Latest Tamil News Live : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகக் கமலா ஹாரிஸ் இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணிக்கு அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கின்றனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு முன்பு இன்று முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதற்கு உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை பைடனுக்கும் கமலாவுக்கும் தெரிவித்து வருகின்றனர்.
‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் மத பிரசார கூட்டங்களை நடத்தி வரும் கிறிஸ்தவ மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்படத் தமிழகத்தில் 28 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Tamil News : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு தற்காலிகமாக கூடுதல் பொறுப்பாக ஆயுஷ் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வரும் திரு. ஸ்ரீபாத் நாயக். விபத்தில் காயம் அடைந்து கோவாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குடியரசுத் தலைவர் அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்ரீபாத் நாயக் முழுமையாக குணமடைந்து அமைச்சகம் தொடர்பான பணிகளுக்கு திரும்பும் வரை கிரண் ரிஜிஜு ஆயுஷ் துறையை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால் சசிகலா சிறை மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகள் இருப்பதால் கோவிட்- 19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில், தற்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோயில் சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் சிலைகள் மாயமாகியுள்ளது என்பது குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிராக்டர் பேரணியை அனுமதிக்க டெல்லி காவல்துறைக்கே அதிகாரம் உள்ளதால், இதில் தலையிட போவதில்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் டிராக்டர் பேரணிக்கு எதிரான மனுவை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி, தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைக்காததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
"நான் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். நான் எம்எல்ஏவாக மக்களால் தேர்தெடுக்கப்பட்டவன் தானே. முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்" என முதலமைச்சர் பழனிசாமி ஸ்ரீபெரம்பத்தூர் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
சென்ட்ரல் வெஸ்டா திட்டத்தில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இந்த காந்தி சிலை அருகே நடத்துவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதையொட்டி நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, தன்னுடைய முயற்சியால் உலக நாடுகள் அமெரிக்காவை மீண்டும் மதிக்கத் தொடங்கியிருப்பதாகவும் கொரோனா தொற்றுக்கு மிகக் குறைந்த காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாகப் பெருமிதம் கொண்டார். மேலும், புதிதாகப் பதவியேற்கவுள்ள நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கட்டும் என்றும் தெரிவித்தார்.
குறுகிய இடைவெளியில் வருகிற 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூடி ஆலோசிக்க இருக்கிறார்கள். 22-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights