News Highlights: பருவமழை முன் எச்சரிக்கை; முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு

Tamil News Today : நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை, தமிழக முதல்வர் இன்று மதியம் ஆய்வு செய்யவுள்ளார்.

By: Dec 1, 2020, 7:55:14 AM

Latest Tamil News : பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, தமிழக முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதுதொடர்பாக, நிதி ஆதரத்தைப் பொறுத்து கொஞ்சம் கொஞ்சமாக தீர்வு கிடைக்கும் என்று கூறினார்.

இன்று காலை 10 மணியளவில் கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த். இதற்காக 38 ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

வங்க கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியினால், நாளை முதல் மூன்று நாள்களுக்குத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும், மற்ற கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. மேலும், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், தமிழகக் கடலோர பகுதிகளில் பலத்தைக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை முதல்வர் இன்று மதியம் பார்வையிடவுள்ளார். மேலும், தமிழகத்தின் மற்ற பாதிப்புப் பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, இன்று மாலை தமிழகம் வருகிறது. தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மத்தியக் குழு பார்வையிடத் திட்டமிட்டுள்ளது.

அண்மையில், நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த ராயபுரம் மனோ முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

உலகளவில் 6.30 கோடி பேருக்கு கொரோனா. 4.35 கோடி பேர் குணமடைந்த நிலையில் 14.64 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:20 (IST)30 Nov 2020
சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த தடை15 நாட்களுக்கு நீட்டிப்பு


சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவதற்கான தடையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

22:14 (IST)30 Nov 2020
7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்கி தமிழக அரசு அரசாணை

7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக ரூ.16 கோடிக்கான சுழல் நிதியை உருவாக்கி தமிழக அரசு அரசாணை
அரசாணை வெளியீட்டுள்ளது.

21:25 (IST)30 Nov 2020
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துக்கிறார். தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தென் மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். மத்திய குழு நாளை வருவதையொட்டி, ஆலோசனை நடைபெறவுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

21:20 (IST)30 Nov 2020
புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கோவிட் வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கோவிட் வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். 2021 ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.

20:31 (IST)30 Nov 2020
தாமிரபரணி கரைகளை கண்காணிக்க மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்

தாமிரபரணி ஆற்றின் கரைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தின் முக்கியமான நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

20:30 (IST)30 Nov 2020
தமிழகத்தில் வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை 15% குறைவு - அமைச்சர் உதயகுமார்

அமைச்சர் உதயகுமார், “தமிழகத்தில் வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை 15% குறைவாக பெய்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசு தயார் நிலையில் உள்ளது” என்று கூறினார்.

20:27 (IST)30 Nov 2020
50 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை யென்றாலும் காங்கிரஸ் வலிமையான கட்சி - ராகுல் காந்தி

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே காணொளி வயிலாக பேசிய ராகுல்காந்தி, தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லையென்றாலும் வலிமையான கட்சி காங்கிரஸ். கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலம் கட்சி மேலும் வலுப்பெறும் என்று கூறினார்.

20:15 (IST)30 Nov 2020
ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் அஞ்சலி செலுத்துவார்கள்; அதிமுக அறிக்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 4ம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 5ம் தேதி முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள் என்று அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

19:35 (IST)30 Nov 2020
டிச. 2ம் தேதி பா.ரஞ்சித் - ஆர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

18:28 (IST)30 Nov 2020
புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியளிக்க வேண்டாம் - ஐகோர்ட்

ஒரு பொதுநல வழக்கில், சென்னையை சுற்றி புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகள் இருப்பதால் புதிதாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருப்பதால் புதிதாக தனியார் மருத்துவக் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதியளிக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

18:23 (IST)30 Nov 2020
உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவ கல்லூரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது - ஐகோர்ட்

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவ கல்லூரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது. பொறியியல் கல்லூரிகளை போல மருத்துவக் கல்லூரிகளும் அதிகரித்துவிடும். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதியளிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் தமிழக அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

17:51 (IST)30 Nov 2020
சமஸ்கிருத திணிப்பு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் புகார்

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், தமிழகத்தில் 1,000 பேருக்குகூட சமஸ்கிருத மொழி தெரியாது. இந்தி, சமஸ்கிருத மொழிகளை மத்திய அரசு தீவிரமாக திணித்து வருகிறது. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது என்று புகார் தெரிவித்துள்ளார்.

17:29 (IST)30 Nov 2020
சமஸ்கிருத திணிப்பு - சரத்குமார் கண்டனம்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பொதிகை தொலைக்காட்சி வாயிலாக சமஸ்கிருத மொழியை திணிக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

17:21 (IST)30 Nov 2020
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு ஐகோர்ட் அதிருப்தி

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்த விவகாரத்தில், நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7 ம்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

17:12 (IST)30 Nov 2020
சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்த முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இது குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், அதில் முகாந்திரம் உள்ளதா என பார்க்காமல் விசாரணைக்கு அவசரம் காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

16:17 (IST)30 Nov 2020
ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தொடர வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

சமீபத்தில் தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு வழங்கி வந்த போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றது. அவருக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், கிரானைட் முறைகேடு விசாரணையில் பங்கேற்ற தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15:47 (IST)30 Nov 2020
கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? - திருமாவளவன்

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு: கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?  பிறமொழி பேசுவோர் மீது இந்தியைப் போலவே சமஸ்கிருதத்தைத் திணிப்பது ஏன்?
அரசாணையை  மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.   

