News Highlights: உடல்நலப் பிரச்னையால் சசிகலா விடுதலை பாதிக்காது

சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

By: Jan 21, 2021, 7:35:24 AM

Latest Tamil News Live : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகக் கமலா ஹாரிஸ் இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணிக்கு அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கின்றனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு முன்பு இன்று முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதற்கு உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை பைடனுக்கும் கமலாவுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் மத பிரசார கூட்டங்களை நடத்தி வரும் கிறிஸ்தவ மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்படத் தமிழகத்தில் 28 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Live Blog
Tamil News : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.
21:51 (IST)20 Jan 2021
நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை

புது தில்லியில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக இன்று நடைபெற்ற பத்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததையடுத்து அடுத்த கட்டமாக நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

21:46 (IST)20 Jan 2021
நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார் ஜோ பைடன்

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்பதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார் ஜோ பைடன்

21:29 (IST)20 Jan 2021
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் எந்தவொரு பிரச்சினை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

20:27 (IST)20 Jan 2021
கிரண் ரிஜிஜுவுக்கு தற்காலிகமாக கூடுதல் பொறுப்பாக ஆயுஷ் துறை ஒதுக்கப்பட்டுள்ளது

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு தற்காலிகமாக கூடுதல் பொறுப்பாக ஆயுஷ் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வரும் திரு. ஸ்ரீபாத் நாயக். விபத்தில் காயம் அடைந்து கோவாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குடியரசுத் தலைவர் அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்ரீபாத் நாயக் முழுமையாக குணமடைந்து அமைச்சகம் தொடர்பான பணிகளுக்கு திரும்பும் வரை கிரண் ரிஜிஜு ஆயுஷ் துறையை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

19:39 (IST)20 Jan 2021
சசிகலா விடுதலையில் மாற்றமில்லை - சசிகலா வழக்கறிஞர்

சசிகலா உடல்நலப் பாதிப்பால் விடுதலையில் மாற்றமில்லை என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்  தெரிவித்தார்.  

18:56 (IST)20 Jan 2021
6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் - மத்திய அமைச்சர்

வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என வேளாண் துறை அமைச்சர் தோமர் தெரிவித்ததாக  தகவல்வெளியாகியுள்ளன.  

18:55 (IST)20 Jan 2021
கொரோனா தடுப்பூசி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் கொரோனா தடுப்பூசி குறித்து புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்னும் சற்று நேரத்தில் நடைபெற இருக்கிறது.  

17:54 (IST)20 Jan 2021
வாட்ஸ் அப் தனி உரிமை கொள்கைகளில் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் - மத்திய அரசு

வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள தனி உரிமை கொள்கைகளில் மாற்றங்கள் செய்வது தொடர்பான அறிவிப்பை திரும்ப பெறுமாறு அந்த நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

17:53 (IST)20 Jan 2021
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இன்று 10வது கட்ட பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இன்று 10வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது.

17:40 (IST)20 Jan 2021
சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் அறிகுறிகள் உள்ளது

சசிகலா ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால் சசிகலா சிறை மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகள் இருப்பதால் கோவிட்- 19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

17:16 (IST)20 Jan 2021
சசிகலா தனியார் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டார். 

16:10 (IST)20 Jan 2021
பெங்களூர் சிறையில் சசிகலா திடீர் உடல்நலக்குறைவு

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில், தற்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

15:54 (IST)20 Jan 2021
தக்கவைக்கப்படும் சுரேஷ் ரெய்னா?

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னாவை தக்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15:35 (IST)20 Jan 2021
இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் சிலைகள் மாயமாகியுள்ளது என்பது குறித்து  4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14:45 (IST)20 Jan 2021
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

14:20 (IST)20 Jan 2021
மோட்டோரோலா எட்ஜ் S அறிமுகம்

மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் எட்ஜ் S மாடல் ஜனவரி 26-இல் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

14:15 (IST)20 Jan 2021
டிராக்டர் பேரணியில் தலையிட போவதில்லை - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டிராக்டர் பேரணியை அனுமதிக்க டெல்லி காவல்துறைக்கே அதிகாரம் உள்ளதால், இதில் தலையிட போவதில்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் டிராக்டர் பேரணிக்கு எதிரான மனுவை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

14:12 (IST)20 Jan 2021
ஹர்பஜன் சிங் அதிரடி ட்விட்

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வந்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங், சென்னைக்காக விளையாடியது சிறந்த அனுபவமாக உள்ளது அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். 

