பெட்ரோல் டீசல் விலை: சென்னையில் 195-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2187 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியின் நீரிருப்பு 62 மில்லியன் கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 300 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Sep 29, 2024 00:31 ISTதுணை முதல்வர் உதயநிதி.. 3 அமைச்சர்கள் நீக்கம்: 6பேர் இலாகா மாற்றம்
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மாற்றம் செய்யப்பட்டு, வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ், மனிதவள மேலான்மைத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவானன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Sep 28, 2024 21:49 ISTதமிழக அமைச்சரவையில் மாற்றம்
தமிழக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
-
Sep 28, 2024 20:07 IST75 ஆண்டுகளாக வீறுநடை போடுகிறது திமுக: பவள விழாவில் திருமாவளவன் பேச்சு
"75 ஆண்டுகளாக வீறுநடை போடுகிறது திமுக, சமூக நீதிக்கு இந்தியா முழுவதும் வழிகாட்டும் இயக்கம் திமுக."திமுகவில் அடுத்தடுத்து வருவது கருத்தியல் வாரிசு. இருமொழிக் கொள்கையில் இன்றும் திடமாக உள்ளது. இது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணி அல்ல" என திருமாவளவன் கூறியுள்ளார்.
-
Sep 28, 2024 20:03 ISTதமிழக அமைச்சரவை மாற்றம் செய்ய ஆளுநருக்கு கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்!
தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கான கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
Sep 28, 2024 19:25 ISTசென்னை தியாகராயர் நகரில் ஓவியக் கண்காட்சி
சென்னை தியாகராயர் நகரில் The Unicard-Fuego furniture Showroom-ன் ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த Different strokes எனப்படும் இக்கண்காட்சி, நேற்று தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஓவியங்கள் முழுவதும் Artistics of Art என்ற புதுமையான முயற்சியின் மூலம், பென்சிலால் வரையப்பட்டுள்ளன.
-
Sep 28, 2024 19:23 ISTதிமுக பவள விழாவில் த.வா.க. தலைவர் வேல்முருகன் கோரிக்கை
"தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அனைத்து சாதிகளுக்கும் சமநீதி வழங்க வேண்டும். கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பாக கோரிக்கை வைக்கிறேன்" என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் திமுக பவள விழாவில் த.வா.க. தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
-
Sep 28, 2024 18:32 ISTநிர்மலா சீதாராமன் மீது பெங்களூரில் எஃப்.ஐ.ஆர் பதிவு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரப் பணம் வசூலித்ததாக, ஆதர்ஷ் ஐயர் என்பவர் அளித்த புகாரின் பேரில் சிறப்பு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Sep 28, 2024 18:15 ISTதி.மு.க பவள விழா; திருமாவளவன், வைகோ, செந்தில் பாலாஜி பங்கேற்பு
காஞ்சிபுரத்தில் தி.மு.க பவள விழா பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் வி.சி.க தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க தலைவர் வைகோ, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்
-
Sep 28, 2024 18:13 ISTசென்னையில் பால்கனி இடிந்து விழுந்து விபத்து; 4 பேர் காயம்
சென்னை மயிலாப்பூர் அருகே பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழுதடைந்த வீட்டின் பால்கனி பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் வெண்ணிலா, சிறுவன் ரிஷி காயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடற்கரையில் விமானப்படை ஒத்திகை அதிர்வலையால் விபத்து என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
-
Sep 28, 2024 17:55 ISTஸ்டாலின் நடவடிக்கை; பத்திரமாக மீட்கப்பட்ட 26 தமிழர்கள்
தமிழகத்தை சேர்ந்த 26 பேர், குஜராத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பிய போது பேருந்து வெள்ளத்தில் சிக்கிய சம்பவத்தில், முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கையால் 26 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு குஜராத்தின் பாவ் நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 26 பேரும் ரயில் மூலம் வரும் 1ம் தேதி காலை சென்னை வர உள்ளனர் என அயலக தமிழர் நலன் ஆணையரகம் தெரிவித்துள்ளது
-
Sep 28, 2024 17:26 ISTதமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வலியுறுத்தி, மயிலாடுதுறை எம்.பி சுதா எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
-
Sep 28, 2024 17:07 ISTஇஸ்ரேல் தாக்குதல் – முக்கிய தலைவர்களை இடமாற்றும் ஈரான்
இஸ்ரேலின் தாக்குதல்களை தொடர்ந்து ஈரான் தனது நாட்டு தலைவர்களை பத்திரமாக இடமாற்றம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை ஈரான் பத்திரமாக இடமாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். ஜூலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா தெற்கு பிராந்திய கமாண்டர், ட்ரோன் பிரிவு கமாண்டர் என முக்கிய தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
