Tamil News Highlights : டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோவாக்சின் தடுப்பூசிதான், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் கோவாக்சின் வெளிநாட்டு உற்பத்திகள் அதிகமாகலாம் என கணிக்கப்படுகிறது. இந்த அனுமதி கிடைக்காமல் இருப்பதால் தற்போதைக்கு 15 - 16 நாடுகளில்தான் இந்த கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது. 50 நாடுகளில் பரிசீலனையிலேயே இருக்கிறது.
3-ம் பாலினத்தவருக்கு 3 மாதங்களில் தடுப்பூசி
மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு, தங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கொரொனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, மூன்றாம் பாலினத்தவருக்கு மூன்று மாதங்களில் தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்ய அரசிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதானி நிறுவன பெயர்ப்பலகையை அடித்து நொறுக்கிய சிவசேனா கட்சியினர்
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஜிவிகே குழுமத்தின்கீழ் அதானி நிறுவனம் கடந்த மாதம் ஏற்றது. இதற்கு மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தின் 74 சதவிகித உரிமையை வாங்கியதன் அடிப்படையில், சத்ரபதி சிவாஜி விமான நிலையம் என்ற பெயர்ப் பலகையை மாற்றி அதானி விமான நிலையம் எனப் பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த சிவசேனா கட்சியினர், பெயர்ப்பலகையை அடித்து நொறுக்கினர்.
ஹாக்கி: அடுத்தடுத்து 2 கோல் அடித்த இந்திய அணி
டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தியா - பெல்ஜியம் அணிகள் இடையிலான ஆடவர் ஹாக்கி அரையிறுதியில், போட்டி தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே கோல் அடித்தது பெல்ஜியம். மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் பெல்ஜியம் முதல் கோல் அடித்தது இந்தியாவுக்குப் பின்னடைவாக இருந்தது. எனினும், விடாமல் துரத்திய இந்தியாவுக்கு பெல்ஜியம் வீரர் செய்த தவற்றால் பென்லாட்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை சிறப்பாகப் பயன்படுத்திய இந்திய அணி சில நிமிடங்களிலேயே இந்தியாவுக்கு "பேக் ஷாட்" மூலம் 2-வது கோலை பதிவு செய்தார் மண்தீப்சிங். இதனையடுத்து முதல் கால் ஆட்டத்தில் (முதல் 15 நிமிடங்கள்) இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:40 (IST) 03 Aug 2021தமிழில் அர்ச்சனை குறித்த பதாகையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் விவரம் குறித்த பதாகையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
- 20:14 (IST) 03 Aug 2021RTE மூலம் மாணவர்களை சேர்க்க ஆக்ஸ்ட் 13ம் தேதி வரை அவகாசம்
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் (RTE) மாணவர்களை சேர்க்க ஆக்ஸ்ட் 13ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரிக் கல்வி இயக்குனரகத்தின் கோரிக்கையை ஏற்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 19:56 (IST) 03 Aug 2021தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,908 பேருக்கு கொரோனா; 29 உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் 29 பேர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர்.
- 19:19 (IST) 03 Aug 2021பி.வி.சிந்துவுக்கு பாராட்டு விழா
டெல்லியில் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிஷண் ரெட்டி, அனுராக் தாகூர் ஆகியோர் பங்கேற்றனர்.
- 19:14 (IST) 03 Aug 2021அமித் ஷா - சரத் பவார் சந்திப்பு
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா வை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தார். கரும்பு மற்றும் சர்க்கரை விலை குறித்து பேசியதாக ட்வீட் செய்துள்ளார்.
- 19:11 (IST) 03 Aug 2021பி.இ., பி.டெக் படிப்புக்கு இதுவரை 1.04 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
பி.இ., பி.டெக் படிப்புக்கு இதுவரை 1.04 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 26-ம் தேதி ஆன்லைன் பதிவு தொடங்கிய நிலையில் கடந்த 8 நாட்களில் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது
- 18:55 (IST) 03 Aug 2021கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,676 பேருக்கு கொரோனா பாதிப்பு - 148 பேர் உயிரிழப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23,676 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 18:32 (IST) 03 Aug 2021தமிழறிஞர் மறைமலை அடிகளார் பேரனுக்கு பணி நிரந்தரம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் பேரனான சிவக்குமாரின் பணியை நிரந்தரம்:செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- 18:12 (IST) 03 Aug 2021டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு - 4 பேர் உயிரிழப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 18:01 (IST) 03 Aug 2021மேகதாது பிரச்சனை; வடக்கிந்திய கம்பெனி பாஜக - கமலஹாசன் குற்றச்சாட்டு
மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும், கிழக்கிந்திய கம்பெனி போல் வடக்கில் வடக்கிந்திய கம்பெனி தயாராகி வருகிறது எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்
- 17:35 (IST) 03 Aug 2021ஒலிம்பிக் குண்டெறிதல் போட்டி - இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் குண்டெறிதல் போட்டியின் ஆடவர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தோல்வியை தழுவியுள்ளார். தகுதிச் சுற்றில் 13-வது இடம் பிடித்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேற்றம்
- 17:23 (IST) 03 Aug 2021பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கேளம்பாக்கம் பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை - சிவசங்கர் பாபா
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமின் கோரிய மனுவில், கேளம்பாக்கம் பள்ளிக்கும், தனக்கும்
தொடர்பில்லை. ஆன்மிகம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மட்டுமே அந்த பள்ளிக்கு செல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
- 17:21 (IST) 03 Aug 2021இயக்குநர் பா. ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய இடைக்கால தடை
ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒருவர் தனது கருத்தை வெளியிடு சுதந்திரம் இருக்கிறது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
- 17:16 (IST) 03 Aug 2021ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்று நாடு திரும்பிய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- 17:12 (IST) 03 Aug 2021அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி
அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. மேலும், தன் மீது பதியப்பட்ட வழக்கின் நகல் இன்றி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரிய நிலையில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- 17:09 (IST) 03 Aug 2021ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பிறகு 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி - தமிழக அரசு தகவல்
ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பிறகு, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 21 முதல் ஜூலை 6ம் தேதி வரை 1,59,30,132 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- 16:59 (IST) 03 Aug 2021ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பிறகு 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி - தமிழக அரசு தகவல்
ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பிறகு, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 21 முதல் ஜூலை 6ம் தேதி வரை 1,59,30,132 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- 16:00 (IST) 03 Aug 2021அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து புகழேந்தி வழக்கு; ஓபிஎஸ் - இபிஎஸ் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து புகழேந்தி தொடர்ந்த வழக்கு; வரும் 24ம் தேதி ஆஜராகுமாறு ஓபிஎஸ் - இபிஎஸ்-க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 15:24 (IST) 03 Aug 2021ஆகஸ்ட் 7-முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வெப்ப சலனம் காரணமாக நீலகிரி,கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது. மேலும் ஆக. 7-ந் தேதி முதல் தமிழக்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
- 15:22 (IST) 03 Aug 2021குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாததால், 6.39 கோடி பயனற்ற செலவீனம் என அறிவிப்பு
சிதம்பரம் பகுதியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாததால், 6.39 கோடி பயனற்ற செலவீனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கொள்ளிடம்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாமல் பணத்தை செலவு செய்தது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
- 15:21 (IST) 03 Aug 2021குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாததால், 6.39 கோடி பயனற்ற செலவீனம் என அறிவிப்பு
சிதம்பரம் பகுதியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாததால், 6.39 கோடி பயனற்ற செலவீனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கொள்ளிடம்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாமல் பணத்தை செலவு செய்தது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
- 14:33 (IST) 03 Aug 2021சிபிஎஸ்இ தேர்வு முடிவு : சென்னை மண்டலம் 3வது இடம்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 99.94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள சென்னை மண்டலம் 3வது இடம் பெற்றுள்ளது.
- 14:30 (IST) 03 Aug 2021ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த சட்டம் செய்துள்ள உயர்நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்றும், புதிய சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு எந்த தடையும் இல்லை என்றும் கூறியுள்ளது.
- 13:59 (IST) 03 Aug 2021மேகதாது அணை விவகாரத்தில் பாஜக இரட்டைவேடம்தான் போடுகிறது - கமல்ஹாசன்
மேகதாது அணை விவகாரத்தில் பாஜக இரட்டைவேடம்தான் போடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை குறிப்பிட்டார்.
- 13:32 (IST) 03 Aug 2021தமிழகம் வந்தது கோவாக்ஸின் தடுப்பூசிகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் குறைவாகவே உள்ளது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை. தமிழகம் வந்த கோவாக்ஸின் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
- 13:07 (IST) 03 Aug 2021நாட்டில் எந்த மாநிலத்தையும் பிரிக்கும் திட்டம் இல்லை
தமிழகம் உள்பட நாட்டில் எந்த மாநிலத்தையும் இரண்டாக பிரிக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் என்று மக்களவையில் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் கூறியுள்ளார்.
- 13:06 (IST) 03 Aug 2021மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் தான் போடுகிறது - கமல் ஹாசன்
இந்தியாவில் அதிக இரட்டை வேடம் ஏற்றவன் நான். இப்படி இரட்டை வேடம் போடும் நபர்கலை நான் வெகுவாக அறிவேன் என்று மேகதாது விவகாரம் குறித்து நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
- 12:25 (IST) 03 Aug 2021முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு தடை
மீண்டும் அதிகமாகும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகின்ற 8ம் தேதி வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று அறிவித்துள்ளது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.
- 12:23 (IST) 03 Aug 2021முறைப்படி அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை - துரை முருகன்
சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்திறப்புக்கு எங்களுக்கு அழைப்பிதழ் மட்டுமே வந்தது. ஆனால் கலைஞர் படத்திறப்பு நிகழ்ச்சிக்காக முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என்று கேட்டார். ஆனாலும் அவர் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் துரை முருகன் அறிவித்துள்ளார்.
- 11:57 (IST) 03 Aug 2021இன்று வெளியாகும் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இன்று சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11:53 (IST) 03 Aug 2021ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சிகள் சைக்கிள் பேரணி
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடர்ந்து எதிர்க்கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சிகள் சைக்கிள் பேரணி நடைபெற்றுள்ளது. திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சைக்கிளில் பேரணி மேற்கொண்டுள்ளனர்.
- 11:48 (IST) 03 Aug 2021மகளிர் இலவச பயணம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து தவறானது - அமைச்சர்
சாதாரண நகரப் பேருந்துகளில் இதுவரை 6 கோடியே 53 லட்சம் மகளிர் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று ஓ.பி.எஸ்க்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
- 11:16 (IST) 03 Aug 2021தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மலர்தூவி மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- 10:15 (IST) 03 Aug 2021அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்
அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 09:43 (IST) 03 Aug 2021கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள ஏற்பாடு
சென்னையில் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் இருக்க, துணை ஆணையர் தலைமையில் வார் ரூம் ஒன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 30 காவலர்கள் இந்த வார்ரூமில் செயல்படத் துவங்கியுள்ளனர்.
- 09:41 (IST) 03 Aug 2021பெகாசஸ் விவகாரத்தில் உண்மையை கண்டுபிடிக்கவேண்டும்
பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்கவேண்டும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
- 09:39 (IST) 03 Aug 2021ஓபிசி பணியிடங்கள் 55% காலியாக உள்ளன
மத்திய பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் 55 சதவிகிதம் காலியாக இருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.