15:43 (IST)30 Nov 2020
1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:

கடலூர், பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

15:22 (IST)30 Nov 2020
புயல் பாதிப்புகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்

நிவர் புயல் தாக்கத்தினால் சென்னையில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். முதலாவதாக பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளையும், சீரமைப்பு பணிகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார்

15:17 (IST)30 Nov 2020
பிறமொழி பேசும் மக்களிடமும் பாஜக அரசு திணிக்கிறது - ஸ்டாலின் கண்டனம்

"இந்தியாவில் 15000 பேரால் மட்டுமே பேசப்படும் ‘உலக வழக்கழிந்த' சமஸ்கிருத மொழியில் - 8 கோடிக்கும் அதிகமான தமிழ் பேசும் மக்களிடமும் - பிறமொழி பேசும் மக்களிடமும் பாஜக அரசு திணிக்கிறது; இது தேசிய இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் பண்பாட்டுப் படையெடுப்பு என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தார். 

 

15:02 (IST)30 Nov 2020
புரெவி புயல்
14:42 (IST)30 Nov 2020
மணல் விலை குறித்து நீதிபதிகள் அதிருப்தி

தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தியடைந்துள்ளனர். மக்களுக்கு குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? எடுக்கப்பட்டிருப்பின் அது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

14:29 (IST)30 Nov 2020
பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருவது, கொரோனா தடுப்பூசி குறித்த விஷயங்களை விவாதிக்க, டிசம்பர் 4-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. 

14:01 (IST)30 Nov 2020
முதல்வர் ஆய்வு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். 

13:38 (IST)30 Nov 2020
நாளை உருவாகும் புரெவி புயல்

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை (புரெவி) புயலாக வலுப்பெறும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

12:51 (IST)30 Nov 2020
ரஜினி பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஆலோசனைக் கூட்டத்தை முடித்து, வீடு திரும்பிய ரஜினி பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடந்தது. அவங்களோட கருத்தை என் கிட்ட சொன்னாங்க, என்னுடைய பார்வையை நான் பகிர்ந்துக் கிட்டேன். நீங்க என்ன முடிவெடுத்தாலும் உங்கக் கூட இருப்போம்ன்னு சொன்னாங்க. நா எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் என் முடிவை தெரிவிக்கிறேன்’ என்றார்.

12:17 (IST)30 Nov 2020
ரஜினியின் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரஜினியிடமிருந்து விரைவில் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11:45 (IST)30 Nov 2020
ஆதாரங்கள் என்னிடம் உள்ளன - ரஜினிகாந்த்

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விரைவில் முடிவெடுப்பதாகக் கூறிய ரஜினி, தன் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார்.

11:42 (IST)30 Nov 2020
என்னோடு இருந்தால் சம்பாதிக்க முடியாது - ரஜினிகாந்த்

மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றுகூறிய ரஜினிகாந்த், நிர்வாகிகளுக்கு அறிவுரையும் வழங்கினார். மேலும், தன்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது என்றும் மக்களுக்காக உழைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

11:38 (IST)30 Nov 2020
2021 ஜனவரியில் கட்சி தொடங்குவாரா ரஜினி?

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து வரும் ரஜினி, கட்சி தொடங்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். நிச்சயம் தொடங்கவேண்டும் என்று பதிலளித்த நிர்வாகிகள், கட்சி தொடங்கினால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து வருகிற 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

10:34 (IST)30 Nov 2020
உடனடியாகக் கட்சித் தொடங்கவேண்டும் - ரஜினி மன்ற நிர்வாகிகள்

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வரும் ரஜினிகாந்த், கட்சி தொடங்கலாமா என்கிற கேள்வியை முன்வைத்திருக்கிறார். அதற்கு உடனடியாக தொடங்க வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

09:41 (IST)30 Nov 2020
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு பயிற்சி மட்டும் நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சமுதாய, அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிச.1 முதல் 31 வரை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கூட்டங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும். இந்த கூட்டங்கள் நடைபெறுவதற்கு நிச்சயம் காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், டிச.14-ம் தேதி முதல் மெரினா கடற்கரையைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதித்துள்ளது. 

09:26 (IST)30 Nov 2020
அண்ணாமலையார் கோயிலில் இளையராஜா

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார். மேலும், அங்குள்ள ரமணர் ஆசிரமத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளிலும் கலந்து கொண்டார்.

09:22 (IST)30 Nov 2020
சென்னையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது சிறுமி

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி கொடூரமான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்கப்பட்டபோது, மதன்குமார், ஷகீதாபானு, செல்வி மற்றும் சந்தியா உள்ளிட்ட 14 பேரைக் கைது செய்துள்ளனர் போலீசார். மேலும், சிறுமியை வன்கொடுமை செய்ததற்காக பாஜக பிரமுகரான ராஜேந்திரனும், எண்ணூர் காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையில் நாளொன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்றும், சில மாதங்களில் நானூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்தப் பட்டியலில், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள், மருத்துவர்கள் என சமூகத்தில் மதிக்கத்தக்கப் பொறுப்புகளில் உள்ளவர்களும் உண்டு.

08:56 (IST)30 Nov 2020
டேவிட் வார்னர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் டி-20 கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர், காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்கு பதிலாக டார்சி ஷார்ட் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

08:49 (IST)30 Nov 2020
தமிழக நிர்வாகிகளுடன் காணொளி மூலம் ராகுல் ஆலோசனை

இன்று பிற்பகல் 4 மணிக்குத் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், 2021-ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல், தொகுதிப் பங்கீடு போன்றவை குறித்து காங்கிரஸ் கட்சியினரின் கருத்துக்களைக் கேட்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Today's Tamil News : முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடாக வணங்கப்படும் பழனி திருஆவினன்குடி கோயிலில் மூலவரை பாஜக தலைவர் எல்.முருகன் தரிசனம் செய்வது போன்ற புகைப்படம் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியானது. பழனி முருகன் கோயிலில் ஆகம விதிகளை மூலவர் தரிசனத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீது கோயில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Web Title:Tamil news today live rajinikanth eps ops stalin admk dmk bjp nivar corona cricket match weather updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X