Advertisment

Tamil Breaking News Highlights: ஹாரிஸா? டிரம்பா? அமெரிக்காவை ஆளப்போவது யார்? இன்று அதிபர் தேர்தல்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் லைவ் பிளாக் இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamala Harris becoming president would be insult to America, people don’t like her: Donald Trump

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 232-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் சொந்த ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்னை திரும்புவதால் சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Nov 05, 2024 06:09 IST
    முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு 

    முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர், இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.



  • Nov 05, 2024 06:06 IST
    மேம்பாலப் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

    சென்னை கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேம்பால கட்டுமானப் பணி நடைபெற உள்ளதால் நவம்பர் 6-ம் தேதி முதல் ஸ்டீபன்சன் சலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை உள்ள சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது.



  • Nov 05, 2024 06:04 IST
    திருவண்ணாமலை மகா தீபத்திற்கு 11,500 பேருக்கு அனுமதி

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்: “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் மகாதீபத்திற்கு 11,500 பேருக்கும் பரணி தீபத்திற்கு 7,500 பேருக்கும் அனுமதி அளிக்கப்படும். 2668 அடி உயரத்தில் ஏற்றப்படும் மகாதீபத்தை காண்பதற்காக 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.” என்று கூறினார்.



  • Nov 05, 2024 06:00 IST
    முகுந்த் சாருக்கும் என் அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு - சிவகார்த்திகேயன் பேச்சு

    அமரன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு: “முகுந்த் சாருக்கும் என் அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு. அப்பா இந்த மாதிரி ஊருக்கு வரேன்னு சொன்னாரு. அடுத்த நாள் நான் காலேஜ் போய்ட்டு வரும்போது வீட்டுல கூட்டமா இருந்துச்சு. அப்பா இறந்திட்டார்னு தெரிஞ்சது. சடங்கு முடிக்கும்போது என்னுடைய் அப்பாவோட எலும்பை பார்த்தேன். அங்க உடைஞ்சது அப்பாவோட எலும்பு மட்டும் இல்ல, 17 வயசு பையனான என்னுடைய மனசும்தான். இந்த படத்தோட கிளைமேக்ஸ் மாதிரி ஜனாதிபதிகிட்ட எங்க அம்மா மெடல் வாங்ன்கினாங்க. இந்த படத்தின் மூலமாக என்னுடைய அப்பாவை நான் பார்த்துட்டேன். முகுந்த் வரதராஜன் வாழ்க்கைக்கும் என் அப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. என் அப்பாவை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பை அமரன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என்று கூறினார்.



  • Nov 04, 2024 22:27 IST
    நடிகை கஸ்தூரி மீது அல்லி நகரம் காவல் நிலையத்தில் புகார்

    தேனி மாவட்டம், அல்லி நகரம் காவல் நிலையத்தில், நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார் அளித்துள்ளனர். தெலுங்கு இன மக்களை அவதூறாகப் பேசியதாக நடவடிக்கை எடுக்கக் கோரி அல்லிநகரம் வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.



  • Nov 04, 2024 20:34 IST
    ஈரோட்டில் பச்சிளம் குழந்தை விற்பனை - மேலும் 4 பேர் கைது

    ஈரோட்டில் பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையை வாங்கிய தம்பதியர், இடைத்தரகர் ஜெயபாலன், குழந்தையின் தாய் நித்யா ஆகியோரைக் கைது செய்து ஈரோடு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.



  • Nov 04, 2024 19:35 IST
    குன்றத்தூரில் பிரியாணியில் பல்லி; கடைக்கு அதிகாரிகள் சீல் 

    காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் பிரியாணியில் பல்லி இருந்த விவகாரத்தில் அந்த பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பிரியாணி கடையில் சோதனை நடத்திய நிலையில், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த பிரியாணி கடைக்கு தற்காலிகமாக சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.