-
Sep 28, 2024 16:45 ISTபட்டாசு ஆலை உரிமம் ரத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் வெடி விபத்து ஏற்பட்ட தனியார் பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது
-
Sep 28, 2024 16:37 ISTசென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடக்கம்
சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது
-
Sep 28, 2024 16:03 ISTகொள்ளையர்களின் தலைவன் யார்? - நாமக்கல் எஸ்.பி பேட்டி
ஒரு சில ஏ.டி.எம்.,களில் உள்ள குறைகளை சரி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பிய பிறகு தேவைப்பட்டால் காவல்துறை கஸ்டடியில் எடுக்கப்படும். குற்றவாளிகளிடம் இருந்து ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.67 லட்சத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளோம். குற்றவாளிகளில் யார் தலைவர் என சொல்ல முடியாது, ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்துள்ளனர் என நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
-
Sep 28, 2024 15:43 ISTவிருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து; மேலாளர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலை மேலாளர் சரவணன் என்பவரை சாத்தூர் நகர் போலீசார் கைது செய்துள்ளனர்
-
Sep 28, 2024 15:21 ISTபண்டிகை காலம்; கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
அக்டோபர், நவம்பர் மாதங்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் 6 ஆயிரம் சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. பயணிகள் நெரிசலை தவிர்க்க, 108 ரயில்களில் கூடுதலாக பொதுப் பெட்டிகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
-
Sep 28, 2024 14:43 ISTஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா பலி - இஸ்ரேல் ராணுவம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் மகள் ஜைனப் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், நஸ்ரல்லா நலமுடன் இருப்பதாக ஈரானிய ஊடகங்களில் தகவல் வெளியாகியும் உள்ளது.
-
Sep 28, 2024 14:36 IST"கூகுள்"-க்கு `வார்னிங்' விடுத்த ட்ரம்ப்..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுபவரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப், கூகுள் மீது பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசைப் பற்றி நேர்மறையாகவும், தன்னைப் பற்றி மோசமான கட்டுரைகளையும் கூகுள் காட்டுவதாகவும், தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூகுளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
-
Sep 28, 2024 14:35 IST18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Sep 28, 2024 13:52 ISTபதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியீடு
நாமக்கம் மாவட்டம் வெப்படை அருகே ஏ.டி.எம். கொள்ளையர்கள் கன்டெய்னர் லாரியை தாறுமாறாக ஓட்டி, விபத்தை ஏற்படுத்திய பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
-
Sep 28, 2024 13:36 ISTகரூர், திருவண்ணாமலையில் டைடல் பூங்கா
தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முதல் கட்ட பணிகளை தொடங்கியது. வரைபட தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.
-
Sep 28, 2024 13:36 ISTசேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜி. ரவீந்திரநாத் 2வது வழக்கில் கைது
சையது அமான் என்பவருக்கு சொந்தமான ரூ.10 கோடி நிலத்தை காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு போலி ஆவணம் மூலம் மாற்றிய வழக்கில் சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜி. ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மற்றொருவர் பெயருக்கு மாற்றிய புகாரில் புதன்கிழமை கைதானார்.
கடந்த புதன்கிழமை டி.ஐ.ஜி. ரவீந்திரநாத்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். 2வது வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை புழல் சிறை அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழங்கினர்
-
Sep 28, 2024 13:31 ISTதமிழ்நாடு தான் முகவரியாக உள்ளது - ஸ்டாலின் பேச்சு
"தமிழ்நாடு மேல் டாடா குழுமம் நம்பிக்கை வைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறோம். உலகில் உள்ள முக்கிய நிறுவனங்கள் பலவற்றுக்கும் தமிழ்நாடு தான் முகவரியாக உள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. டாடா குழுமம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை செய்ய வேண்டும் பொருளாதாரம் மட்டுமல்ல பெண்களுக்கு உரிமை வழங்குவதிலும் தமிழ்நாடு தான் முதலிடம்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Sep 28, 2024 13:24 ISTலெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், மேலும் 300 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தலைமையகத்தைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.
