Tamil News Today : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி :
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு :
கரிசலைத் தன் எழுத்தின் வழியே ஆவணப்படுத்திய உன்னதக் கதை சொல்லி கி. ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக, உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 99. கி.ரா. கரிசல் எழுத்தின் தந்தை என போற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சேர்க்கப்பட்ட ‘திருமணம்’ :
தமிழகத்தில் நேற்று முதல் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்க இ-பதிவு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்தி பயணிப்பதாக தமிழக அரசு நேற்று மாலை கூறியது. மேலும், இ-பதிவில் இருந்து திருமணம் எனும் பிரிவையும் நீக்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், மீண்டும் திருமணம் என்ற பிரிவை தமிழக அரசு சேர்த்துள்ளது. உரிய ஆவணங்களுடன் திருமணத்திற்காக பயணிக்க பொது மக்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் 10 மணிக்கு மேல் இ-பதிவு கட்டாயம் :
சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல, இ-பதிவு கட்டாயம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இ.பதிவு செய்யாமல் வெளியே சுற்றுவோர் மீது, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
ரெம்டெசிவிர் பெற ஆன்லைன் பதிவு :
தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருத்தினை பெற மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் இணைய ucc.uhcitp.in/form/drugs எனும் இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் வேண்டுவோர் அந்த இணைய தளத்தில் விண்ணப்பித்து மருந்தினை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:52 (IST) 18 May 2021நேர்மையாக செயல்பட தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
மருத்துவ நெருக்கடி, மனநல பாதிப்பு, நிதி நெருக்கடி, ஆகியவை நாட்டு மக்களை ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது; கொரோனா சிகிச்சை, நிவாரணப் பணி அலுவலர்கள் மற்றும் நிறுவனங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
- 20:39 (IST) 18 May 2021தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா; 364 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை மொத்தம் 16,64,350 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 21,362 பேர் குணமடைந்து டிஸ்சார் ஆனார்கள். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 14,03,052 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று 364 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 18,369 பேர் இறந்துள்ளனர்.
- 19:38 (IST) 18 May 2021அதிமுக ஆட்சியின் ஊழல் குறித்து ஆராய வேண்டிய நேரம் இதுவல்ல - மா.சுப்பிரமணியன்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அதிமுக ஆட்சியின் ஊழல் குறித்து ஆராய வேண்டிய நேரம் இதுவல்ல. கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதே அரசின் முக்கிய நோக்கம்.” என்று தெரிவித்தார்.
- 18:43 (IST) 18 May 2021தமிழகத்தில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி - மா.சுப்ரமணியன்
தமிழகத்தில் ஒருபுறம் கொரோனா தொற்று பாதிப்பு திவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டால் கொரோனா முழுமையாக ஒழிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
- 18:31 (IST) 18 May 2021நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 1,017 மருத்துவர்கள் பலி
நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 1,017 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் இதில், தமிழகத்தில் மட்டும் 11 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பீகாரில் 78 மருத்துவர்களும், உத்தரப் பிரதேசத்தில் 37 மருத்துவர்களும், டெல்லியில் 28 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். இதேபோல,ஆந்திரத்தில் 22 மருத்துவர்களும், தெலங்கானாவில் 19 மருத்துவர்களும், மகாராஷ்டிரத்தில் 14 மருத்துவர்களும் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர்.
- 18:23 (IST) 18 May 2021வருமானம் ஈட்டுபவர் இறந்துவிட்டால் மாதந்தோறும் நிதியுதவி - டெல்லி அரசு
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனாவால் உயிரிழந்து விட்டால், அவர்களின் குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
- 18:14 (IST) 18 May 2021ஒரு மாத ஊதியத்தை கொரோனா நிதியாக வழங்கிய அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகயைில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக, பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார்
- 17:20 (IST) 18 May 2021கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் ரூ.2000 அபராதம்
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 16:56 (IST) 18 May 2021கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50,000 - டெல்லி அரசு
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ. 50,000 வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனாவால் உயிரிழந்து விட்டால், அவர்களின் குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.
