/indian-express-tamil/media/media_files/H4y0hEA2lmROWvGHC2TH.jpg)
ரத்தன் டாடா மரணம்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருது பத்ம விபூஷண் விருது பெற்றவருமான ரத்தன் டாடா மும்பையில் நேற்று நள்ளிரவு (புதன்கிழமை) காலமானார். வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 86.
தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாராஷ்டிரா அரசு இன்று (அக்.10) ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Ratan Naval Tata Passes Away Updates
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 10, 2024 22:38 IST
முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம்
தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் முழு அரசு மரியாதையுடன் மும்பையில் தகனம் செய்யப்பட்டது. மும்பை வோர்லி மயானத்தில் டாடா உடலுக்கு நடைபெற்ற இறுதிச் சடங்கில் உறவினர்கள் பங்கேற்றனர்.
-
Oct 10, 2024 21:15 IST
முரசொலி செல்வம் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நாளை மாலை தகனம்
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நாளை மாலை தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நாளை மாலை 4.30 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
-
Oct 10, 2024 21:12 IST
முரசொலி செல்வம் உடலுக்கு பா.ஜ.க பிரமுகர்கள் சரத்குமார், ராதிகா நேரில் அஞ்சலி
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் உடல்நலக் குறைவால் காலமானார். கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு பா.ஜ.க பிரமுகர்கள் சரத்குமார், ராதிகா நேரில் அஞ்சலி செலுத்தினர்.
-
Oct 10, 2024 21:09 IST
முரசொலி செல்வம் உடலுக்கு பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி
முரசொலி செல்வம் உடலுக்கு பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
-
Oct 10, 2024 20:07 IST
முரசொலி செல்வம் மறைவு: த.வெ.க தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் அஞ்சலி
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலுக்கு நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
Oct 10, 2024 20:00 IST
முரசொலி செல்வம் மறைவு; உடலைப் பார்த்துக் கதறி அழுத ஸ்டாலின்
கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த முரசொலி செல்வம் உடலைக் கண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கதறி அழுதார். முரசொலி செல்வத்தின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
Oct 10, 2024 19:11 IST
ஹிஸ்ப்-உத் தஹிரிர் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு - மத்திய அரசு
ஹிஸ்ப்-உத் தஹிரிர் அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
-
Oct 10, 2024 19:07 IST
முரசொலி செல்வம் உடல் சென்னை வருகை
மறைந்த முரசொலி செல்வம் உடல் பெங்களூருவில் இருந்து சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவருடைய உடலுக்கு தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்.
-
Oct 10, 2024 17:50 IST
முரசொலி செல்வம் மறைவு; ஓபிஎஸ் நேரில் சென்று ஆறுதல்
முரசொலி செல்வம் மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்
-
Oct 10, 2024 17:12 IST
இலக்கியத்திற்கான நோபல் பரிசு; தென்கொரிய பெண் எழுத்தாளரான ஹான் காங்-கிற்கு அறிவிப்பு
தென்கொரிய பெண் எழுத்தாளரான ஹான் காங்-கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கை குறித்த கவிதை படைப்புக்காக ஹான் காங்-கிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹான் காங்-ன் தந்தை ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார்.
-
Oct 10, 2024 16:48 IST
ஊடக நேர்காணலில் ஜாலியாக பீர் குடித்த கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் சக போட்டியாளரான ட்ரம்ப்புக்கு தேர்தல் களத்தில் "டஃப்" கொடுத்து வரும் கமலா ஹாரிஸ், ஊடக நேர்காணல் ஒன்றில் மகிழ்ச்சியாக தொகுப்பாளருடன் உரையாடிக் கொண்டே தனக்கு வழங்கப்பட்ட பீரை லாவகமாக உடைத்துக் குடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது.
-
Oct 10, 2024 16:31 IST
ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தனது படைப்புகள் முழுவதும் தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக பதிப்புரிமை வழங்கி விட்டதால் ஜி.எஸ்.டி வரி விதிக்க முடியாது என ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தொடர்ந்த நிலையில், வரி விதிப்பது தொடர்பான நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தான் முறையிட முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஜி.எஸ்.டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசுக்கு ஹாரிஷ் ஜெயராஜ் பதிலளிக்கலாம், அதில் ஆட்சேபணைகளை முன்வைக்கலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து ஹாரிஷ் ஜெயராஜின் ஆட்சேபணைகளை பரிசீலித்து 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என ஜி.எஸ்.டி அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்
-
Oct 10, 2024 16:07 IST
ஒய்வை அறிவித்தார் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால்
டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக ரஃபேல் நடால் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். 38 வயதான நடால் நவம்பர் மாதம் மலகாவில் நடைபெறும் டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினுக்காக தனது இறுதிப் போட்டியில் விளையாடுவார்.
