Tamil News Live : சென்னையில் 2-வது விமான நிலையம்?
சென்னையில் 2-வது விமான நிலையம் எப்போது அமைக்கப்படும் என்று மக்களவையில், அதிமுக எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, தமிழக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஆகிய 2 இடங்களை தெரிவு செய்ததாகவும், ஆனால் அதில் ஒன்றைகூட இதுவரை இறுதி செய்யவில்லை என்றும் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் பதிலளித்தார். இந்நிலையில், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள அண்ணா மற்றும் காமராஜர் முனையங்களை 2 ஆயிரத்து 467 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய பணிகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் மக்களைத் தேடி மருத்துவம்
இன்று காலை 10 மணியளவில்தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வீடு தேடி வாகனம் மூலம் மருத்துவ சேவை அளிக்க உள்ள இத்திட்டத்தின் தொடக்க விழாவில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், துறையின் முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி
டோக்யோ ஒலிம்பிக்கின் பாட்மிண்டன் மகளிர் பிரிவில் இஸ்ரேலின் போலிகர்போவை முதல் சுற்றில் எதிர்கொண்டார் இந்திய வீராங்கனை பிவி சிந்து. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய சிந்து, முதல் செட்டை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-10 என்ற கணக்கிலும் வென்று போலிகர்போவை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றார். மேலும், பெண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல்,10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா தோல்வி அடைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
அடிப்படை பொருட்கள் விலை உயர்வுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வே முக்கிய காரணம் என்று வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில, செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர்கள் பணியில் உள்ளூரை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்று கூறி சென்னை திருவல்லிக்கேணி கோயில் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. அரங்கன் பாதுகாப்பு மையம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50க்கு மேற்பட்டோர் பாதகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் பகுதியில் ஒரு குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு 3.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளயைடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நடைபெற்று வருவதாக விமர்சனம் செய்துள்ளார்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மாநிலம் முழுவதும் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் அறிவித்துள்ளார்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்புபவர்கள் http://www.tngasa.org மற்றும் http://www.tngasa.in என்ற இணையதளங்களில் நாளை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.
B.E., http://B.Tech., படிப்புகளில் சேருவதற்கும் நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. http://tneaonline.org இணையதளத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் அறிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி புறப்படுகிறார். நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார். பிரதமர் அலுவலக அழைப்பின் பேரிலேயே டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவைக் கண்டித்தும், மத்திய – மாநில அரசுகள் அதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும் அமமுக சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் ஆகஸ்ட் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளர் சந்திரமோகன்: “தமிழ்நாட்டில் பழமையான இடங்களை பராமரிப்பதற்கு தொல்லியல் ஆணையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது; விரைவில் அதற்கான அறிவிப்பு வர வாய்ப்புள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீர வசந்தராயர் மண்டபத்தின் புனரமைப்பு பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “காவிரி பாலம் கட்டி 48 ஆண்டுகள் ஆகிவிட்டது எனவே புதிய பாலம் கட்ட திட்டம் உள்ளது. அதே போல் திருச்சி நகரில் விரைவு சாலைக்கான திட்டமும் முன் மொழியப்பட்டுள்ளது. திருச்சியில், திருவெறும்பூர் சாலை, அல்லித்துறை சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படும். திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தால் கண்டிப்பாக அந்த ஊர்களை சேர்க்க மாட்டோம், மேலும் இது குறித்து முதல்வரிடம் கோரிக்கையை முன்வைப்போம்.” என்று கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி, மேரி கோம் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் டேபிள் டென்னிஸின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கணை மணிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார்.
கோவை, தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும், நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நிவாரண பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். ஜூலை 31 கடைசி தேதி என்ற நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில், யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளானது. இதில் அவருடன் சென்ற அவரது தோழி பவானி உயிரிந்தார். இந்த நிலையில், அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் யாஷிகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
79-வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியவர், ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 535 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
கடந்த ஆட்சியில் வழங்கிய இலவச முக கவசங்கள் தரமற்றவை என்றும் பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.