Tamil News Highlights : கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் தேவைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வந்த நிலையில் அம்மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
மழைக்கால பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட சென்னை மாநகராட்சி
மழையின் காரணமாக அடித்துவரப்பட்ட குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடும், அதனால் தொற்றுநோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், தொற்று நோய் பரவாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில், குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்கவைத்து பின்னர் ஆறவைத்து பருகுவது, வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அல்லது தரைமட்ட குடிநீர் தொட்டியில் குளோரின் கலந்து பயன்படுத்துவது, கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி நன்கு தேய்த்து கழுவுவது உள்ளிட்டவை அடங்கும்.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் லிட்டர் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்
தமிழகத்தில் தற்போது 1.25 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது என்றும், வீடு தேடி தடுப்பூசி திட்டத்தில் தினமும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 802 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்
பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கிறது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.
அறிவியல் திறனறிவு தேர்வை இந்த ஆண்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளிலும் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் 'வலிமை' சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்கிறார்.
கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில், இலங்கை கடற்படையால் மீனவர் ராஜ்கிரண் சுட்டுக்கொல்லப்பட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைகிளை, கோட்டைப்பட்டினம் தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், துறை சார்ந்த விதி மீறல்கள் இருந்தால் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு தடை கோரி கர்நாடகா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகா மனு தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை வெள்ளப்பெருக்கில் உடைந்தது. இதையடுத்து, தடுப்பணையை இரண்டாவது நாளாக வெடி வைத்து தகர்க்கும் பணி காரணமாக, பொதுமக்கள் யாரும் வராதவாறு தடுப்புகள் அமைத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கனமழை காரணமாக தடுப்பணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
விராலிமலையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மாதவன் என்ற இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பத்திரிகை துறையினருக்கான பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
அண்ணாத்த’ படம் உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என சிவா சொன்னார். அதே மாதரி சொல்லி அடித்திருக்கிறார் இயக்குநர் சிவா. அவர் அண்ணாத்த கதை சொல்லும்போதே என் கண்கள் கலங்கின என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்போருக்கு சமச்சீரான இழப்பீடு வழங்க வேண்டும். இதுதொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை இடமாற்றும் செய்யும் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். திருப்பதிசாரம், தேரேகால் பகுதியில் கால்வாய் கரை உடைப்பில் ஆய்வு மேற்கொண்டார்.
பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும், தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என ஜெய்பீம் படத்தை பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில, இதனை தடுக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை நாளை மாலைக்குள் அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே துவங்கிய கல்லூரிகளின் செயல்பாடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் கூறியுள்ளது.
மீனவர்கள் 17,18,19ஆம் தேதி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவழை இயல்பை விட 54 சதவீதம் அதிகம் என்றும், திருப்பூர் தேனி, கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது என்றும், அடுத்த 5 நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக அரசு திட்டமிட்டு செயல்படாத காரணத்தால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்டா மாவட்டங்களில் உள்ள வெள்ள பாதிப்புகளை நாளை பார்வையிட உள்ளோம் என்று கூறியுள்ளார்.
ஜெய் பீம்' பட நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் ரூ5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும, 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில மழை பாதிப்பு காரணமாக அம்மா உணவகத்தில் இலவசமான உணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், இன்று முதல் அம்மா உணவகத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ192 குறைந்து ரூ37,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு கிராம் தங்கம் ரூ4,631-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த கோரி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து செமஸ்டர் தேர்வை 2 வாரத்திற்கு தள்ளி வைத்து கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 20 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையதளத்தில் பதிவு செய்வோர், ஆதார் எண் மூலம் சேவையை பெறலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் மாநிலம் முழுவதும் 50,000 முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சகோதர, சகோதரிகள் கவனமாக இருங்கள் என்றும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுங்கள் என்றும் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். மேலும், காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,47,536 ஆக உயர்வு. தற்போது 1,34,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 11,926 பேர் மீண்டனர். இதுவரை 3,38,49,785 பேர் நலம்பெற்றுள்ளனர்.
கனமழை தொடங்கியது முதல் நேற்று வரை சுமார் 8 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்கள் மூலம் விலையின்றி உணவு வழங்கப்பட்டது. இன்று முதல் விலையில்லா உணவு நிறுத்தப்படுகிறது.
கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது என்றுகூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியரும், பள்ளி முதல்வரும் கைதாகியுள்ள நிலையில், மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற இருவரும் கைது செய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான 7 அமைச்சர்கள் கொண்ட குழு, காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை ஆய்வு செய்த நிலையில், நாளை முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த, 'ஜெய்பீம்' திரைப்படத்தில் வரும் காட்சி ஒன்றில் காலண்டரில் உள்ள புகைப்படம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த புகைப்படம் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்விட்டரில், 'WeStandWithSuriya' என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.