாக்கத்துறை முன் அமைச்சர் ஐ.பெரியசாமி விசாரணைக்காக ஆஜர் ஆகி உள்ளார். அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகின்றனர்
தென் மாநிலங்களில் முதன்முறையாக குடியரசு தலைவரின் கௌரவக் கொடியை பெறுகிறது தமிழக காவல்துறை. இதனால் டிஜிபி முதல் அனைத்து காவலர்களும் தங்கள் சீருடையில் கௌரவ கொடியை அணிய உள்ளனர்
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார்.
2017 பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்களை எதிர்த்து சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சசிகலா வழக்கை நிராகரிக்கக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த நிராகரிப்பு மனு ஏற்கப்பட்டதை எதிர்த்து, சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். சசிகலா மேல்முறையீட்டு மனு மீது ஆகஸ்ட் 2வது வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நாட்டின் 75 நகரங்களை கடந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னை வந்தது. இதற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஜூன் 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்திடம் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
கர்நாடகா, பெல்லாரியில் பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டாரு படுகொலை செய்யப்பட்டார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து சுள்ளியா தாலுகாவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடலூர் மாவட்டத்தில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். விமல்ராஜ் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்
பிற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்த மின் கட்டணமே. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது தைரியமிருந்தால் மின்துறை மீது வழக்கு தொடரட்டும், என மின் கட்டண உயர்வு தொடர்பான அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். மேலும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாத வாடகை கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்
ஏழைக் குடும்ப மாணவர்களின் வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கான காலை சிற்றுண்டித் திட்டம் வரவேற்கத்தக்கது இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும், அனைத்து மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்
கூடங்குளம் அணு மையத்தில் கிடைக்கும் அணுக்கழிவை ரஷ்யாவுக்கு அனுப்பும் திட்டம் இல்லை திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது விசாரணையை ஒட்டி விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள நிலையில், செஸ் விளையாட்டு வீரர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க மாமல்லபுரத்தில் 30 அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளதாகவும், சிறப்பு மருத்துவ குழு 8 மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒட்டி சிறப்பு ஏற்பாடாக சென்னையில் இருந்து பெங்களூரு வரை அரசுப்பள்ளி மாணவர்கள் விமானத்தில் அழைத்து செல்லப்பட உள்ள நிலையில், மாணவர்களின் விமான பயணத்தை அமைச்சர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தனர். விமானத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சிறப்பு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எழுதிய கடிதத்தை இதுவரை காட்டாதது ஏன்? என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசோடு எட்டப்பர்களாக செயல்பட்டவர்களை கட்சியில் இருந்து கூண்டோடு நீக்கி உள்ளோம் என்றும், துரோகிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 7வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள நினைவிடத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிஏசிஎல் நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட் செயயப்பட்டுள்ளார். மேலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர்கள் உள்பட 22 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மின்கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் சோனியாகாந்தி . டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியாகாந்தியிடம் விசாரணை . அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்றும் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் திமுக அரசு உயர்த்தியுள்ளது . திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளனர். மின்கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை, அசோக் நகரில் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய குழு இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. பள்ளி உரிமையாளரின் மனைவி தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து கலவரம் ஏற்பட்டது பள்ளி சேதடைந்தது. இந்நிலையில் அங்கு பயிலும் மாணவர்கள் கல்வியைத் தொடர ஆன்லைன் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.