பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் 49வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கை ஆர்பாட்டம்- 66 பேர் மருத்துவமனையில் அனுமதி
இலங்கையில் நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே வசிக்கும் அதிபர் மாளிக்கைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். இதனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் ஒருவர் அனுமதி என்றும் 5 பெண்கள் படுகாயம் என்றும் கூறப்படுகிறது. படுகாயமடைந்த 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 1 லட்சம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இல்லத்திற்கு சனிக்கிழமை தீ வைத்தது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸார் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: “பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை இலங்கை மக்களிடையே பெரிய சிரமங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலின் சிரமங்களைக் கையாளுவதில் இலங்கை மக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என நம்புகிறேன். இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் சர்வதேச சமூகம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் விக்ரமசிங்கேவுக்கும் பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்றும் அவர்கள் உடனடியாக வெளியேறவில்லை என்றால் மிகவும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் என்றும் இலங்கையின் முன்னாள் அதிபரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
2015 முதல் 2019 வரை ஆட்சியில் இருந்த சிறிசேனா, ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் அதிபர் ராஜபக்சே மற்றும் பிரதமர் விக்ரமசிங்கே ஆகியோரின் வீடுகளை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண 10 அம்ச முன்மொழிவுகளை வெளியிட்டார். ஒரு நாள் கழித்து, அவர்கள் நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வளாகத்திற்குள் நுழைந்தனர்.
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு நடைபெறும் கூடாரம், தலைவர்கள் அமரும் மேடை, நாற்காலியில் சோதனை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
போராட்டக்காரர்கள் அதிபரின் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லம் ஆகிய இரண்டையும் முற்றுகையிட்டதில் இருந்து அதிபர் கோட்டபய ராஜபக்சே இருப்பிடம் இன்னும் தெரியாத நிலையில், எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு 3,700 மெட்ரிக் டன் எல்பி எரிவாயு கிடைத்ததை அடுத்து சமையல் எரிவாயுவை சீராக விநியோகிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய மாதங்களில், கடுமையான எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்தை வற்புறுத்தும் முயற்சியில் மக்கள் நாடு முழுவதும் சாலைகளை மறித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இறுமாப்புடன் நடந்துக் கொள்கிறார். இப்படியே நடந்துக் கொண்டால், இலங்கை அதிபர் கோட்டபயவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் பிரதமர் மோடிக்கும் ஏற்படும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ இட்ரிஸ் அலி கூறியுள்ளார்
ஜனாதிபதியும் பிரதமரும் தமது அதிகாரப்பூர்வ இல்லங்களை விட்டு வெளியேறத் தூண்டிய இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்ட இயக்கத்தின் தலைவர்கள், இருவரும் பதவி விலகும் வரை மாளிகைகளை விட்டு வெளியேறப்போவதில்லை என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். “ஜனாதிபதி ராஜினாமா செய்ய வேண்டும், பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் அரசாங்கம் அமைக்க வேண்டும்” என்று நாடக ஆசிரியர் ருவன்தி டி சிக்கேரா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்வு செய்தவரை 2,600 நபர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்
சனிக்கிழமை வன்முறையின் போது விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்ததற்காக மூன்று பேரை இலங்கை காவல்துறை கைது செய்தது. PTI மேற்கோள் காட்டிய செய்தி அறிக்கைகளின்படி, எதிர்ப்பாளர்கள் கேம்பிரிட்ஜ் பிளேஸில் உள்ள விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் நுழைந்து தீ வைத்து எரித்தனர், சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததோடு ஒரு சொகுசு வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
கைது செய்யப்பட்டவர்களில் கல்கிசையைச் சேர்ந்த 19 வயதுடையவர் மற்றும் 24 மற்றும் 28 வயதுடைய காலியில் வசிக்கும் இருவர் அடங்குவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவாவை மேற்கோள்காட்டி கொழும்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதில் மதுரை மாவட்டம் பின்தங்கியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ பணிகள் 5 மாதத்திற்குள் தொடங்கும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்றும், இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து உதவ வேண்டும் என்றும் காங். தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் செப். 28 வரை உள்ளது, அதை யாரும் மாற்ற முடியாது எந்த லாபத்தையும் எதிர்பார்க்காமல் ஓபிஎஸ் உடன் உள்ளோம், எப்போதும் இருப்போம் என அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான் கூறியுள்ளார்.
இலங்கை பிரதமர், அதிபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர். அனைத்துக்கட்சிகள் இணைந்து கூட்டாட்சி அரசை அமைக்க வழிவகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதில் இன்று காலை 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பு, தற்போது 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகம், புதுச்சேரியில் வரும் 14ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், மக்கள் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியதால், அதிபர் கொத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு நாளை நடைபெற உள்ள வானகரம் மண்டபத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் இதில் பொதுக்குழுவுக்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வரும் நிலையில், வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் 16 ஸ்கேனர்களுடன் கூடிய அதிநவீன நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு ஆர்.எஃப்.ஐ.டி தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன அடையாள அட்டைகள் வழக்கப்பட்டு இந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொதுக்குழுவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் எரிபொருள் விநியோகத்தை தொடங்கியுள்ள லங்கா IOC நிறுவனம். அரசின் கோரிக்கையை ஏற்று வெள்ளிக்கிழமையில் இருந்து எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் எரிபொருள் விநியோகம் தொடங்கியுள்ளது.
திவாகரன் தனது கட்சியை சசிகலாவுடன் வரும் 12ம் தேதி இணைக்கிறார்
வரும் 17ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட்டை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
”தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்குக்கு அவசியமில்லை. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிக குறைவு. தனியார் மருத்துவமனைகளில் விரைவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செங்கல்பட்டு அருகே தொழுப்பேட்டில் நடந்த அரசுப் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்வு. ஏற்கனவே 6 பேர் பலியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் என்பவர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவால் மேலும் 18,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 14,553 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 1.28 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 50% சொத்துக்கள் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் வாசுதேவன் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா, தீபக் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1,000 ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் . அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிளுக்கு ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்.