Tamil news : கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாமில் வழக்கத்தைவிடக் கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இன்று, கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2-ம் தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் தவறாமல் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஆர்.எம்.கதிரேசன், கல்வி துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தர். இந்நிலையில், அவரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார். இதற்கான கடிதத்தை ஆளுநரிடம் இருந்து கதிரேசன் பெற்றுக் கொண்டார். கதிரேசன் பதவியேற்ற நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் துணை வேந்தர் பதவியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 14-ஆவது சீசன் தொடரில், கோப்பையை கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐபிஎஸ் தலைவர் பிரஜேஷ் பாட்டீல், சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சிஎஸ்கே வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் கலந்து கொண்ட இந்த விழாவில், இன்னும் பல தொடர்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் விலை- ரூ.101.40-க்கும் டீசல் விலை- ரூ.91.43-க்கும் செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: திமுக அரசு, மீனவர்கள் நலனில் பெரிதும் அக்கறைக் கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது. தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இடர்களைக் களைய சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் குழந்தைகள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாட '1098' என்ற இலவச அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். “உதவிகளுக்கு '89033 31098' என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகயில் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா பேட்டி: வெள்ளம் பாதிப்பு குறித்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த பின்பு அறிக்கை முழுமையாக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார்.
தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் அடுத்த 3 தினங்களில் மழையின் தீவிரம் குறைந்து, பிறகு மீண்டும் வலுப்பெறும், நவம்பர் 24, 25 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, ரிப்பன் மாளிகையில் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழு மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், சென்னை மாநகராட்சியில் வெள்ளை பாதிப்பு குறித்து வைக்கப்பட்டு உள்ள புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
திருட்டுக்கும்பலால் கொலை செய்யப்பட்ட திருச்சி, நவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் உடல், 30 குண்டுகள் முழங்க காவல் துறையின் மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை முழுவதும் உள்ள மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை; தவறான செயல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்ற கோணத்தில் இந்த சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்லது.
விபச்சாரத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர்கள் இருவர் வீட்டில் கடந்தவாரம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.
காற்று மாசு மோசமானதால் மறு உத்தரவு வரும் வரை டெல்லியில் பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என டெல்லி கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்களில் பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி 11.69 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு வந்துள்ள மத்திய அரசின் குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில அரசின் உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
சென்னை ஐ.ஐ.டியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டிருக்கிறது; இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 29ஆம் தேதி திட்டமிட்டபடி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என டெல்லியில் கூடிய விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்த நிலையிலும், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்துவதில் திட்டவட்டமாக உள்ளனர்.
இயக்குனராக என்னால் நடிகர் சூர்யாவுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். 'ஜெய் பீம்' திரைப்படத்தில் நடிகர் சூர்யா பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே நோக்கமாக கொண்டிருந்தார் என அந்த இயக்குனர் ஞானவேல் கூறியுள்ளார்
தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்துறை இணை செயலாளா் ராஜீவ் சா்மா தலைமையிலான குழுவினர் தமிழகம் வந்தடைந்தனர். அவர்கள் தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 நாட்கள் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரியில் நாளையும், நாகை, திருவாருர், தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டையில் நாளை மறு நாளும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்
சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை வந்தடைந்தார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை தலைமை பொறுப்பு நீதிபதியாக பதவியேற்க உள்ளார்
கொலை செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் 6 பேரை பிடித்து வைத்துள்ளதாக சக காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சக காவலர்கள் வருவதற்குள் பூமிநாதனை கொலை செய்துவிட்டு திருடர்கள் தப்பித்தனர்.
தற்போது, ஆடு திருடர்கள் பட்டியலில் இருந்த 2 நபர்களின் தொலைபேசி எண்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை விரைந்துள்ளனர்
புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி மற்றும் காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தாக்கல் செய்ய திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட கல்லூரி முதல்வர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள கோழிப் பண்ணைக்குள் வெள்ளநீர் புகுந்ததால் சுமார் 3,500 கோழிகள் உயிரிழந்தன.
'கீரனூர் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையில்தான் காவல்துறையினர் பணியாற்றுகிறார்கள்' என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
வருகின்ற 24-ம் தேதி, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
கனமழையாலும், ஆந்திராவில் பெய்துவரும் தொடர் மழையாலும், பாலாறு இதுவரை காணாத வெள்ளப்பெருக்கை கண்டு வருகிறது. இதன் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தாக்கத்தால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.