-
Sep 28, 2024 13:04 IST"கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து” - பிரேமலதா விஜயகாந்த்
"திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் யாரிடமும் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
Sep 28, 2024 13:03 ISTதங்கம் சவரனுக்கு ரூ.40 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது ஒரு கிராம் தங்கம் ரூ.7,095க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.56,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Sep 28, 2024 13:03 ISTநாளை முதல் வானில் 2 நிலா
பூமிக்கு அருகே 14 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் வரும் சிறிய விண்கல் சூரிய ஒளிப்பட்டு, பூமியை நோக்கி திரும்பும் என்பதால், நாளை முதல் வானில் 2 நிலவு தோன்றும் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Sep 28, 2024 11:47 ISTகொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம்
நாமக்கல் அருகே பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம். சென்னையில் முகாமிட்டு, கொள்ளையடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
பிடிபட்ட கொள்ளையர்களில் 2 பேர் மீது ஏற்கனவே கிருஷ்ணகிரியில் ஏடிஎம் கொள்ளை வழக்கு பதிவு, 2 பேர் மீது ஆந்திர மாநிலம் கடப்பாவில் இதேபோன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தனர். மேலும், வடமாநில கொள்ளையர்களிடம் கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Sep 28, 2024 11:19 ISTடிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு வழக்கில் கைது
சேலம் பத்திரப் பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் வரதராஜபுரத்தில் சையது அமீன் என்பவரின் ₹10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரத்தில் ₹50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றிய புகாரில் ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
Sep 28, 2024 11:18 ISTஜாக்வார், லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலை திறப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் டாட்டா மோட்டார்ஸ் (TATA MOTORS) நிறுவன ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சுமார் ₹9000 கோடி மதிப்பில் இந்த ஜாக்வார், லேண்ட் ரோவர் சொகுசு கார் உற்பத்தி ஆலை திறப்பு. இதன் மூலம் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
-
Sep 28, 2024 10:59 ISTமாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் சோதனை
கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் இடங்களில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சரவணம்பட்டி, பீளமேடு, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அறைகளில் போதை பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் இருக்கின்றதா என்பது குறித்து அதிரடி ஆய்வு. மாணவர்கள் அல்லாத நபர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை, 60க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
-
Sep 28, 2024 10:58 ISTநாமக்கல் என்கவுன்ட்டர் - பரபரப்பு தகவல்
நாமக்கல் அருகே பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அரியானாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 2 பேர், கண்டெய்னர் லாரி மூலம் கேரள மாநிலம் திருச்சூர் சென்றதாக தகவல், எஞ்சிய 3 கொள்ளையர்கள் கார் மூலம் திருச்சூர் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி காவல்நிலையத்தில் புகார். கார் ஓட்டுநர் சிவ பிரகாசம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
Sep 28, 2024 10:50 ISTஅக்.9-ல் மதுரையில் அதிமுக உண்ணாவிரதம்- இ.பி.எஸ்
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மதுரையில் அக்.9-ல் அதிமுக உண்ணாவிரத போராட்டம். அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்டவற்றை திமுக அரசு நிறுத்தி உள்ளது. முதல்வலின் பயணங்களால் பெறப்பட்ட அன்னிய முதலீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- இ.பி.எஸ்
-
Sep 28, 2024 10:42 ISTஅக்.9-ல் மதுரையில் அ.தி.மு.க உண்ணாவிரதம்- இ.பி.எஸ்
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மதுரையில் அக்.9-ல் அதிமுக உண்ணாவிரத போராட்டம். அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்டவற்றை திமுக அரசு நிறுத்தி உள்ளது. முதல்வலின் பயணங்களால் பெறப்பட்ட அன்னிய முதலீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- இ.பி.எஸ்
-
Sep 28, 2024 10:04 ISTதங்கம் சவரனுக்கு ரூ.40 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760க்கும் 1 கிராம் ரூ.7,095க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Sep 28, 2024 08:50 ISTசாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
பட்டாசு ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல், தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ் ம்றறும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சாத்தூர் டிஎஸ்பி மற்றும் ஏராளமான போலீசார் விரைந்தனர்.
-
Sep 28, 2024 08:22 ISTராணிப்பேட்டையில் புதிய டாடா ஆலை
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
₹9000 கோடி மதிப்பில் அமையும் கார் உற்பத்தி ஆலை மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழிற்சாலையில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.