- 16:42 (IST) 18 May 2021கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுகள் : உலக சுகாதார நிறுவனம் வேதனை
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது. நிறவெறி மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளினால் தடுப்பூசி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.
- 16:10 (IST) 18 May 2021நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் அன்புமணி
கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் அன்புமணி ராமதாஸ்
- 15:49 (IST) 18 May 2021இ-பதிவு செய்து தான் வெளியே வர வேண்டும், மீறினால் எஃப்.ஐ.ஆர் - கூடுதல் காவல் ஆணையர் கண்ணன்
பொது மக்கள் இ-பதிவு செய்து தான் வெளியே வர வேண்டும், மீறினால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
- 15:32 (IST) 18 May 2021நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனாவால் உயிரிழந்த நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- 15:14 (IST) 18 May 2021குழந்தைகளுக்கு காப்பகத்திலேயே உரிய சிகிச்சை அளிக்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு காப்பகத்திலேயே உரிய சிகிச்சை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
- 14:56 (IST) 18 May 2021தமிழக அரசின் இ - பதிவு முறையில் திருமணம் மீண்டும் நீக்கம்
தமிழக அரசின் இ - பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கிய பின், மீண்டும் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நீக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.
- 14:27 (IST) 18 May 2021கிராவுக்கு சிலை
கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கி.ராவுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு.
- 14:15 (IST) 18 May 2021கொரோனா தொற்றால் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- 14:01 (IST) 18 May 2021வானிலை அறிக்கை
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 13:50 (IST) 18 May 2021ரெம்டெசிவிர், உயிர் காக்கும் மருந்துகளுக்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 69 கோடி சேர்ந்துள்ளது என்றும், ரெம்டெசிவிர், உயிர்காக்கும் மருந்துகளுக்காக ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 13:38 (IST) 18 May 2021சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு கொரோனா
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 13:16 (IST) 18 May 2021கிராமப்புற பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் - மோடி
கொரோனா 2வது அலையில் கிராமப்புற பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கான கூட்டத்தில் பிரதமர் பேச்சு. கடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றுகிறீர்கள் என்று பாராட்டியுள்ளார் மோடி
- 13:06 (IST) 18 May 2021தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி
கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜனை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 13:04 (IST) 18 May 2021ராமதாஸ் இரங்கல்
நூற்றாண்டு கொண்டாடுவார் என எதிர்நோக்கியிருந்த நேரத்தில் கி.ரா மறைந்திருப்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது கி.ரா மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்
- 13:03 (IST) 18 May 2021புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 2000 வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். இதன் மூலம் 2.14 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்
- 12:33 (IST) 18 May 2021"என் ஞானத் தந்தையை இழந்துவிட்டேன்!" - நடிகர் சிவக்குமார்
"நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானத் தந்தை 99 வயது வாழ்ந்த கி.ரா.-வை இழந்துவிட்டேன். கி.ரா. அவர்களும், கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் - தந்தையர்" என்று கி.ரா மறைவிற்கு நடிகர் சிவகுமார் தெரிவித்திருக்கிறார்.
- 12:19 (IST) 18 May 2021எழுத்தாளர் கி.ரா.விற்கு தமிழிசை சௌந்தரராஜன் நேரில் அஞ்சலி
எழுத்தாளர் கி.ரா. மறைவையொட்டி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
- 11:52 (IST) 18 May 2021சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் பல இடங்களில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, இ பதிவு இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
- 11:45 (IST) 18 May 2021டவ்-தே புயல் தாக்கம் எதிரொலி
குஜராத்தின் மஹூவா பகுதியில் டவ்தே புயல் நள்ளிரவில் கரையை கடந்தது. இதுவரை புயலுக்கு 6 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் புயலின் தாக்கத்தால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு மின்தடை ஏற்பட அனுமதிக்கப்படவில்லை எனவும், மாற்று விநியோக ஏற்பாடுகள் திறமையாக நடப்பதாகவும், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
- 09:22 (IST) 18 May 2021முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், முதற்கட்டமாக 9 மாநிலங்களைச் சேர்ந்த 46 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.