-
Oct 10, 2024 15:47 IST
ரத்தன் டாடாவுக்கு, அமித்ஷா அஞ்சலி
உள்துறை அமைச்சர் அமித்ஷா மும்பையில் ரத்தன் டாடா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
-
Oct 10, 2024 15:22 IST
இந்தியாவின் உண்மையான மகன் தற்போது இல்லை - ரஜினிகாந்த் இரங்கல்
உலக வரைபடத்தில் இந்தியாவை தனது தொலைநோக்குப் பார்வையால் இடம்பெறச்செய்தவர் ரத்தன் டாடா. லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர், அனைவராலும் நேசிக்கப்பட்டவர். இந்தியாவின் உண்மையான மகன் தற்போது இல்லை என தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்
-
Oct 10, 2024 14:52 IST
16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
திருப்பூர், கோவை, விழுப்புரம், கடலூர், மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, பெரம்பலூர், ஈரோடு ஆகிய 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Oct 10, 2024 14:22 IST
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை வெளியீடு
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும். குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும். குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் - ஏப்ரல் 25ஆம் தேதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Oct 10, 2024 13:56 IST
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்; வி.ஏ.ஓ கைது
ஈரோடு மாவட்டத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.45,000 லஞ்சமாக பெற்றதாக ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் ருத்ர செல்வனை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்
-
Oct 10, 2024 13:31 IST
சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கம்
ஆயுத பூஜை விடுமுறையை அடுத்து சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது
-
Oct 10, 2024 13:12 IST
ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முன்மொழிந்துள்ளார்.
-
Oct 10, 2024 12:50 IST
ஆளுநருடன் மோதல் போக்கு கூடாது - கோவி.செழியன்
ஆளுநருடன் மோதல் போக்கு கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன் முதல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில், ஆளுநர் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளை பொன்முடி புறக்கணித்து வந்தார்.
உயர்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆளுநர் விமர்சித்து வந்த நிலையில் பதிலுக்கு ஆளுநரை அமைச்சர் பொன்முடி விமர்சித்து வந்தார்
-
Oct 10, 2024 12:48 IST
முரசொலி செல்வம் மரணம்- ஸ்டாலின் இரங்கல்
"நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்" - முரசொலி செல்வம் பற்றி முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
-
Oct 10, 2024 12:24 IST
முரசொலி செல்வம் காலமானார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவர் முரசொலி செல்வம் காலமானார்
பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்
முரசொலி மாறனின் இளைய சகோதரரான முரசொலி செல்வம், முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்
முரசொலி செல்வத்தின் உடல், பெங்களூருவில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வரப்படுகிறது
-
Oct 10, 2024 12:21 IST
ஆர்பிஐ கவர்னர் மரியாதை
ரத்தன் டாடா உடலுக்கு ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இறுதி மரியாதை செலுத்தினார்.
-
Oct 10, 2024 12:09 IST
நீட் ரத்து செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - இ.பி.எஸ்
அதிமுக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய, திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி பொறுப்பேற்று 41 மாதத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரசும் தான்.
நீட் தேர்வை ரத்து செய்வதாக, திமுக அரசு போலி நாடகத்தை நடத்துகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது, நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எனக் கேள்வி எழுப்பினார்.
-
Oct 10, 2024 11:39 IST
பிர்லா குழும தலைவர், சரத் பவார் அஞ்சலி
பிர்லா குழும தலைவர், சரத் பவார், சுப்ரியா சுலே உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்
ரத்தன் டாடாவின் உடல் என்.சி.பி.ஏ வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. டாடா ஊழியர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதோடு ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, என்சிபி தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
-
Oct 10, 2024 11:29 IST
தேசிய கொடி போர்த்தி மரியாதை
பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மும்பையில் வைக்கப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு, தேசிய கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டுள்ளது.
-
Oct 10, 2024 11:25 IST
ரத்தன் டாடா உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைப்பு
என்.சி.பி.ஏ வளாகத்தில் ரத்தன் டாடா உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைப்பு
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் என்.சி.பி.ஏ வளாகத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி வரை அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.
-
Oct 10, 2024 09:27 IST
இறுதிச் சடங்கு நிகழ்வில் அமித் ஷா பங்கேற்பு
ரத்தன் டாடா மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று மாலை நடைபெறும் இறுதிச் சடங்கு நிகழ்வில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.
-
Oct 10, 2024 08:34 IST
டாடா உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தெற்கு மும்பையில் உள்ள நேஷனல் சென்டர் ஃபார் பெர்பார்மிங் ஆர்ட்ஸில் (என்சிபிஏ) டாடாவின் உடல் வைக்கப்படும், மேலும் அவரது இறுதிச் சடங்கு மும்பையின் வோர்லி பகுதியில் இன்று மாலையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 10, 2024 08:32 IST
மகா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு
தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அக்டோபர் 10-ம் தேதி அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.