Tamil News Today : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்
பாலியல் தொல்லை; ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம் :
பாலியல் சர்ச்சையில் சிக்கிய, சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசாரணையில் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். விசாரணையில், அவர் கடந்த 5 ஆண்டுகளாக 11,12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருப்பதால், மாணவிகளின் வாட்ஸ் ஆப் மூலம் மெசேஜ் அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்வத்தில் பள்ளியில் பலருக்கும் தொடர்புள்ளதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிஎஸ்பிபி பள்ளி அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 1024 மெட்ரிக் டன் ஆக்சிஜன் :
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், மே 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 18 ஆக்சிஜன் சிறப்பு ரயில்களில் 1024.18 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகளுக்கு அனுமதி :
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ரேஷன் கடைகள் இயங்குவது தொடர்பாக முதல்வருடன் விவாதித்தப்பின் முடிவு செய்யப்படும் என உணவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
குழந்தைகளில் தடுப்பூசி பரிசோதனை :
2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை நடத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர் குழு அனுமதி வாழங்கி உள்ளது. இதனிடையே, கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் திட்டத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,285 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,11,496 ஆக உயர்ந்துள்ளது. இதில் தலைநகர் சென்னையில் 4,041 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில், 468 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலவி எண்ணிக்கை 21340 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில், 28,745 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,06,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நிதியாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் தவனையான 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரும் ஜூன் 3ந் தேதி் 2வது தவணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் சென்னையில் ஜூன் 3ந் தேதியும் மற்ற மாவட்டங்ககளில் ஜூன் 5ந் தேதியும் வழங்கப்படுகிறது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் “ஹெச்.எல்.எல். நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும்”என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதில் செங்கல்பட்டு அருகே உள்ள ஹெச்.எல்.எல். நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்றும் இதற்காக உரிய நிதியை ஒதுக்கி விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணை நடத்துகிறது. ஆன்லைன் வகுப்பில் இதுபோன்று நடைபெறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள தேசிய குழந்தைகள் ஆணையம் அறிக்கை அளிக்க தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெஃப்சி சங்கத்தின் முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் கொரோனா தொற்றால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் காலமானார்.
மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துகிறது சென்னை மாநகராட்சி.
திமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று மேலும் 1,568 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 156 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் கொரோனாவுக்கு தற்போது 21,739 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா? ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, குழுவை அமைத்தது தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம். மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவில் புதிதாக இந்திய துணைத் தூதரகம் திறக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்
ஆசிரியர் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் பிஎஸ்பிபி பள்ளியின் முதல்வர், தாளாளர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் அவர்களிடம் தி நகர் துணை ஆணையர் ஹரி விசாரனை செய்து வருகிறார்.
கொரோனா தடுப்பு பணிக்கு செல்லவில்லை என்றால் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை தொடர்ந்து மற்ற மாவட்ட ஆட்சியர்கள் ஆசிரியர்களுக்கு நிர்பந்தம் என புகார் எழுந்துள்ளது.
தளர்வுகளற்ற ஊரடங்கில் அத்தியாவாசியப் பொருட்கள் விநியோகத்தை தடையின்றி உறுதிப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மீதான 'toolKit' விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் டெல்லி காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனிஷ் மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தியதாகவும், இது ஆரம்பகட்ட விசாரணை தான் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை தனியார் பள்ளியில் பாலியல் புகார் கூறப்பட்ட ஆசிரியரை கல்வி நிறுவனம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், பாலியல் புகார் குறித்து கல்வி நிறுவனம் சார்பில் குழு அமைத்து விசாரணை செய்யப்போவதாகவும், ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை தனி குழு அமைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள சுமார் 50,000 விவசாயிகளுக்கு உதவும் வகையில், இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை டஃபே நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதனை உழவன் செயலி வழியாக பதிவு செய்துகொள்ளலாம்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,400 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைப்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,96,427 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு முதன்முறையாக 2 லட்சத்திற்கும் குறைவாக கொரோனா தொற்று பதிவாகியிருக்கிறது.
கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் – பி மருந்து தமிழகத்துக்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா பரவலின் 3-வது அலை குழந்தைகளை அதிகளவு தாக்கும் என்று வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்த தகவலுக்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஜுன் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.