Tamil News Highlights : வலிமை என்ற வணிகப் பெயருடன் குறைந்த விலையில் சிமென்ட், சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக அரசின் டான்செம் நிறுவனம் குறைந்த விலையில் ‘வலிமை’ என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டுவரவுள்ள சிமென்ட்டை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்துவைக்கவுள்ளார். இதன் மூலம் வெளிச்சந்தையில் சிமென்ட் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்
தன்பாலின ஈர்ப்பாளரான மூத்த வழக்கறிஞர் சவுரப் கிர்பாலை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் நீதிபதியாகப் பதவியேற்கும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர் சவுரப் கிர்பால் இருப்பார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரம்
கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. மேயர், சேர்மன், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டை வரையறுப்பது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார், சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதில், ஆணையத்தின் செயலாளர் சுந்தரவல்லி, வார்டு மறுவரையறை ஆணைய செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மகளிர், பட்டியலினத்தவர்கள், பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
மாநில முதலமைச்சர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 15 மாநிலங்களின் முதலமைச்சர்கள், மாநிலங்களின் நிதி அமைச்சர்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டவர்களோடு ஆலோசனை மேற்கொண்டார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டார் நிர்மலா.
பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் லிட்டர் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை, தி.நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவின் குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் வரும் நிலையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவல் 15 பேர் உயிரிழந்துள்ளனர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை தேர்வுகளும் நேரடியாக நடைபெறும்.
ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராடி வரும் நிலையில் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு – சொந்த ஊரான தூத்துக்குடியில் உள்ள சூரப்பநாயக்கன் பட்டிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுகிறார்
பொறியியல் செமஸ்டர் மற்றும் செய்முறை தேர்வுகள் 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் 29ம் தேதி முதல் செய்முறை தேர்வும் டிசம்பர் 13ம் தேதி முதல் எழுத்துத் தேர்வு நடைபெறவிருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நேரடி தேர்வுக்கு தயாராக மாணவர்கள் அவகாசம் கேட்ட நிலையில் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து வகை கல்லூரிகளிலும் நேரடி முறையிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் உயர்கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா – சீனா இடையே போட்டிகள் இருக்கலாம் ஆனால், அது மோதலாக மாறிவிடக் கூடாது சீன அதிபர் ஜின்பிங் உடனான ஆலோசனையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
நாகர்கோவில் – திருவனந்தபுரம் (06426, 06427) இடையே செல்லும் சிறப்பு ரயில்கள் மற்றும் கொல்லம் – திருவனந்தபுரம் (06425) செல்லும் சிறப்பு ரயில் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை விமர்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 396.34 புள்ளிகள் சரிந்து 60,322.37 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 110.25 புள்ளிகள் சரிந்து 17,999.20 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கான திருமண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கு ரூ2000 லிருந்து ரூ3000 ஆகவும், பெண்களுக்கு ரூ 2000 லிருந்து ரூ5000 ஆக உயர்த்தி தமிழக அரசு சார்பில் அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 20 ஆம் தேதி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி பாமக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெரவள்ளூரில் ஒய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. நல்லம நாயுடு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
யானை வழித்தடங்களில் ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை செயல்படுத்தும் வரை ஆட்சியரை மாற்றக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை மற்றும் திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு, அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நவம்பர் 18ல் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு. அப்பகுதிகளுக்கு நவம்பர் 18ம் தேதி அன்று ரெட் அலெர்ட் தரப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் நீர் நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை என்றும் சத்தியத்திற்கு கட்டுப்பட்டே நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்கிறது என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
நாளை இந்தியாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக டி20 தொடரில் இருந்து விலகியதாக அவர் அறிவித்தார்.
தமிழக அரசின் மலிவு விலை சிமெண்ட்டை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தலைமை செயலகத்தில் வலிமை என்ற பெயரில் சிமெண்ட்டை அறிமுகப்படுத்தி விற்பனையை அவர் துவங்கி வைத்தார்.
ஒய்வு பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நேர்மைக்கு எடுத்துக்காட்டாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் நீதியை நிலை நாட்டியவர் நல்லம நாயுடு என்றும் முதல்வர் புகழாரம்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்துள்ளனர். சென்னை கீழ்பாக்கத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வின்செண்ட் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். மேலும், சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் சரவணனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது.
கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மாணவியின் வீட்டில் கைப்பற்றபட்ட கடிதத்தை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,865 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. தற்போது, 1,30,793 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 11,971 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 197 பேர் உயிரிழப்பு.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை காவல் அதிகாரியாக பணியாற்றிய நல்லமநாயுடு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவர், உதவி ஆய்வாளராக சேர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பி வரை சிறப்பாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதை இன்று நேரில் ஆய்வு செய்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
மும்பை விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடமிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 2 வாட்சுகளை பறிமுதல் செய்தது சுங்கத்துறை.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், இங்கு தொடர்ந்து 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வட தமிழகத்தில் நவம்பர் 17,18 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.