  • Nov 04, 2024 19:26 IST
    முடா ஊழல்: மைசூரு லோக் ஆயுக்தா அலுவலகத்தில் ஆஜராக சித்தராமையாவுக்கு நோட்டீஸ்

    முடா ஊழல் தொடர்பாக நவம்பர் 6ல் மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.



  • Nov 04, 2024 18:53 IST
    முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்- தமிழ்நாடு அரசு

    முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது



  • Nov 04, 2024 18:46 IST
    நீட் மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் - ஆணையர் பதிலளிக்க உத்தரவு

    நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் 6 வாரங்களுக்குள் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது



  • Nov 04, 2024 18:22 IST
    கேரளாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய மத்தி மீன்கள்

    கேரளா மாநிலம் தளிக்குளம், கோனாடு கடற்கரையில் லட்சக்கணக்கான மத்தி மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கின. கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அள்ளி சென்றனர்



  • Nov 04, 2024 18:02 IST
    மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளநீர் - நோயாளிகள் அவதி

    கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது



  • Nov 04, 2024 17:38 IST
    ஆக்ரா அருகே விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்த போர் விமானம்

    உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மிக்-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்தது. விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பாராசூட் மூலம் கீழே குதித்து விமானிகள் உயிர் தப்பினர்



  • Nov 04, 2024 17:24 IST
    தேவாலயத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல்

    மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் வரவு, செலவு கணக்கு விபரங்களை கேட்டதால் பழைய மற்றும் புது நிர்வாகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது 



  • Nov 04, 2024 17:05 IST
    காற்று மாசுபாடு; டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

    தீபாவளியின் போது டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பட்டாசுக்கு முழுமையாக தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டதா? என டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது



  • Nov 04, 2024 17:04 IST
    சமூக நலத்துறை பணிக்கு இந்தி தகுதி - அதிகாரி பணியிடை நீக்கம்

    சமூக நல ஆணையரகத்தில், அழைப்பு ஏற்பாளர் பணியின் தகுதிகள் குறித்து தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிவிக்கை உடனடியாக நீக்கப்பட்டு, தமிழ், ஆங்கிலம் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்டு மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கிறார் முதலமைச்சர். தி.மு.க ஆட்சியில் அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்



  • Nov 04, 2024 17:01 IST
    தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக பொய் பிரசாரம் செய்கின்றனர் - நடிகை கஸ்தூரி

    நான் பேசியதை திரித்து பொய் பிரசாரம் செய்கிறார்கள். தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100% பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர். தெலுங்கு மக்கள் என்று நான் கூறவில்லை, இனவாதம் பேசவில்லை. பொய்களுக்கு அச்சப்படுபவள் நான் இல்லை. வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன். தனிப்பட்ட தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் கடந்து போகிறேன் என நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்



  • Nov 04, 2024 16:58 IST
    பெண் காவலர்கள் உயிரிழப்பு - காவல் ஆணையர் விளக்கம்

    சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர்கள் இருவரும் அலுவலக பணி ரீதியாக செல்லவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு, ஆவடி காவல் ஆணையர் சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்



  • Nov 04, 2024 16:05 IST
    சென்னை மெட்ரோவில் அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பேர் பயணம்

    சென்னை மெட்ரோவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 90.83 லட்சம் பேர் பயணம் செய்ததாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அக்டோபர் 6 ஆம் தேதி 4 லட்சத்து 42 பேர் பயணம் செய்ததாக தெரிவித்துள்ளது.



  • Nov 04, 2024 15:39 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேரின் நீதிமன்றக் காவலை நவம்பர் 14ஆம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகலை கைதான 27 பேரும் பெற மறுத்த நிலையில் நீதிமன்றக் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். 



