ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஓபிஎஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
சித்ரா ராமகிருஷ்ணா கைது
தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவை, ஏற்கனவே சிபிஐ கைது செய்திருந்த நிலையில், அமலாக்கத்துறையும் கைது செய்தது. அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கோத்தபய ராஜபக்சே ராஜினாமா
கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். இந்நிலையில், இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு மின்னஞ்சல் மூலம் கோத்தபய அனுப்பினார்.
இதனிடையே, கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை, தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் செல்ல அனுமதிக்கப்பட்டார், சிங்கப்பூர் பொதுவாக புகலிட கோரிக்கைகளை ஏற்பதில்லை என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணி நீக்கம்
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உட்பட வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், ஓம் சக்தி சேகர் என ஓபிஎஸ் அணியினர் 18 பேர் நீக்கப்பட்டனர். கட்சியினர் யாரும் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என இ.பி.எஸ் அறிவித்துள்ளார்.
நீக்க நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம்.. ஓ.பி.எஸ்
அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி. ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம். யாரையும் நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை இல்லை. இது சட்டப்படி செல்லாது என ஓ.பி.எஸ். கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன் உள்பட 22 பேர் நீக்கம் செய்வதாக, ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மேட்டூர் அணை தொடர்ந்து நிரம்பி வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது; காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதி குறித்து சர்ச்சையாக கேள்வி இடம்பெற்ற விவகாரத்தில், மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விளக்கம் கேட்டு, பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், வரலாற்றுத்துறை தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘Schedule Caste’ என்பதற்கு ஆதி திராவிடர் என்ற மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தாமல் 'தாழ்த்தப்பட்டோர்' என்றோ, 'அரிஜன்' என்றோ குறிப்பிடக் கூடாது என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதையும் மீறி இப்படி ஒரு கேள்வி சேலம் பெரியார் பல்கலை வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது; இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து இதை வளர்க்க நினைக்கும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி அறிவுறுத்தியுள்ளது.
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாக்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், 187 நாடுகளை சேர்ந்த 2,000 த்துக்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
#chesschennai2022 pic.twitter.com/tiZeCN0a5v
— Rajinikanth (@rajinikanth) July 15, 2022
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஊழல் முறைகேடு செய்து நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும்போதும் குறிப்பிட்ட அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி முடிவெடுக்கலாம் என்று அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி, மேலும், 21 ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்துள்ளார். பொன்னையனுடன் பேசியதாக சர்ச்சைக்குறிய ஆடியோ வெளியிட்ட நாஞ்சில் கோலப்பன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார் என இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நீலகிரியில் கனமழை பெய்து வரும் நிலையில், அமைச்சர்கள் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், செந்தில் பாலாஜி, ராமசந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜூலை 28ம் தேதி வரை மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே இருவரும் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளியேற இடைக்கால தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக அலுவலக சீல் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை, தாம்பரம் கேம்ப் ரோடு பகுதியில் ’குவாலிட்டி’ என்ற உணவகத்தில், 10 கிலோ கெட்டுபோன இறைச்சி, 5 கிலோ அரிசி மற்றும் நூடுல்ஸ் உள்ளிட்ட கெட்டுபோன உணவுகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், உணவகத்திற்கு ரூ. 2,000 அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதிமுக அலுவலக சீல் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை, ராயப்பேட்டையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வீடியோ, புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்களையும் காவல்துறை தாக்கல் செய்துள்ளது.
“அதிமுக தலைமை அலுவலகம் இரு தரப்பில் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை. சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ, சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதும் இரு தரப்பினருக்கு இடையில் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்சினை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம். சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்சினைகள் ஏற்படலாம்” என்று தமிழக காவல்துறை தரப்பின் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் ஜாதி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சர்ச்சைக்குரிய கேள்வியால் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வினாக்கள் இடம்பெறாதவாறு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெற்ற வினாத்தாள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக அலுவலக சீல் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை, ராயப்பேட்டையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வீடியோ, புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்களையும் காவல்துறை தாக்கல் செய்துள்ளது.
ஆடி மாதத்தை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா திட்டம் செயல்படுத்தபட உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.ttdconline.con என்ற சுற்றுலாத்துறை இணையதளத்தை அணுகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து மீள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற்று, மக்கள் பணியை தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கில், முறையாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீடு செய்த பின் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய சேர்மன் பதில் அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டம் வகுக்க, டாஸ்மாக் நிறுவனத்திற்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
மதுபாட்டில்களுக்கு பணம் வசூலித்துவிட்டு, பின்னர் காலி பாட்டில்களை திரும்பப்பெற பரிந்துரைத்த வழக்கில், தமிழ்நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதால், திட்டத்தை வகுக்க 3 மாதம் அவகாசம் தேவை என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சுதா மருத்துவமனையின் ஸ்கேன் செண்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
4 மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்களை உடனடியாக மூட மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், 15 நாட்களில் நோயாளிகளை வெளியேற்றிவிட்டு மருத்துவமனைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தொலைபேசி வாயிலாக உரையாடினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் பெற சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை மகாபலிபுரத்தில் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தொலைபேசியில் நலம் விசாரித்தபோது முதல்வர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைகழக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றதை அரசயலாக்க வேண்டாம் என்றும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கவே அவர் காமராஜர் பல்கலைகழக விழாவில் பங்கேற்றார் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்
அதிமுகவில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன், விஜயபாஸ்கர் உள்பட இபிஎஸ் ஆதரவாளர்கள் 44 பேர் 44 பேர் நீக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கட்சிக்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மறைந்த இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சந்தான பாரதி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்
பெரியார் பல்கலை. செமஸ்டர் தேர்வில் சாதி குறித்த சர்ச்சை கேள்வி இடம்பெற்ற விவகாரம் குறித்து உயர்கல்வித்துறையின் உயர் அலுவலர் நிலையில் குழு அமைத்து விசாரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை அறிக்கை. மேலும் சிறிது நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது – மருத்துவர்கள் அறிக்கை
இபிஎஸ் உள்ளிட்ட 22 பேரை அதிமுகவில் இருந்து நீக்கிய ஆவணங்களை ஃபாக்ஸ் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார் ஓபிஎஸ். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை ஈபிஎஸ் நீக்கிய நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேரை ஓபிஎஸ் நீக்கினார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது ஊர்காவல் துறை நீதிமன்றம் . மீனவர்களின் 2 படகுகளையும் அரசுடமையாக்க உத்தரவு
திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர். – பிரதமர் மோடி ட்வீட்
நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது. 2019 ஜனவரிக்கு பின் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம். வணிக வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு நுழைவு வரி செலுத்தவில்லை என அபராதம் விதித்ததை எதிர்த்த நடிகர் விஜய் வழக்கு முடித்து வைப்பு நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் ஹாரீஷ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளும் முடித்துவைப்பு..
முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். கொரோனா பாதிப்பால் முதல்வர் மருத்துவமனையில் உள்ள நிலையில் நலம் விசாரிப்பு.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ.37,088 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,636க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார், அது வியாழக்கிழமை தாமதமாக சிங்கப்பூரில் இருந்து அனுப்பப்பட்ட பின்னர் அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்ததாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 20,038 பேர் பாதிக்கப்பட்டனர். 47 பேர் உயிரிழந்தனர். 16,994 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். மேலும், 1.39 லட்சம் பேர் கொரோனாவுக்கு 1 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திரைப்பட இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 18 வயதுக்கு மேற்பட்டோர் இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.
கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்!
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் கனமழை காரணமாக தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் நீர்திறப்பு 15000 கனஅடியில் இருந்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம், நிலச்சரிவு ஏற்பட்டால் 0423-2223828, 9789800100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.