13:33 (IST)20 Jan 2021
கமல்ஹாசன் வருவதில் சிக்கல் இல்லை - கே.எஸ்.அழகிரி

கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

13:31 (IST)20 Jan 2021
சசிகலா திருந்தி வந்தால் நல்லது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா வரும் 27-ந் தேதி விடுதலையாக உள்ள நிலையில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது திருந்தி வந்தால் நல்லது என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

13:29 (IST)20 Jan 2021
உதயநிதி ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை - முதலமைச்சர் பழனிசாமி

பெண்களை வணங்கும் தமிழகத்தில், உதயநிதி ஸ்டாலின் பெண்ணை இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

13:28 (IST)20 Jan 2021
நடராஜனுக்கு இடம் இல்லை - ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி, தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைக்காததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

13:25 (IST)20 Jan 2021
பாமக தலைவர் ஜி.கே.மணி போராட்ட அறிவிப்பு

வன்னியர் இடஒதுக்கீடு கோரி, வரும் 29ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

13:24 (IST)20 Jan 2021
ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்

ஜனவரி 27ஆம் தேதிக்கு பிறகும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும் என தெரிவித்துள்ள முதல்வர் பழனிச்சாமி சசிகலா விடுதலைக்கு பின் ஆட்சி இருக்காது என கூறிய ஸ்டாலினுக்கு பதில் கொடுத்துள்ளார்.

12:23 (IST)20 Jan 2021
நானும் தடுப்பூசிப் போட்டுக்கொள்கிறேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

"ஒரு மருத்துவராக நாளை மறுநாள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உள்ளேன். தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த தடுப்பூசி போட்டுக் கொள்வேன்" என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

11:48 (IST)20 Jan 2021
நான் எம்எல்ஏவாக மக்களால் தேர்தெடுக்கப்பட்டவன் தானே - தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர்

"நான் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். நான் எம்எல்ஏவாக மக்களால் தேர்தெடுக்கப்பட்டவன் தானே. முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்" என முதலமைச்சர் பழனிசாமி ஸ்ரீபெரம்பத்தூர் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

11:09 (IST)20 Jan 2021
தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6,94,845. மேலும் தமிழகத்திலேயே குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகச் சென்னை துறைமுகம் இருக்கிறது. இங்கு 1,76,272 வாக்காளர்கள் உள்ளனர்.

10:41 (IST)20 Jan 2021
ரூ.2,691 கோடி நிதியுதவியுடன் பிரதமரின் வீட்டுவசதி திட்டம் இன்று விடுவிப்பு

பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிக்கான நிதியுதவியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க இருக்கிறார்.

10:24 (IST)20 Jan 2021
உயர்நிலைப் பள்ளிகளாக மாறும் பள்ளிகள்

35 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் நடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.

10:19 (IST)20 Jan 2021
நாடாளுமன்ற வளாக காந்தி சிலை அகற்றப்பட்டது

சென்ட்ரல் வெஸ்டா திட்டத்தில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இந்த காந்தி சிலை அருகே நடத்துவது குறிப்பிடத்தக்கது.

10:10 (IST)20 Jan 2021
புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துகள் - டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதையொட்டி நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, தன்னுடைய முயற்சியால் உலக நாடுகள் அமெரிக்காவை மீண்டும் மதிக்கத் தொடங்கியிருப்பதாகவும் கொரோனா தொற்றுக்கு மிகக் குறைந்த காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாகப் பெருமிதம் கொண்டார்.  மேலும், புதிதாகப் பதவியேற்கவுள்ள நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கட்டும் என்றும் தெரிவித்தார்.

News In Tamil : ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

குறுகிய இடைவெளியில் வருகிற 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூடி ஆலோசிக்க இருக்கிறார்கள். 22-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Web Title:Tamil news today live tamil nadu politics america joe biden corona eps stalin farmers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X