  • Nov 04, 2024 15:35 IST
    பயன்பாட்டுக்கு வந்தது கோ வொர்க்கிங் ஸ்பேஸ்

    சென்னை கொளத்தூரில் அகரம் பகுதியில் கோ- வொர்க்கிங் ஸ்பேஸ் மற்றும் மாணவர்களுக்கான கல்வி மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இணையதள வசதி, பார்க்கிங், ஏ.சி, ஆலோசனை அறை என அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையத்திற்கு ஒரு நாளைக்கு ₹100-ம் மாதத்திற்கு ₹2,500-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  



  • Nov 04, 2024 15:27 IST
    சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி மாற்றம் - தேர்தல் ஆணையம்

    நாடு முழுவதும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நவம்பர் 13 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருவிழாவை முன்னிட்டு கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசத்தில்  14 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.



  • Nov 04, 2024 14:53 IST
    உத்தரகாண்ட் பஸ் விபத்து - இரங்கல் தெரிவித்த மோடி  நிவாரணம் அறிவிப்பு 

    உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.  "காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்" என்றும் கூறி உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Nov 04, 2024 14:33 IST
    சட்டப்பிரிவு 370 - பாஜக எதிர்ப்பு 

    ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், சட்டப்பிரிவு 370-வை மீண்டும் கொண்டு வருவது குறித்த தீர்மானத்தை மக்கள் ஜனநாயக கட்சியின் (PDP)எம்எல்ஏ வஹீத் பாரா முன்மொழிந்தார் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாபஸ் பெற வேண்டும் எனவும் 28 பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தீர்மானத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என சபாநயகர் விளக்கம் அளித்துள்ளார். 



  • Nov 04, 2024 14:13 IST
    சிதம்பரத்தில் புதிய கொடி நட தடை - கோர்ட் உத்தரவு 

    சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னிதானத்தில் புதிய கொடிமரம் நடுவதற்கு தடை விதித்து சிதம்பரம் சார்பு நீதிமன்ற சார்பு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 15 நாட்களுக்கு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • Nov 04, 2024 14:00 IST
    கோவை: பூட்டிய வீட்டிற்குள் புகுந்து கொள்ளை 

    கோவையில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து 35 சவரன் நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளன. கொள்ளை கும்பல் மேலாடை இல்லாமல் டவுசரோடு வீட்டின் கேட்டை ஏறி குதித்துள்ளனர். அவர்கள் கட்டுமான தொழிலதிபர் ஆனந்த ராம் வீட்டில் கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். 



  • Nov 04, 2024 12:54 IST
    வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா ஆய்வு

    சென்னை திருவொற்றியூரில் வாயு கசிந்த தனியார் பள்ளியில் வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா ஆய்வு செய்து வருகிறார்.

    பள்ளிக்கு வந்த மாணவர்கள் 8 பேர் மயக்கம் அடைந்த நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

    மாணவர்களை அழைப்பதற்காக வகுப்பறைக்கு சென்ற பெற்றோரும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

    அவசரமாக வெளியேறும் போது, கூட்டத்தில் தடுக்கி விழுந்து ஒரு சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. 



  • Nov 04, 2024 12:53 IST
    புதிய பல்நோக்கு மையக் கட்டடத்தை திறந்து வைத்த ஸ்டாலின்

    சென்னை கொளத்தூர் பகுதியில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மையக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்ட ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கியதுடன், புதிதாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு குடும்ப அடைகளையும் வழங்கினார். 



  • Nov 04, 2024 12:31 IST
    விஜயை மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலின்

    புதிய கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க அழிய வேண்டும் என்று நினைக்கின்றனர் - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார். 



  • Nov 04, 2024 12:06 IST
    நீட் தேர்வு - மத்திய அரசு பணியத்தான் போகிறது

    "நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு ஒரு நாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறு நாள் நடந்துதான் தீரும்" - கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.



  • Nov 04, 2024 11:38 IST
    30க்கும் மேலான குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேலான குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய் பரவியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி. தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி உரிய சிகிச்சை அளிக்க ராஜதானிக்கோட்டை கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

    கடந்த சில தினங்களில் குழந்தைகள் வீடுகள் மற்றும் பள்ளிகளில் அடிக்கடி மயங்கிவிழுந்தனர்

    இதையடுத்து குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 



  • Nov 04, 2024 11:33 IST
    மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு

    சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு. 

    இதே பள்ளியில் 2 வாரங்களுக்கு முன் வாயுக்கசிவால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து விடுமுறை அளிக்கப்பட்டது. 10 நாட்களுக்கு பின் இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் 2 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

     பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • Nov 04, 2024 11:15 IST
    வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளி இன்று திறப்பு

    சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளி 10 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது.

    தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள். விபத்து குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் பள்ளியை திறந்தது எப்படி? என கேள்வி எழுப்பினர்.

    மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டால் யார் பொறுப்பு? என பெற்றோர்கள் எழுப்பினர். கேள்வி வாயு கசிவுக்கான காரணம் கண்டறிந்த பிறகு பள்ளியை திறக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Nov 04, 2024 11:14 IST
    கடலூர் மருத்துவமனையில் அலைமோதும் நோயாளிகள் கூட்டம்

    கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. காய்ச்சலுடன் இருமல், சளி மற்றும் மூட்டு வலியும் இருப்பதாக பொதுமக்கள் வேதனை. பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தகவல் கூறியுள்ளனர். 3 தினங்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் ரத்தப் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 



  • Nov 04, 2024 10:56 IST
    அடையாறு முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகள் தொடங்கம்

    வடகிழக்கு பருவமழை காலத்தில் குடியிப்புகளுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால், ஆறுகள் என நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வந்தன.  இதன் அடுத்த கட்டமாக தற்போது முகத்துவாரங்களை தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை தொடங்கியுள்ளது. சென்னையின் முக்கிய ஆறான அடையாறு கடலில் கலக்கும் பட்டினப்பாக்கம் - அடையாறு இடையே உள்ள முகத்துவாரத்தில் தற்போது இப்பணிகள் தொடங்கியுள்ளது. குறிப்பாக, 150 மீட்டர் அகலத்திற்கு உள்ள மணல் திட்டுகள் அகற்றப்பட்டுள்ளன.



  • Nov 04, 2024 10:40 IST
    6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



  • Nov 04, 2024 10:13 IST
    சென்னைக்கு திரும்பும் மக்கள் - போக்குவரத்து நெரிசல்

    தீபாவளி விடுமுறை முடிந்து ஏராளமான பொதுமக்கள் சென்னைக்கு திரும்புவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலை, ஊரப்பாக்கம், வண்டலூர் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.



  • Nov 04, 2024 09:45 IST
    கிரிக்கெட்டில் இருந்து சாஹா ஓய்வு

    அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ரித்திமான் சாஹா அறிவித்துள்ளார். நடப்பு ரஞ்சி கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Nov 04, 2024 09:13 IST
    நடராஜர் கோயில் தீட்சதர்களுடன் பேச்சுவார்த்தை

    சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளே தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் புதிய கொடிமரம் மாற்ற வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் தீட்சதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொடிமரத்தில் வளையம் போன்றவற்றை அமைப்பதற்கு தீட்சதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Nov 04, 2024 08:54 IST
    அரசு பேருந்துகளில் சுமார் 79 ஆயிரம் பேர் பயணம்

    தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி, நேற்று மட்டும் சிறப்பு பேருந்துகளில் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். ஒரு நாளில் அரசு பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை இதுவே அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 04, 2024 07:56 IST
    ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரண உதவி அறிவிப்பு

    கேரள மாநிலம், ஷோரனூர் அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரூ. 3 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படுகிறது. ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



  • Nov 04, 2024 07:50 IST
    நீலகிரியில் கனமழை - உதவி எண்கள் அறிவிப்பு

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்து தகவலளிக்க அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டோல் ஃப்ரீ எண் 1077, 0423-2450034, 0423-2450035, வாட்ஸ் ஆப் எண் - 99431 26000 



  • Nov 04, 2024 07:24 IST
    17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 04, 2024 07:19 IST
    குன்னூர் தாலுகாவில் விடுமுறை

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.



Tamilnadu Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment