அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
பெட்ரோல் – டீசல் விலை
பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63, டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை கூட்டத்தில் காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
அணை நீர்மட்டம்
பவானிசாகர் அணை நீர்மட்டம் – 82.64 அடி, நீர் இருப்பு – 17.1 டிஎம்சி, நீர்வரத்து – 1,058 கனஅடி, நீர் வெளியேற்றம் – 1,055 கன அடி.
இன்று வேட்புமனு தாக்கல்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம். ஜூன் 29ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மேலும் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18- ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ்: “அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற வார்த்தைக்கே இடமில்லை. ஜெயக்குமார் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் இல்லை; ஜெயக்குமார் கூறியது அவரது சொந்த கருத்து; அதிமுகவை காப்பாற்றும் தகுதியும், பொறுப்பும் ஓ.பி.எஸ்-க்கு மட்டும்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் புயலைக் கிளப்பி உள்ள நிலையில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயும் ஆதரவாளர்கள் இடையேயும் பலப்பரிட்சை நடந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக தொண்டர்கள் அனைவரையும் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் புதன்கிழமை ஒப்புக்கொண்டனர்.
அரசியல் கட்சிகளின் கூட்டு மாநாட்டை கூட்டிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்று பல கட்சிகள் வந்துள்ளன. ஒருமித்த வேட்பாளரை மட்டுமே தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அந்த வேட்பாளருக்கு அனைவரும் தங்கள் ஆதரவை அளிப்பார்கள்.
நாங்கள் மற்றவர்களுடன் கலந்தாலோசிப்போம். இது ஒரு நல்ல ஆரம்பம். பல மாதங்களுக்குப் பிறகு நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசினோம். மீண்டும் அமர்ந்து பேசுவொம்” என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
இந்த கூட்டத்தில், கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளராக என்சிபி தலைவர் சரத்பவாரை எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், அவர் மீண்டும் வாய்ப்பை மறுத்துவிட்டார். பரூக் அப்துல்லா மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்களையும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக மம்தா பானர்ஜி பரிந்துரைத்ததாக ஆர்.எஸ்.பி-யின் என்.கே. பிரேம்சந்திரன் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கடனுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியதாக கூறுகின்றனர். பணம் கொடுத்தால் மட்டுமே விற்பனை நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என அறிவிப்பு
கந்துவட்டி தொடர்பாக தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் 124 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கும்பகோணம் அரசு கலை கல்லூரி முதல்வரை மாற்ற கோரி, பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். யுஜிசி நிதியில் கல்லூரி முதல்வர் முறைகேடு செய்ததாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
திமுக எம்.பி டி.ஆர். பாலு: “ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை முடிவு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி டி.ஆர். பாலு பேட்டி: “எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிற்க சரத் பவார் மறுத்துவிட்டார். அடுத்ததாக முதல்வர்கள் அடங்கிய கூட்டம் கூட்டப்பட்டு பொதுவேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும். * மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, சரத்பவார் ஆகிய 3 பேர் அடங்கிய குழு அடுத்த கூட்டம் குறித்து முடிவெடுக்கும்” என்று கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பின் மம்தா பானர்ஜி பேட்டி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட சரத் பவார் மறுத்துவிட்டார் என்று கூறினார்.
தமிழகத்தில், ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்த பயிற்சி வகுப்பு வரும் 18ம் தேதி நடைபெறும். அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் 6 வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் கடிதத்தை அரசியல் ஆதாயத்திற்காக கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. மேகதாது அணை விவகாரம் தமிழக விவசாய குடிமக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினை” என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மகளிர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றுள்ளனர்
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் ஆலோசனையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ள நிலையில் திமுக சார்பில் எம்.பி. டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்.
மண்ணின் பெருமை தெரியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். சனாதனத்திற்கு சாவு மணி அடித்தது இந்த மண், அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோவிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்க கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு அளித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல. யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை அரசு தரப்பில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னிர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். கட்சிக்கு ஒருவர் தலைமை ஏற்றால், மற்றொருவருக்கு பாதிப்பில்லாத வகையில் சுமூக முடிவெடுக்கப்படும் என்றும் அதிமுக ஒற்றை தலைமை பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா முதல்வரின் கருத்து சரியல்ல என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் பேசுகையில், “கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு காவிரி வரலாறு குறித்து தெரியவில்லை. காவிரி விவகாரத்தில் இப்போது வரை கர்நாடகா அரசு தடைக்கல்லாக உள்ளது . காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பையும் ஏற்று கொள்ளாமல் வாதாடுவது கர்நாடகா அரசு.” என்று கூறியுள்ளார்.
ஒற்றை தலைமை தொடர்பான போஸ்டர் கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சாலைமறியல் ஈடுபட்டு வருகின்றனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு அருகே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் பஞ்சம். பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் எந்த பணியும் செய்வதில்லை என்று வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அதிகாரிகள் முறையாக பணியாற்றாததற்கு அரசே காரணம் என்று நீதிபதிகள் காட்டமாக பேசியுள்ளனர்.
மேலும் திருவள்ளூர் – வட பெருமாக்கம் பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்ட ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தி.மலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்ட ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்கு பிறகு, ஓ.பி.எஸ். உடன் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்த முயற்சி என தகவல் வெளியாகி உள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, இறுதி முடிவுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பவியல் துறையானது தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் 3வது நாளாக ராகுல்காந்தி இன்று ஆஜரானார்.
குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்குவதற்கு விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் கூறியுள்ளார்.
5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தாண்டு ஜூலைக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும்.
டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை காவல்துறை கைது செய்தது. இதைக் கண்டித்து, டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் மகளிர் காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதங்கள் எழுந்த நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல், ஈ.பி.எஸ். இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 300-ஐ கடந்த நிலையில் இன்று 400-ஐ தாண்ட வாய்ப்பு உள்ளது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்ட வாய்ப்பு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை, அதிமுக தலைமை அலுவலகம் அருகே அதிமுக ஒருங்கிணைபாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை எதிரொலி ஓபிஎஸ் தலைமையே என்ற வாசகத்துடன் பல இடங்களில் போஸ்டர்கள்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,715-க்கு விற்பனை
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வசதிக்காக கோயில்களில் சாய்வு தளம், சக்கர நாற்காலிகள் அமைக்க உத்தரவு. சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்திடவும் முதுநிலை திருக்கோவில் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவு.
மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி நடத்தும் குடியரசுத்தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டத்தில் ஆம் ஆத்மி, தெலுங்கான ராஷ்டிரிய சமிதி பங்கேற்கவில்லை. குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்த பின்பே எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.